எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எமக்கு ஒவ்வொரு துறையினருக்கும் நியாயமான உரிமைகள் என்ன? என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அந்தவகையிலே நோயுற்றவர்களுக்கு இருக்கும் தீர்மானம் எடுக்கும் உரிமை சம்பந்தமாக சிந்திப்பதும் பயனுடையதாக அமையும்.
ஒரு குடும்பமோ சமூகமோ அல்லது மருத்துவக்குழுவோ நோயுற்றவர்மீது அவரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சிகிச்சைமுறையை திணிக்கமுடியாது. மருத்துவக்குழு நோயுற்றவர்களுக்கு சொல்வது ஆலோசனைகளே தவிர கட்டளைகள் அல்ல. அது அவரது மருந்துகள் சம்பந்தமாக இருந்தாலும் சத்திரசிகிச்சைகள் சம்பந்தமாக இருந்தாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு இறுதித்தீர்மானம் எடுக்கும் உரிமை நோயுற்றவர்களுக்கே இருக்கின்றது. அந்த ஆலோசனைகள் கடைப்பிடிக்கப்படா விட்டால் கோபித்துக்கொள்ளும் உரிமை மருத்துவக்குழுவுக்கு இல்லை. உதாரணமாக ஒருவர் கொடுக்கப்பட்ட மருந்துகளை ஒழுங்காக பாவிக்காது உடற்பயிற்சியோ உணவுக்கட்டுப்பாடோ எதுவும் செய்யாது உடல் பருத்து புகைக்கும் தன் பழக்கத்தையும் தொடர்ந்து கொண்டு குடிபோதையில் மருத்துவரைச் சந்திக்கப்போனால் கூட அவரைக் கோபித்துக்கொள்ளும் உரிமை மருத்துவக் குழுவிற்கு இல்லை.
ஒருவருடைய உடல் சம்பந்தமான விடயங்களை தீர்மானிக்கும் பொறுப்பு அவரிடமேயே இருக்கிறது. தனது நோய் நிலை சம்பந்தமான முழு விபரங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் உரிமை அதற்கு செய்யக்கூடிய வைத்திய முறைகளால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்ளும் உரிமை, ஒவ்வொரு சோதனைகளும் ஏதற்காகச் செய்யப்படுகின்றன என்று கேட்டு தெரிந்து கொள்ளும் உரிமை, உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு நடத்தை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அனுகூலங்கள் பிரதி கூலங்கள் எவை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை போன்ற உரிமைகள் நோயுற்ற ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே அவரினால் தனது சிகிச்சைமுறைகள் சம்பந்தமான தீர்மானத்தை சரியான முறையில் எடுக்கமுடியும்.
ஒரு சிகிச்சை முறையில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதவிடத்து அதனை வேண்டாம் என்று மறுதலிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இதற்காக மருத்துவக்குழு அவரை கோபித்துக்கொள்ள முடியாது.
ஒருவர் ஒரு சிகிச்சை முறையை மறுதலித்தால் அவருக்கு வேறு எந்த முறைகளில் மருத்துவம் செய்யமுடியும் என்பது பற்றியே மருத்துவக் குழு ஆராயும். இதனால் நோயுற்றவருக்கும் மருத்துவக்குழுவிற்கும் இடையில் இருக்கும் உறவுநிலையிலோ அல்லது புரிந்துணர்விலோ எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படமாட்டாது. பொருத்தமான சிகிச்சை முறைகளை தெரிந்தெடுப்பதில் நோயுற்றவருக்கும் மருத்துவக்குழுவிற்கும் சமபங்கு இருக்கின்றது.
குடும்ப சமூக சூழ்நிலைகளில் கூட ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிட்டால் அவரின் தன் உடல் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமைகள் பல பறித்தெடுக்கப்பட்டுவிடுகின்றன. அவர் விரும்பும் உணவுகள் மறுக்கப்படும். சுவையற்ற உண்பதற்கு கஷ்டமான உணவுகள் அவர்மீது திணிக்கப்படும். அவருக்கு நோயாளி என்ற முத்திரை குத்தப்பட்டு அவர் அன்றாடம் செய்யும் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்படும். நோயுற்றவருடன் கலந்துரையாடாமல் அவரின் உண்மையான விருப்பு வெறுப்புக்கள் கேட்கப்படாமல் குடும்ப உறுப்பினர்களின் தீர்மானத்தின்பேரில் அவர் மீது பல சிகிச்சை முறைகளும் மற்றய கவனிப்பு முறைகளும் திணிக்கப்படும் நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுவிடுகிறது.
தொடரும்
சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதானா வைத்தியசாலை