குளுக்கோமா எனப்படுவது கண்ணில் உள்ள பார்வை நரம்பு பாதிக்கப்படும் ஒரு நிலையாகும். கண்ணினுள் உள்ள அழுத்தம் (Eye pressure) அதிகரிப்பது இந்நரம்பு பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாகும்.
பிரதானமாக இரண்டுவகையான குளுக்கோமா உள்ளது
- சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Closed angle glaucoma)
- படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா. (Open angle glaucoma)
சடுதியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கூடுதலாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்படுகின்றது. இது ஒரு அவசர சிகிச்சை பெறவேண்டிய நிலையாகும். இந்நிலையானது ஏற்படும் பட்சத்தில் ஒருவர் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். தவறும் பட்சத்தில் நிரந்தரமான பார்வை இழப்பு ஏற்பட நேரிடும்.
இதன் அறிகுறிகளாவன
- கண்ணில் சடுதியாக நோவு ஏற்படல்.
- கண் சிவந்து காணப்படல்
- பார்வை குறைவடைந்து போதல்
எனவே மேற்படி அறிகுறிகள் சடுதியாக ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில் அவர் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும். படிப்படியாக கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் குளுக்கோமா கண்ணில் நோவு எதனையும் ஏற்படுத்துவதில்லை. படிப்படியாக கண் பார்வை குறைவடைந்து செல்லும் ( சுற்றையல் பார்வை குறைவடைந்து செல்லும்).
எனவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் சலரோக நோயுடையவர்களும் பரம்பரையில் குளுக்கோமா உடையவர்களும் தவறாது வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும். கண்ணில் அழுத்தம் உள்ளவர்கள் வைத்தயரின் ஆலோசனைப்படி கண் மருந்துகளை தொடர்ந்து பாவிப்பதன் மூலம் கண்களில் மேலும் அழுத்தம் அதிகரிப்பதைத் தடுத்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Dr.இ.பரமேஸ்வரன்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ். போதனா வைத்தியசாலை.