நீரிழிவு நோயானது எமது உடலின் சகல உறுப்புக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. எனினும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நீரிழிவு நோயினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் ஏற்பட்டு 10 – 20 ஆண்டுகளின் பின்னரே பொதுவாக விழித்திரைப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எணினும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் விழித்திரைப் பாதிப்புக்கள் இதற்கு முன்னரே ஏற்படுகின்றது.
2030ம் ஆண்டு நீரிழிவு விழித்திரைப் பாதிப்புக்கள் காணப்படுவோரின் எண்ணிக்கை 440 மில்லியனாகக் காணப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. இது 2010 ஆண்டில் இருந்ததை விட 54 வீதம் அதிகமாகும். நீரிழிவு விழித்திரை பாதிப்புக்களில் மிகவும் மோசமானது நிரந்தர பார்வை இழப்பாகும். 2002ம் ஆண்டில் 133 நீரிழிவு நோயாளர்களை எடுத்துக்கொண்டால் இவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோயினால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் 2030 ம் ஆண்டில் இந் நிலைமை மிகவும் அதிகரிக்கும் எனவும் 3.3 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள் நிரந்திர பார்வை இழப்பு உள்ளவர்களாக காணப்படுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நீரிழிவு விழித்திரைப் பாதிப்புக்களை எவ்வாறு குறைக்கலாம்?
- நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிதல்
- தகுந்த முறையில் சிகிச்சை எடுப்பதன் மூலம் நீரிழிவு உயர் குருதி அமுக்கம் என்பவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- தகுந்த முறையில் கண்பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிதல்.
- நீரிழிவு விழித்திரைப் பாதிப்புக்கள் இருப்பின் தகுந்த முறையில் சிகிச்சை எடுத்து நிரந்தர பார்வை இழப்பை தடுத்துக் கொள்ள முடியும்.
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு
- சர்க்கரை நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும்.
- இந்நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட பார்வை கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்
- கண்ணில் முக்கியமாக, பின்புறமுள்ள விழித்திரையின் இரத்த நாளங்களைப் பாதிக்கும்.
- விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண் மருத்துவர்களினால் மட்டுமே பரிசோதித்து கண்டறிய முடியும். மூளை இருதயம், மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால், இப்பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும்.
- சர்க்கரை நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, நோயின் தீவிரம் மற்றும் எவ்வளவு காலம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பொறுத்தது.
- 25 வருடம் சர்க்கரை நோய் உள்ளவர்களில் 70 முதல் 80 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு ஏற்படும்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு பார்வையிழக்கும் வாய்ப்பு மற்றவர்களைவிட 25 மடங்கு அதிகம் உள்ளது.
- குறைந்த பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும் வரை எந்தவித அறிகுறிகளும் தெரியாது
- விழித்திரை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து லேசர் சிகிச்சையளித்தால் கணிசமான அளவில் பார்வையிழப்பை தடுக்கலாம்.
- லேசர் சிகிச்சையினால் இருக்கும் பார்வையை பாதுகாக்க முடியுமே தவிர இழந்த பாவையை திரும்ப பெறமுடியாது.
- விழித்திரை பாதிப்பினால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் அனைவரும், 12 மாதத்திற்கு ஒரு முறையேனும் தங்கள் கண்களை கண்மருத்துவரிடம் அவசியம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். விழித்திரை பாதிக்கபடிருந்தால் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் கண் பார்வையையை முற்றிலும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Dr. கஜேந்தினி வேலுப்பிள்ளை
நீரிழிவு சிகிச்சை நிலையம்
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்.