Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    March 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031  
    « Mar    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



இயற்கை இனிய வைத்தியன்

இயற்கையை இறைவனாகச் சித்தரித்து வழிபடும் மரபு அன்றுதொட்டு இருந்துவருகின்றது. அந்த இயற்கை என்ற இறைவன் வைத்தியத்திலே விற்பன்னனாக இருப்பதால் அந்த இறைவனுக்கு வைத்தீஸ்வரன் என்றும் ஒரு பெயா் இருக்கிறது. நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் அடி நாதமாய் விளங்கும் இயற்கை மூலமாகக் கிடைக்கும் வளங்களை அசட்டைசெய்து செயற்கையான பொருட்களின் கால்களிலே நாம் முற்றாக சரணாகதி அடைந்துகொண்டிருக்கிறோம். அதனால் நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை செயற்கைத்தனமாகி, இயந்திரமாகி, உணவுவகைகள் கூட பக்கற்றுகளிலும் பேணிகளிலும் வருகின்ற இரசாயன உணவுகளாக மாறி, பானங்கள் எல்லாம் போத்தலில் வருகின்ற செயற்கை சுவையூட்டிகளின் கலவையாகி, மீசை வெட்டுவதற்குக்கூட மிசின் தேவை என்று ஆகி, எமது உடற்பயிற்சிகள் இயந்திரங்களில் என்று ஆகி, எங்கள் புன்னகைகளும் நன்றி தெரிவிப்புகளும் உதட்டளவில் வரும் செயற்கை உபசாரமாக மாறி, இயற்கையிலிருந்து நாம் அந்நியப்பட்டு சென்றுகொண்டிருக்கிறோம்.

இயற்கையான சுத்தமான காற்று பல நோய்களை மாற்றும். நுரையீரலைப் பாதுகாத்து பல நோய்களைத் தடுக்கும். காற்றுக்காலம் தொடங்கியதும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளா்களின் எண்ணிக்கை குறைவது இதற்கு ஒரு நல்ல சான்று. இயற்கையான காற்றுக்கு கதவடைப்பு செய்து பூட்டிய அறையினுள் செயற்கை மின்விசிறியை சுற்றவிட்டு, சுற்றிவரும் அசுத்தக்காற்றை சுவாசித்து நோயை விலைகொடுத்து வாங்கும் வில்லங்க வாழ்வு அரங்கேறிக்கொண்டிருப்பது ஏன்?

சாதாரண தடிமன், காய்ச்சல், தலையிடி, தசைப்பிடிப்பு, வயிற்றுக்குழப்பம் போன்றவை மருந்துகள் எதுவுமின்றி இயற்கையாக மாறக்கூடியவை. சிறு சிறு அறிகுறிகளுக்கெல்லாம் மருந்து பாவிக்க நினைப்பது நல்லதல்ல. அவற்றை தானாக மாறவிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. பூப்பறிப்பதற்கு ஏன் கோடாரியைத் தூக்கவேண்டும்? இயற்கையில் மாறக்கூடிய நோய்களுக்கு ஏன் மாத்திரைகளைக் கையில் எடுக்கவேண்டும்?

இயற்கையை இரசிக்கும் பழக்கம் பல நோய்களைத் தீா்க்கவும் தடுக்கவும் வல்லது. பச்சைப் புற்தரையை, பஞ்சுபோன்ற முகில்களை, வீசும் காற்றை, விடிகாலைப் பொழுதை, பள்ளிசெல்லும் சிறார்களை, பறக்கும் குருவிகளை, பாட்டனின் பழங்கதையை, பாட்டியின் புறுபுறுப்பை, மலரும் பூக்களை என இரசிப்பதற்கு எத்தனையோ இருக்கின்றன. இந்த பழக்கம் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும். மனதில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றை காலம் தானாக மாற்றிவிடுவதை நாம் அன்றாட வாழ்வில் அவதானித்திருக்கிறோம்.

கலப்படமற்ற இயற்கையான உணவுவகைகள், நோயைத்தடுக்கவும், நோயைத் தீா்க்கவும் வல்லவை. ஊா்க்கோழி முட்டை, இளநீா், இயற்கையான உணவு உண்ணும் பசுவினுடைய பால், மோர், பச்சையிலை உண்ணும் ஆட்டின் பால், இயற்கை உரமிட்டு மருந்து தெளிக்காமல் வளா்க்கப்பட்ட மரக்கறி வகைகள், ஊா்க்கோழி இறைச்சி, இயற்கையாக வளரும் அகத்தி, சண்டி, முருங்கை, தவசி முருங்கை போன்றவற்றின் இலைவகைகள், வாழைப்பொத்தி, தானாகப் பழுத்த பழவகைகள், கடலிலே பிடித்த உடன் மீன்வகைகள், இறால், தேசிக்காய், சுண்டங்கத்தரி என எத்தனை இனிமையான, இயற்கையான, இலகுவில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள் எம்மத்தியில் உள்ளன. இருந்தும் சத்துமாப்பேணிகளுக்கும் இரசாயன உணவுகளுக்கும் நாம் ஆசைப்படுவதன் காரணம் என்ன? சூரியபகவான் எமக்கு சக்தியை மட்டும் கொடுக்கவில்லை. பல நோய்க்கிருமிகளிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துவருகின்றான். அன்றாட பாவனைப்பொருட்களான தலையணை, பாய், மெத்தை போன்றவற்றை சூரிய வெயிலில் காயவிடுவதன் மூலம் பல ஆபத்தான கிருமிகளை  இயற்கையான முறையில் அழித்துவிட முடியும். இயற்கையாகப் பொழியும் மழை நீரைச் சேகரித்து அருந்திவருவது ஆரோக்கியத்துக்கு நல்லது மட்டுமல்ல, புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கும்.

பூட்டிய அறையினுள்ளேயும், வீட்டினுள்ளேயும் இரும்பு இயந்திரங்களில் ஏறி உடற்பயிற்சி செய்வதிலும் பார்க்க இயற்கையுடன் ஒன்றி வீட்டுத்தோட்டமோ விலங்கு விவசாயமோ செய்வதிலும், பயணங்களுக்கு சைக்கிள்களைப் பயன்படுத்துவதிலும், நடந்து செல்வதிலும் ஆா்வத்தை வளா்த்துக்கொள்வதன் மூலமும், எமது அன்றாட தேவைகளை நாமே செய்வதன் மூலமும் நாம் செய்யும் உடற்பயிற்சியை பயன்மிக்கதாகவும் மனதுக்கும் உடலுக்கும் புத்துணா்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

இயற்கைக்கும் சில சமயம் இயலாமல் போகலாம். சில நோய்த்தடுப்புகளுக்கும் நோய் குணமாக்கல்களுக்கும் இயற்கையான நடைமுறைகள் மட்டும் போதாமல் போகலாம். அந்தச் சந்தா்ப்பங்களில் மட்டும் செயற்கை என்ற ஆயுதத்தைத் தூக்குவோம். மொத்தத்தில் செயற்கைத்தனத்தின் கால்களில் சரணாகதி ஆகாமல் செயற்கையை சாதுரியமாகப் பயன்படுத்த முயல்வோம். இயற்கை என்ற இனிய வைத்தியனின் கவனிப்பிலே சுகம்பெறுவோம்.

சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை

Posted in சிந்தனைக்கு
« வாகனத்தை மெதுவாகச் செலுத்துங்கள், விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை இறக்கம்/ குடல் இறக்கம் »

Leave a Reply

Click here to cancel reply.

You must be logged in to post a comment.

Copyright © 2014 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com