எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது.
வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள்.
நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண்ணிக்கை.
உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பாம்புக் கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது.
பாம்புக்கடியால் பலர் பலியாகின்றனர்
பாம்புக் கடிக்கான பொதுவான சிகிச்சை என்பது விஷ முறிக்க வல்ல மாற்று மருந்து ஒன்றை பாம்புக் கடித்தவருக்கு கொடுப்பதுதான்.
ஆனால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்து, ஊசி மூலமாக அவருக்கு அந்த மருந்தை செலுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதாக இந்த முறை அமைந்துள்ளது.
தவிர இந்த மருந்தின் விலையும் அதிகம்.
விஷ முறிவு மருந்து அல்லாது வாதம் ஏற்படுத்துவதைத் தடுக்கவல்ல அண்டி பராலிடிக் மருந்தான நியோஸ்டிக்மீன் என்ற மருந்தை பாம்பு கடித்தவருக்கு வழங்கும் ஒரு சிகிச்சை முறையும் இருந்துவருகிறது.
ஆனால் இதுவும் நரம்பு ஊசி வழியாகத்தான் செலுத்தப்பட முடியும்.
அதிகம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாவது என்னவோ ஏழ்மையான, கிராமப் பகுதிகளில்தான், அவர்களால் எல்லா நேரத்திலும் மருத்துவ வசதிகளைப் பெற முடிவதில்லை.
எனவே பாம்புக்கடிக்கு மேம்பட்ட மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகின்ற அவசியம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில்தான் விரைவாகவும் சுலபமாகவும் மூக்கில் அடிக்கக்கூடிய ஸ்பிரேயாக பயன்படுத்தவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றை கண்டறிவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கலிஃபோர்னியா அறிவியல் கழகத்தில் செண்டர் ஃபார் எக்ஸ்ப்ளொரேஷன் அண்ட் டிராவல் ஹெல்த் என்ற மையத்தின் இயக்குநராகவுள்ள டாக்டர் மேத்யூ லூவின் கூறுகிறார்.
இந்த மருந்து எலிகளிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு மனிதர்களிடம் ஆய்வுகளை நடத்தி மருந்து கட்டுப்பாடு அமைப்புகளின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஏராளமானோருக்கு பலன் தரும் மருந்தாக இந்தக் கண்டுபிடிப்பு உருவெடுக்கலாம்.