ஒரு தாய் எத்தனையோ சிரமங்களுடன், தனது வயிற்றில் ஒன்பது மாதமாகச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொள்கிறாள். அவளுடைய எதிர்பார்ப்பு தனது குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாக வளர்ப்பதே. அதற்காக அந்தக் குழந்தையை கிருமித் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாகும்.
அண்மைக் காலங்களில், எமது வைத்தியசாலையில் நோய்க்கிருமித் தொற்றுக்களால் பாதிக்கப்படும் பச்சிளங்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனைத் தடுப்பதற்கு, பெற்றோர் உறவினராகிய உங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. அதற்காக நீங்கள் கீழ்க் குறிப்பிடப்படுபவை தொடர்பாக அக்கறை காட்டிச் செயற்பட வேண்டும்.
- பிள்ளை பெற்ற தாயையும், அவரது குழந்தையையையும் பார்ப்பதற்கு உறவினர்கள் பெரிய அளவில் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனேனில் இட நெருக்கடியுள்ள விடுதிகளில் அதிகமானவர்கள் கூடும் போது பச்சிளங்குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே வைத்தியசாலையில் உள்ள பாஸ் நடைமுறையை மதித்து ஒரு தாயை பார்ப்பதற்கு ஒரு தடவையில் இருவர் மட்டுமே செல்லுங்கள்.
- பிள்ளையும், தாயும் உறங்கும் கட்டிலில் உட்காருவதையோ,பொருள்களை வைப்பதையோ தவிர்க்கவேண்டும்.
- பிறந்த குழந்தையைத் தொட முன்னர் கைகளை நன்றாக சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும்.
- சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதைத் இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளவும்.
- சளி, காய்ச்சல் போன்ற நோயுள்ளோர் மகப்பேற்று விடுதிக்க வருவதை தவிருங்கள், அப்படியானவர்கள் வருவதாயினும் வாயையும், மூக்கையும் கைக்குட்டையாலோ, அல்லது முகக் கவசத்தாலோ (மாஸ்க்) மறைக்க வேண்டும்.
- பிள்ளையைப் பெற்றெடுத்த தாய் மலசலகூடத்தைப் பயன்படுத்திய பின்னர் சவர்க்காரம் கொண்டு கைகளை நன்றாகக் கழுவவேண்டும்.
- தாயும் குழந்தையும் அணியும் ஆடைகள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக பிறந்த குழந்தைக்கு கட்டும் “நப்கின்” துண்டுகள் புதியவையாகவும், தோய்த்து உலர்த்தியவையாகவும் இருக்க வேண்டும்.
- குழந்தையும், தாயும் குளித்து தூய்மையாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்து 24 மணித்தியாலத்தின் பின்னர் குளிப்பாட்டலாம். குழந்தையின் “நப்கின்” ஈரமானவுடன் மாற்றுதல் வேண்டும்.
- குழந்தையின் கண்களையும், தொப்புள் கொடிபகுதியையும் எப்போதும் துப்பரவாக தை்திருத்தல் வேண்டும். தொப்புள் கொடி பகுதியில் அழுக்கு, பிள்ளையின் மலம் என்பன பட்டிருப்பின் உடனடியாக சவர்க்காரமும் நீரும் கொண்டு கழுவித் தூய துணியினால் துடைக்க வேண்டும். தொப்புள் கொடிப் பகுதியை நப்கினால் மூடி மறைக்கக் கூடாது.
- தாய் எப்போதும் தாய்ப்பாலூட்டலையே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுண்டு. தாய்ப் பாலைவிட மேலதிகமாக, நீரோ வேறுபானங்களோ வழங்கக்கூடாது.
- தாய் ஆரோக்கியமாக இருப்பதுடன், போசாக்கான உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்றவுடன் அதிளவுநீர், சத்துணவு என்பன தேவைப்படும்.
- குழந்தையை எந்த நேரமும் முடிந்தளவுக்கு தாய் அரவணைத்து வைத்திருப்பதன் மூலம் கிருமித் தொற்றுக்கான எதிர்ப்புச் சக்தியை வழங்கக் கூடியதாக இருக்கும்.
- வைத்தியசாலையில் மட்டுமல்லாது, வீட்டிலும் தாயும் குழந்தையும் இருக்கும் அறை தூய்மையாக இருப்பதுடன், அநாவசியமாக மற்றவர்கள் குழந்தையை தூக்குவதை தவிர்க்கவும், பிறந்த குழந்தையைத் தூக்க முன்னர் எப்போதும் கைகைளக் கழுவ வேண்டும்.
ந.ஸ்ரீசரவணபவானந்தன்
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ். போதனா வைத்தியசாலை.