உயிர் வாழ்வதற்கு உணவு உடை, உறையுள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது குருதி. ஒரு உயிர் கலங்கள், இழையங்களால் ஆன ஒரு அமைப்பு இவை ஒவ்வொன்றிற்கும் தேவையான ஓட்சிசன், விற்றமின்கள், கணியுப்புகள், மற்றும் போசணை கூறுகளை அணைத்தையும் எடுத்துச் செல்வதில் அல்லது கடத்துவதில் கருவியாக அமைவது இந்த குருதியாகும்.
குருதியானது திரவவிழையம் கலங்களைக் கொண்ட ஒரு பாயமாகும் திரவவிழையமானது போசணைப் பதார்த்தங்களை உள்ளடக்கியது. இவற்றின் மூலம் தான் மனித உடலில் அமைந்திருக்கும் உடல் இழையங்களுக்கு தேவையான விற்றமின்கள், கனியுப்புகள், மற்றும் போசணைப் பதார்த்தங்கள் விநியோகிக்கப்படுகின்றன. நாம் உண்ணும் உணவுப் பதார்த்தங்கள் சமிபாட்டுத் தொகுதியில் அகத்துறுஞ்சப்பட்டு குருதியில் சேர்க்கப்படுகின்றது. இவ்வாறு குருதியில் சேரும் போசணை பதார்த்தங்கள் தான் குருதியினால் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
குருதியின் அடுத்த கூறாக குருதிக்கலங்கள் காணப்படுகின்றது. இதில் செங்குருதிக்கலன், வெண்குருதிக்கலன், சிறு தட்டு என மூன்று வகையான கலங்களை உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான தொழிற்பாடுகளை ஆற்றுகின்றன அத்துடன் வேறுபட்ட வாழ்க்கை காலத்தையும் கொண்டுள்ளது.
செங்குருதிக் கலம் (Red cells) உடல் தொழிற்பாட்டிற்கு தேவையான ஈமோகுளோபினை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஈமோகுளோபினின் வீதத்தை தீர்மானிப்பது இச் செங்குருதிக் கலங்களாகும். இதன் உற்பத்தி குறைவடையும் போது ஈமோகுளோபினின் வீதமும் குறைவடையும் இதனால் குருதிச்சோகை (Anasmia) போன்ற நோய்கள் வரும். உணவு மற்றும் மருந்தகள் மூலம் ஈமோகுளோபினை அதிகரிக்க முடியாது விடினும் நிவர்த்தி செய்வதற்கு அல்லது சிகிச்சை அளிப்பதற்கு தன்னார்வ குருதிக் கொடையாளர்களின் மூலம் பெறப்பட்ட குருதி பரிசோதனைகளின் பின் இவ்வாறான நோயாளர்களுக்கு குருதிமாற்றீடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இது குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை செய்யப்படுகின்றது. குருதிச் சோகை ஏற்படுதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சிகிச்சை அளிப்பதற்கு குருதியே தேவைப்படுகின்றது. இது இரத்த வங்கியில் போதியளவில் சேமிப்பில் இருந்தால்தான் இவ்வாறான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
அடுத்து வெண்குழியமானது நோய்க்கிருமிகளுக்கு கெதிராக போராடும் கலமாகும். உடலுக்கு தேவையான எதிர்ப்பு சத்தியை வழங்கும் தொழிலை செய்கின்றது. உதாரணமாக எமக்கு தடிமன் அல்லது பிடிசுரம் ஏற்படுகின்ற போது எந்த விதமான மருந்துகளும் உள்ளெடுக்காமல் தானாகவே குணமடைகின்றது. இது ஒருவகையான வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்ற நோயாகும். வைரஸ்ற்கு பொதுவாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறான நோய்கள் ஏற்படும் போது எமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்தி காரணமாகவே குணமடைகின்றது.
அடுத்து குருதியின் முக்கிய கலமாக குருதிச் சிறுதட்டு காணப்படுகின்றது. இதன் வாழ்க்கை காலம் 5 நாட்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவை சிறி தட்டுருவான கலங்கள் ஆகும். எமக்கு விபத்துக்கள் மூலம் காயம் ஏற்படுகின்ற போது காயத்தின் ஊடாக தொடர்ச்சியான குருதி வெளியேறுவதை தடுக்கின்ற வேலையை இச் சிறுதட்டு செய்கின்றது. காயம் ஏற்பட்ட பகுதியில் பைபிரின்னோஜன் எனும் புரதத்தை கொண்டு பைபிரின் எனும் வலையை உருவாக்கி தொடர்ச்சியான குருதிக் கலங்களின் வெளியேற்றத்தை ஒரு வலையின் தொழிற்பாட்டின் மூலம் தடைசெய்கின்றது.
இது குருதியில் அண்ணளவாக 150,000 – 450,000 எண்ணிக்கையில் காணப்படுகின்றது. இதன் எண்ணிக்கை பல காரணங்களினால் குறைவடைகின்றது. உதாரணமாக டெங்கு காய்ச்சல் ஏற்படுகின்ற போது சிறுதட்டுகளின் எண்ணிக்கை குறைவடைய வாய்ப்புள்ளது. டெங்கு ஒரு வகை வைரஸினால் ஏற்படுகின்ற ஒரு நோயாகும் இதற்கும் இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதற்கும் சிகிச்சை அழிப்பதற்கு குருதி இன்றியமையாதாகும். அதாவது டெங்கு தாக்கிய ஒருவரின் சிறுதட்டு குருதிப் பரிசோதனையின் மூலம் அறியப்பட்டு அசாதாரண நிலைமையை அடையும் போது வைத்திய நிபுணரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தன்னார்வ குருதிக் கொடையாளின் குருதி சிறுதட்டு பெறப்பட்டு குறிப்பிட்ட நோயாளிக்கு வெளியிலிருந்து சிறு தட்டு ஏற்றப்படும் சிகிச்சை முறை தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. சிறுதட்டு இன்னும் பல காரணங்களிலும் குருதியில் குறைவடைவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது புற்று நோயாளர்களிற்கும் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது. அவர்களுக்கும் சிறுதட்டு குருதிக் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது. இவ்வாறு குருதிக் கொடையாளர்களிடமிருந்து சிறுதட்டு பெறப்படும் பொறிமுறையானது Apharens என அழைக்கப்படுகின்றது. இதன் பொறிமுறையினூடாக 13 இற்கும் மேற்பட்ட குருதியின் கூறுகளை பிரித்தெடுத்து நோயாளர்களுக்கு வழங்கலாம். யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இரத்த வங்கியில் சிறுதட்டு குருதிக் கொடையாளர்களிடமிருந்து பிரித்தெடுக்கும் நடைமுறையும், நோயாளர்களுக்கு Plasmaphess செய்யும் பொறிமுறை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் குருதி மாற்று பிரயோக சேவை நிலையத்தில் ஏனைய பொறிமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த காலங்களில் யாழ்ப்பாண இரத்த வங்கியில் 100 இற்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்களிடம் இருந்து 250 தடவை Aphanesis மூலம் குருதிச் சிறுதட்டு பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு குருதிச் சிறுதட்டை வழங்கியுள்ளோம். தொடர்ந்து வழங்கிவருகின்றோம். இந்த பொறிமுறைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் Bag பெறுமதி கூடியது அண்ணளவாக ஒரு தடவை Aphanesis செய்ய ரூபா 25000.00 செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தியாகம் நிறைந்த குருதிக்கொடையாளர்கள் ஒத்துழைப்பு முக்கியமானது.
அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இதற்கான சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும். இதை யாரும் உணர்ந்து கொள்வது இல்லை. இந்த காலத்தில் சாதரணமாக இரத்தானம் செய்வதற்கே அச்சப்படும் நேரத்தில் சிறுதட்டை வழங்குவதற்கு முன்வருகின்ற குருதிக் கொடையாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஒரு பொறிமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 72 நிமிடங்கள் குறிப்பிட்ட குருதிக் கொடையாளி Apharss இயந்திரத்துடன் நேரத்தை கழிக்க வேண்டியுள்ளது. இது யாருக்கும் தெரிவதில்லை.
ஆகவே இவ்வாறானவர்களை நாம் மதிக்கும் போதுதான் மேலும் பல குருதிக்கொடையாளர்கள் உருவாகி இவ்வாறான மருத்துவ சேவையை மக்களுக்கு வழங்க முடியும். இவற்றை வாசிக்கின்ற போது குருதியின்றி அசையாது உயிர் என்ற உணர்வு ஏற்படுகின்றதல்லவா??
நன்றி
த.ரவினதாஸ்
பொது சுகாதார பரிசோதகர்.
பிராந்திய இரத்த நிலையம்
யாழ் போதனா வைத்தியசாலை