யாழ்ப்பாணத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெறும் தகவல்களும் இந் நிலையை உறுதி செய்கின்றன.
மருத்துவ புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் 117604 பேர் நச்சுப் பதார்த்தங்களை அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1203 பேர் இறந்துள்ளனர்.
இந் நிலைமையைக் குறைப்பதற்காக மருத்துவ துறையினர் பல தரப்பட்ட நிலைகளில் முயற்சி செய்து வருகின்றனர். மருத்துவ வசதிகள் பற்றாக் குறைவாக உள்ள இக் கால கட்டத்தில் இவ்வாறான காரணங்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கவனத்தில் பேண வேண்டிய ஏனைய நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமமான நிலை நிலவுகின்றது.
தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணங்களாவன
• குடும்ப பிரச்சினை
• கட்டிளைமைப் பருவத்தில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் மனக் குழப்பநிலை
• கடன் தொல்லை
• பல்வேறுபட்ட விரக்தி நிலை
• மனநலக் குறைபாடும் மன அழுத்தமும்
வைத்திய துறையினர் இவ் ஆபத்தான நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனைத்து தரப்பினரதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டிநிற்பதுடன் கடந்த மாத இறுதியில் இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்கொலை விழிப்புணர்வு வாரத்தையும் பிரகடனப்படுத்தியிருந்தனர். பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டிருந்தது.