“குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்”
என்பதை யாமறிவோம். இவ்வாறான பெறுதற்கரிய குழந்தைச் செல்வம் அருளப் பெற்றோர் தமது குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போல பேண வேண்டியது அவர்களின் கடப்பாடாகும். குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் குழந்தையை எப்போதும் கண்காணிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு ஏற்ற ஆபத்துக்களற்ற சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
தற்காலத்தில் குழந்தை மருத்துவ விடுதிகளில், தவறுதலாக நச்சுப் பதார்த்தங்களை உட்கொண்டு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் காணப்படுகின்றது. பெற்றோரிடம் அல்லது குழந்தையைப் பராமரிப்பவரிடம் இது பற்றி வினாவினால் “சோடா என்று நினைத்து மண்ணெண்ணெயைக் குடிச்சிட்டான்…”, “ஆச்சிக்கு மனநோய் வருத்தம் இருக்கு.. அவவின்ர மருந்துகளைத் தான் குடிச்சிருக்க வேணும்…”, “பிள்ளை சத்தி எடுத்த போது நீலக்குளிசை ஒன்று இருந்தது…”, “தேத்தண்ணி போட என்று பேணியில வைச்சிருந்த சுடுதண்ணியைத் தட்டிப்போட்டா…”, “பக்கத்து வீட்டு அன்ரி வீட்டிலிருந்த மருந்துகளை குடிச்சிட்டான்…”, “பக்கத்து வீட்டு கிணத்தில தண்ணி அள்ளும் போது தவறி கிணத்துக்குள்ள விழுந்திட்டான்…”, இப்படியெல்லாம் அறிக்கையிடுவர்!
பாதிக்கப்படுவது உங்கள் குழந்தை அல்லவா?
சிதைக்கப்படுவது உங்கள் குழந்தையின் எதிர்காலம் அல்லவா?
இவையாவும் தவிர்த்திருக்கப்படக் கூடியன அல்லவா?
பெற்றோர்களே !!! சிந்தியுங்கள்……
மண்ணெய் போன்ற பெற்றோலியப் பொருட்களை உட்கொண்டு பிள்ளை வாந்தி எடுக்கும் சந்தர்ப்பத்தில் மண்ணெய் சுவாசப்பாதையினுட் செல்ல வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் போது சமிபாட்டுத் தொகுதி மட்டுமன்றி, பிள்ளையின் சுவாசத் தொகுதியிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. பிள்ளையால் அடைய முடியாத எட்டாத இடத்தில் இவற்றை வைத்திருந்தால், சோடாப் போத்தல்களினுள் பெற்றோலியப் பொருட்களைச் சேமிக்காது இருந்திருந்தால், மேற்படி நிலைமை தவிர்த்திருக்கப்படக்கூடியது அல்லவா?
யாழ்ப்பாணத்தில் எழுத்தறிவு வீதம் மிக உயர்வாக உள்ள போதும் குழந்தை சம்பந்தமான சரியான, துல்லியமான தகவல்களை எல்லாப் பெற்றோராலும் வழங்க முடிவதில்லை. கவனயீனமா? அக்கறையீன்மையா? தாமத குணமா? குடும்ப அங்கத்தவர்கள் என்ன நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் அவர்கள் என்ன என்ன மருந்துகளைப் பாவிக்கின்றனர் என்பதும் பல பெற்றோர் அறிந்து வைத்திருப்பதில்லை. குழந்தை வளர்ந்த ஒருவரின் மருந்தை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் போது யாருடைய மருந்தை பிள்ளை உட்கொண்டதோ அவருடைய மருத்துவ அறிக்கைகளை வைத்திய சாலைக்குப் பெரும்பாலான பெற்றோர் எடுத்துவருவது இல்லை. மேற்படி அவர்கள் அறிந்து வைத்திருப்பின் குழந்தை தவறுதலாக உட்கொண்ட மருந்துகளுக்குரிய மாற்று மருந்துகள் வழங்கப்பட்டுப் பொருத்தமான சிகிச்சைகளைத் தாமதமின்றிப் பெற முடிவதுடன் அம் மருந்துகளால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளையும் குறைக்க முடியும்.
- மண்ணெய் போன்ற பெற்றோலியப் பொருட்களை குழந்தை அடைய முடியாத எட்டாத இடத்தில் வையுங்கள்.
- மண்ணெய் உட்கொண்ட சந்தர்ப்பத்தில் வாந்தியெடுக்கத் தூண்டாதீர்கள்.
- மண்ணெயை குளிர்பானப் (சோடாப்) போத்தல்களினுள் சேமிக்காதீர்கள்.
- குழந்தையைக் கவரக்கூடியதான கொள்கலன்களினுள் இரசாயனப் பதார்த்தங்களைச் சேமிப்பதைத் தவிருங்கள்.
- வீட்டில் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டு கிளினிக் செல்பவர்கள் இருப்பின் அவர்களுக்கான மருந்துகளை குழந்தையினால் திறக்கப்பட முடியாத கொள்கலனினுள் பேணுங்கள் (விஷேட கொள்கலன்கள் பாவனையிலுள்ளன). அவற்றை குழந்தை அடைய முடியாத எட்டாத இடத்தில் வையுங்கள்
- சுடுநீர், இரசாயனப் பதார்த்தங்களை குழந்தை அணுக முடியாத இடத்தில் வையுங்கள்.
- மின் சொருகிகளை (Plug) எட்டாத இடத்தில் அமைப்பதுடன் அவற்றுக்குரிய பாதுகாப்பு மூடிகளை உபயோகியுங்கள்.
- தீ உள்ள இடங்களில் குழந்தை நடமாட அனுமதிப்பதைத் தவிருங்கள்.
- கிணற்றைப் பாதுகாப்பானதாக (மூடியிடப்பட்ட) அமையுங்கள்.
- அயலவர், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது பிள்ளைகளைக் கண்காணியுங்கள்.
- நம்பத்தகுந்தவர்கள் தவிர ஏனையோரிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்.
- மாடிப்படிகளில் அவதானத்துடன் அழைத்துச் செல்லுங்கள். மாடிப்படிகளுக்கும் மொட்டைமாடிக்கும் பாதுகாப்பு வேலி (Hand rail) அமையுங்கள்.
- எப்போதும் உங்கள் குழந்தைகளை நீங்களே கண்காணியுங்கள்.
Dr. தேவரஞ்சனா புவனேந்திரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.