6 .பாடசாலை
உங்கள் பிள்ளை பாடசாலை செல்லவும் மற்றபிள்ளைகள் போலச் செயற்படவும் முடியும். ஆனால் வகுப்பாசிரியரும் நெருங்கிய சில நண்பர்களும் சலரோகம் பற்றியும் இரத்தத்தில் சீனி குறைந்தால் அல்லது வலிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தெரிந்திருக்க வேண்டும். வகுப்பாசிரியரிடம் நேரத்திற்கு உணவுண்ண வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்க வேண்டும்.
07 .உடற் பயிற்சி
மற்றப் பிள்ளைகளைப் போலவே இப் பிள்ளைக்கும் உடற் பயிற்சி அவசியம். விளையாட்டுத் தொழிற்பாடுகள் அல்லது போட்டிகளில் பங்கு கொள்ள முடியும் கடுமையான உடற்பயிற்சியின் போது உணவுண்ணல், இன்சுலின் அளவு, குருதி வெல்லத்தினளவைப் பரிசோதித்தல் என்பன தொடர்பாக உங்கள் வைத்தியர் அறிவுறுத்துவார். பின்வருவனவற்றை உங்கள் நினைவில் வைத்திருங்கள்.
- உடற்பயிற்சி இரத்த வெல்லத்தின் அளவைக் குறைக்கும்.
- உடற் தொழிற்பாட்டுக்கு ஏற்ப இன்சுலின் அளவை மாற்ற வேண்டும்.
- தொழிற்பாட்டுக்கு ஏற்ப சிறு உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
- தொழிற்பாட்டின் பின் பல மணித்தியாலங்களின் பின்னரும் குருதி வெல்லத்தின் அளவு குறைய முடியும்.
- நீண்ட நேர உடற்பயிற்சிகளின் பின்
- இரவுநேர சிற்றுணவை அதிகரியுங்கள்
- நித்திரைக்கு போகும் போதும் அதிகாலை 3 மணிக்கும் இரத்த வெல்லத்தின் அளவைச் சோதியுங்கள்.
- உங்கள் வைத்தியர் உங்கள் குழந்தை பற்றிய தனிப்பட்ட மேலதிகமான அறிவுறுத்தல்களைத் தருவார். ஆகவே தொடர்ச்சியாக வைத்தியரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
08 .நோயுற்ற வேளையில் உங்கள் பிள்ளையைப் பராமரித்தல். (நோய்க்காலச் சிகிச்சை முறை)
- எந்தப் பிள்ளையும் நோய்வாய்ப் படுகின்ற சந்தர்ப்பம் உண்டு. சலரோகமுள்ள உங்கள் பிள்ளைக்கும் வேறு நோய்கள் ஏற்படலாம்.
- நோயுற்றபோது இன்சுலினை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
- ஆனால் குழந்தை உணவுண்பது போதுமானது என்பதை உறுதிசெய்யுங்கள் இல்லாவிடில் மிக அபாயகரமான வெல்ல மாற்றங்கள் குருதியில் ஏற்படும்.
- ஆகவே குழந்தையின் நிலைமை பற்றி அச்சம் ஏற்படின், சிகிச்சை முறைகளை வீட்டில் ஆரம்பித்தபடி வைத்தியசாலை்குக் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள்.
தொடரும்.