இயற்கையான சுத்தமான காற்றை சுவாசித்து வருவது நமது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்பது யாவரும் அறிந்ததே. எமது சுற்றாடல் பல்வேறுபட்ட காரணிகளால் அசுத்தமடைந்து எம்மைச் சூழவுள்ள வாயு மண்டலமும் பல வாயுக்களால் அசுத்தமடைவதால் மனிதனுக்கு பல ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஆட்டிஸம் நோயினால் (மன வளர்ச்சிக் குறைபாடு) பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளைவிட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1989-ம் ஆண்டிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைகளின் புள்ளிவிபரங்களைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் வாயு மாசடைதல் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
அதன்மூலம் அங்கு வாழ்ந்த கர்ப்பிணிப் பெண்கள் அவற்றை சுவாசிக்க நேர்ந்துள்ள விகிதாசாரங்கள் பற்றியும் ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களின் வருமானம், கல்வி மற்றும் புகைத்தல் பழக்கங்கள் உள்ளிட்ட நிலைமைகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
ஆட்டிஸம் என்பது மன வளர்ச்சியைப் பாதிக்கின்ற ஒருவகை குறைபாடு. அமெரிக்காவில் 88 பேரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.