அண்மையில் இலங்கையிலே ஊடகங்களில் வெளியாகும் மால்மாக்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவை தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை மறைப்பதுடன் சில பிழையான சுகாதார தகவல்களையும் வளங்குவனவாகவுள்ளதே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தால் குழந்தைகளிற்கு வழங்கக்கூடிய மிகவும் பாதுகாப்பானதும் அத்தியாவசியமானதுமான பால் தாய்ப்பாலே ஆகும். இதனாலேயே பிறந்து முதல் ஆறுமாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. ஆறு மாதத்திற்கு பின்னர் மற்றைய உணவுகளை அறிமுகப்படுத்தப்படும் போதும் தாய்ப்பாலை இயன்றளவு தொடர்ந்தும் வழங்குதல் அவசியம்.
செயற்கையான பால்மாவகைகளுடன் ஒப்பிடும் போது தாய்ப்பாலே சிறந்தது. தாய்ப்பால் குழந்தைக்குநோயெதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் ஒவ்வாமைகள் ஏற்படுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. மேலும் பல நோய்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுவதிலிருந்தும் ( உதாரணமாக ஆஸ்துமா, நீரிழிவு நோய், அதீத உடல் நிறை) பாதுகாக்கின்றது.
மேலும் குழந்தைக்கு தேவையான சகல ஊட்டச்சத்துக்கள் கொண்டிருப்பதுடன் குழந்தைக்கு இலகுவில் சமிபாடடைக்கூடியதும் தாய்ப்பாலே ஆகும். தாய்ப்பாலூட்டுவதலால் தாய்க்கும் குழந்தைகளுக்குமான இணைப்பு அதிகரிப்பதோடு இருவரது உளநலமும் விருத்தியடைகின்றது.
வளர்ந்தவர்களுக்கும் பால்மாக்களுக்குப்பதிலாக இயற்கையான தூய பசுப்பாலையோ அல்லது ஆட்டுப்பாலையோ பருகுதல் சிறந்ததாகும். பால்மா தயாரிப்பின்போது பயன்படுத்தப்படும் ஓமோன்கள் மற்றும் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் மிகவும் ஆபத்தானவை. இவ்வாறான ஆபத்தான இரசாயனப் பதார்த்தங்களற்ற நிறை ஊட்டச்சத்துகள் அடங்கிய இயற்கையாக கிடைக்கக்கூடிய பாலை அருந்துவதே ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற வழியாகும்.
கொழுப்பகற்றப்பட்ட பால்மாவுடன் ஒப்பிடும் போது இயற்கைப்பாலில் கொழுப்பு சற்று அதிகமாகக் காணப்படினும் இரசயானப்பதார்த்தங்களால் ஏற்படும் ஆபத்துடன் ஓப்பிடும் போது இது குறைவானதேயாகும்.