இலங்கையில் சிகரெட் பெட்டிகளின் மேற்பரப்பில் 80 வீதமான பகுதியை உள்ளடக்கி நோய் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும், சிகரெட் பெட்டிகளின் 50 முதல் 60 வீதமான மேற்பரப்பில் மட்டும் எச்சரிக்கைப் படங்களை பிரசுரிப்பதற்கு நீதிமன்றம் அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் சிகரெட் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் புகைத்தலினால் ஏற்படுகின்ற அபாயங்களை சிகரெட் பெட்டிகளின் 80 வீதமான மேற்பரப்பில் எச்சரிக்கைப் படங்களாக பிரசுரிக்க வேண்டும் என்று அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
“புகைப்பழக்க ஆபத்து பற்றி எச்சரிப்பது அரசின் கடமை”
யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சுரேந்திர குமரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
எனினும் அந்த அறிவிப்புக்கு எதிராக இலங்கை புகையிலை தயாரிப்பு நிறுவனம் ( Ceylon Tobacco Company) தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிகரெட் உற்பத்தி இலங்கையில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு வியாபாரம் என்று கூறியுள்ள நீதிமன்றம், 80 வீதமான பரப்பில் படங்களை பிரசுரிப்பது என்பது உற்பத்தி நிறுவனத்தைப் பாதிக்கும் செயல் என்று கூறியுள்ளது.
‘எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், நாம் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றோம். இதன் மூலம் புகைத்தலின் அபாயங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்றார் துணை சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க.
எனினும் இந்தத் தீர்ப்பு குறித்து இலங்கை மருத்துவர் கவுன்சிலின் மருத்துவர் மனோஜ் பெர்ணான்டோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.