உயர வளர்ச்சிக் குறைபாடு – ஆலோசனைகளும் தீர்வுகளும்
- உயரவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் யாவை?
பிள்ளையொருவரின் உயரம் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக நீண்டகாலமாகப் போதுமானளவு சத்தான உணவுகளை உள்ளெடுக்காதவிடத்து (Chronic Malnutrition) உயரம் மற்றும் உடல் நிறை என்பன சீரற்ற விதத்தில் அதிகரிக்காது விடுகின்றன. இதேபோல் எந்தவோரு நீண்டகால நோய் ( உதாரணம் சிறுநீரக பிரச்சினைகள், சமிபாட்டுத் தொகுதி நோய்கள், இருதய நோய்கள்) இருக்கும்போது சிறுவர்களின் உயரவளர்ச்சி பாதிப்படைய நேரிடுகின்றது. பெற்றோர் உயரம் குன்றி இருக்கும்போது பிள்ளைகளின் உயரமும் குறைவாகவே இருக்கும். சில சிறுவர்கள் ஆரம்பத்தில்உயரம் குறைவானவர்களாகக் காணப்பட்டுக் காலப்போக்கில் சாதாரண உயரத்தை அடைவார்கள். ( Constitiutomal delay) இறுதியாக அகஞ்சுரக்கும் தொகுதிப் பிரச்சினைகளும் ( ஹோர்மோன்கள்) மிக அரிதாக இதற்குக் காரணமாக இருக்கலாம். - உயர வளர்ச்சி குறைவாக இருக்கின்றதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்??
சிறுபி்ளையொருவரின் உயர வளர்ச்சியானது அவரது ஆரோக்கிய பதிவேட்டு வரைவில் ( Child Health Record) குறைவாகக் காணப்படும் போது வைத்திய ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
சிறுபிள்ளையொருவரின் உயரமானது அவரது வகுப்பு மாணவர்களின் சராசரி உயரத்துடன் ஒப்பிடும்போது குறைவாகக் காணப்படும் போது அதனைக் கண்டறிந்து கொள்வது மிக அவசியமாகும். ஏனெனில் எவ்வளவு விரைவாக உயர வளர்ச்சிக் குறைபாட்டை ( Short Staure) கண்டறிிக்றோமோ அதற்கேற்ப சிகிச்சை வழிமுறைகளை வழங்குவதன் மூலம் சிறுவர்கள் சாதாரண உயரத்தை அடைவதற்கு நாம் உதவ முடியும். எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பிள்ளைகளில் உயர வளர்ச்சிக் குறைபாடு இருக்கின்றதா என்பதை அவதானித்து தேவையேற்படின் அவர்கள் வைத்திய ஆலோசனை பெற உதவுதல் மிகவும் இன்றியயைாததாகும். - உயரவளர்ச்சிக் குறைபாடு இருக்கின்றதா என்பதை எவ்வாறு பரிசோதித்து அறிந்து கொள்ளமுடியும்?
உயர வளர்ச்சி குன்றிய சிறுவர்கள மேலதிகப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக குழந்தை நல மருத்துவ நிபுணர் (Paediatrician) ஒருவரிடமோ அல்லது அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர் ( Endocrinologist) ஒருவரிடமோ அனுப்பி வைத்தல் அவசியமாகும். தேவைப்படுகின்ற வினாக்களை வினவுவதன் மூலமாக உடற்பரிசோதனைகள் மூலமும் ( History Taking / Examination) காரணத்தை ஓரளவுக்கு ஊகித்துக் கொள்ள முடியும். பெற்றோர்களின் உயரத்தை அளவிடுவதன் மூலம் ( Mid Parental Height) பிள்ளையொருவரின் உயர வளர்ச்சி தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ள முடியும். இதே போல் தேவையான இரத்த மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் உயரம் குன்றி இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கொள்ள முடியும். பிள்ளையோருவரின் எலும்பு வயதை ( Bone age) கையில் மேற்கொள்ளப்படும் X -ray ( Non Dominant Hand X -ray) அறிந்து கொளவதும் மிக அவசியமாகும். - உயரவளர்ச்சிக் குறைபாட்டுக்கான தீர்வுகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள் பற்றிக் கூறுங்கள்
உயர வளர்ச்சி குன்றியிருப்பதற்கான காரணத்துக்கேற்ப சிகிச்சை வழிமுறைகளும் வேறுபடுகின்றன. ஹோர்மோன்களில் ஏற்படும் குறைபாடுகளும் இதற்க மிக அரிதாகக் காரணமாக அமைகின்றன. உதாரணமாக உயரவளர்ச்சி ஹோர்மோன்( Growth Hormone) குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான சிகிச்சையாக உயர வளர்ச்சி ஹோர்மோனை வழங்குவது அவசியமாகும். இதனை ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வேளையில் ஊசி மூலம் வழங்குவதனால் உயர வளர்ச்சி அதிகரிப்பதற்கு உதவிட முடியும். - இறுதியாக எமது மக்களுக்கு இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
எமது மக்கள் மத்தியில் உயர வளர்ச்சிக்குறைபாடு என்பது பற்றிய விழிப்புணர்வொன்றை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு இது சம்பந்தமான அறிவூட்டல் மிக அவசியமானதாகும். பிள்ளையொருவரின் உயர வளர்ச்சி குறைவாக இருப்பதை எவ்வளவு ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்கின்றோமோ அதற்கேற்பத் தகுந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் அந்தப் பிள்ளையானது சாதாரண உயர வளர்ச்சியை எதிர்காலத்தில் அடைந்திட உதவ முடியும்.
மருத்துவர். M. அரவிந்தன்.
நீரிழிவு, அகஞ்சுரக்கும் தொகுதியியல் விசேட மருத்துவ நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை.
யாழ்ப்பாணம்.
Posted in கட்டுரைகள்