01. யோகா
இன்றைய நவீன உலகில் யோகக் கலை பற்றிய பிரக்ஞை பெரிதும் உணரப்பட்டுள்ளது. தமிழரின் பண்டையக் கலையான யோகக் கலை தற்போது கடல் கடந்த நாடுகளில் வாழும் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. எமது வாழ்க்கை முறை தற்போது பெரிதும் மாற்றமுற்றுள்ளது. பொருளீட்டு முனைப்பினால் மனிதன் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறான். உடலுழைப்புக்குப் பதிலாக இயந்திர சாதனங்களின் வளர்ச்சியால் அவற்றின் துணையுடன் பல வேலைகளை நிறைவேற்றுகிறான். இதனால் மனிதனின் உடலுள ஆரோக்கியம் பாதகமாக மாறுவது தவிர்க்க முடியாததாகும். அந்த வகையில் நீரிழிவுநோய் அத்தகையதே. நீரிழிவு நோயை யோகப் பயிற்சி எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
முறையாக யோகாவினைப் பயின்ற ஒருவர் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வருவாராயின் அவரது உடற் குருதியில் உள்ள குளுக்கோசின் அளவானது கணிசமான அளவு குறைவடைவதுடன் அவரது குளிசைகளின் அளவையும் குறைக்கலாம். இவ்வாறு பல வருடகாலம் குறைந்த அளவில் குளிசைகள் பாவிப்பதால் நீரிழிவு வியாதியை பாரிய பக்கவிளைவுகள் இன்றி குறைக்கலாம் என்று (united states national center for complementary and alternative medicine [NCCAM], Swami Vivekananda yoga anusandhana samsthana [SVAYSA], Centers for Disease control and prevention [CDS] பல ஆராய்ச்சிகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
யோகா பயிற்சியினை மேற்கொள்ளும் போது எமது எல்லா உடல் உள்ளுறுப்புகள் தூண்டப்படுகின்றது. இவற்றுள் சதையி (Pancreas) மற்றும் தைரொயிட் (thyroid) சுரப்பிகள் அடங்குகின்றது. இவற்றின் சுரப்புகளின் தொழிற்பாடுகளால் குருதியின் குளுக்கோசின் அளவானது சாதாரண மட்டத்தை அடைவதுடன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் முடிகின்றது. மேலும் யோகாவினால் அமைதியான உணர்வு பெறப்படுவதனால் எமது மன அழுத்தம் முற்றாகக் குறைவடைகின்றது. இதனாலும் எமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தலாம்..
எனவே ஒரு நீரிழிவு நோயாளியானவர் தனது நோயின் அளவை கட்டுப்படுத்தவும் அதன் விளைவுகளைக் குறைக்கவும் முறையான வகையில் யோகாவைப் பயில்வதனால் அமைதியான கோபமற்ற மன அழுத்தமற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முடிகின்றது.
தேர்ச்சிபெற்ற யோகாப் பயிற்சியாளரின் உதவியுடன் சரியான சுவாசமுறையுடன் யோகாப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயிற்கான பிரத்தியேக யோகாப் பயிற்சிகளுடன் மேலதிகமாகச் சில பயிற்சிகள் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி மேற்கொள்ள வேண்டும். ஒருவர் தனது யோகா பயிற்சியை தேர்ந்தேடுக்கும் போது தன்னால் இயலுமான ஆசனங்களை தேர்ந்தெடுப்பதுடன் முக்கியமாக அது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். அதிகாலை வேளைகளும் மாலைப் பொழுதுகளும் யோகாவை மேற்கொள்ள உகந்த நேரங்களாக அமைகின்றன. ஆசனங்களைச் செய்யும் போதுவெறும் வயிராக அல்லது உணவு உண்டு 3 -4 மணித்தியாளங்களின் பின் அல்லது இலேசான உணவாயின் 1 மணித்தியாலத்தின் பின் யோகாவில் ஈடுபடவேண்டும்.
நீரிழிவு நோயாளர்கள் மேற்கொள்ளக்கூடிய சில ஆசனங்களாவகன,
சூரிய நமஸ்காரம் (Surya Namskar)
இவ்வாசனம் சூரியனுக்கு வணக்கம் செலுத்துவதுடன் எமது உடலையும் மனத்தையும் வலுவடையச் செய்யும் ஓர் ஆசனமாகும். இதை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் வயிற்றுப்புறப் பகுதியின் தசைகள் நீட்டப்படுவதுடன் வயிற்றுலுள்ள உறுப்புக்கள் தூண்டப்படுவதால் சமிபாட்டுக் குறைபாடு குறைவடைவதுடன் அவற்றுக்கான குருதி ஓட்டமும் அதிகரிக்கின்றது. இதனால் சுரப்பிகளின் தொழிற்பாடும், நரம்பு, தசைகளின் தொழிற்பாடும் சீராக்கப்படுவதுடன் நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கின்றது. மேலும் உடலை சாந்திப்படுத்தி நீண்ட நிம்மதியான உறக்கத்திற்கும் வழிவகுக்கின்றது. இதனால் நீரிழிவு நோய், சமிபாட்டுக்குறைபாடு என்பவற்றில் இருந்து விடுபடலாம். மற்றய ஆசனங்களை மேற் கொள்ளமுன் மேற்கொள்ள வேண்டிய ஆசனமாகும். இதுவும் நீரிழிவு நோயாளர்களுக்கான ஒரு சிறந்த யோகாசனமாகும்.
தனுராசனம் (Dhanurasana)
இவ்வாசமானது நீரிழிவு நோயாளிகளுக்கு விசேடமாகப் பரிந்துரைக்கப்படும் ஆசனமாகும். இதனால் தொடை, புட்டப்பகுதி, வயிறு, இடுப்புத் தசைகள் வலுவடைவதுடன் உடல் உள் உறுப்புக்களுக்கான இரத்த ஒட்டத்தையும் கூட்டுகின்றது. இவ்வாசனமானது இதயம், ஈரல், மண்ணீரல், சிறுநீர்ப்பை, போன்றவற்றிற்கு சிறந்ததாக அமைவதுடன் சுவாசக்கோளறு, முதுகுவலி, நீரிழிவு, அஜீரணக்குறைபாடு என்பனவற்றுக்கு சிறந்த ஆசனமாக அமைகின்றது.
வஜ்ராசனம் ( Vajrasana)
இவ்வாசனத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் வயிறு, கால் மற்றும் தொடைப் பகுதியில் உள்ள தசைகளும் மூட்டுகளும் வலுவடைவதுடன் வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உள் உறுப்புகள் அவற்றுக்கான இடங்களில் சரியாக பேணப்படுவதுடன் அவற்றின் தொழிற்பாடும் தூண்டப்படுகின்றது.
இதனால் நீரிழிவுநோய், இரப்பை மற்றும் குடல் தொடர்பான கோளாறுகள் அதிக இரத்த அழுத்தம் தசைப்பிடிப்பு மூட்டுவாதம் என்பவற்றுக்கு மிகவும் உகந்தது.
பவன முக்தாசனம் ( Pavanamuktasana)
இவ்வாசனத்தை மேற்கொள்வதால் கழுத்து மற்றும் முதுகுப்புற தசைகள் விரிவடைவதுடன் உடல் கலங்களினதும் உள் உறுப்புகளினதும் வினைத்திறன் கூட்டப்படுகின்றது. மேலும் வாய்வு சம்பந்தமான பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றது.
உடல் உள் உறுப்புகளின் இரத்த ஓட்டமும் அவற்றின் வினைத்திறனும் கூட்டப்படுவதால் அவற்றின் சுரப்புகளின் மூலம் நீரிழிவு, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, என்பவற்றிலிருந்து விடுபடலாம், மூட்டு நோவுக்கு சிறந்த நிவாரணியாகவும் இது அமைகின்றது.
சர்வாங்காசனம் (Sarvangasana)
தைரொயிட் சுரப்பியை (Thyroid gland) நல்ல நிலையில் வைத்து உடலின் பொது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது. மேலும் இடுப்புப் பகுதியில் உள்ள புரொஸ்டேட் சுரப்பி (Prostate gland) மேலும் உடல் உள்ளுறுப்புகளான சதையி பித்த சுரப்பிகளைத் தூண்டுகின்றது. இதனால் உடல் உறுப்புகள் நல்ல இரத்த ஒட்டத்தைப் பெறுவதுடன் சுரப்புகளும் சீராக பரம்பலடைவதால் நீரிழிவு நோய், இரத்த குழாய் புடைத்தல், மூலநோய், குடல்வாயு, அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் என்பவற்றுக்கு உகந்தது. எந்த நோயுடையவர்களும் இந்த ஆசனத்தை மேற்கொள்ளலாம்.
மச்சாசனம் (Matsayasana)
இதனால் முதுகுத் தசைகள் கழுத்து, முள்ளந்தண்டென்பு, மார்புத் தசைகள் மற்றும் இடுப்பு நரம்புகள் இழக்கப்பட்டு ஆரோக்கியமாக வைக்கப்படுகின்றன. நுரையீரலின் அளவு இதயத் தொழிற்பாடும் அதிகரிப்பதுடன் உடல் சுவாசம் மூலம் புத்துணதுவைப் பெறுகின்றது.
இது நீரிழிவு நோய், ஆஸ்த்துமா நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு மிகவும் நல்லதொரு ஆசனமாகும்.
ஹலாசனம் (Halasana)
இவ்வாசனத்தை தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் கழுத்து, முதுகு மற்றும் கால் பகுதியிலுள்ள வலிகள் குறைக்கப்படுகின்றது. மேலும் இடுப்பு, மார்பு பகுதியில் ஏற்படும் வலிகளும் குறைவடைகின்றது. அத்துடன் எல்லா வயிற்ள்ளுறுப்புக்களின் தொழிற்பாடும் சீராக்கப்படும்.
ஹலாசனம் மேற்கொள்ளும் போது உடலின் நரம்புத்தொகுதியின் இறுக்கம் எமது உடலின் பின்புறத் தசைகளை வளைப்பதன் மூலம் பெறப்படுகின்றது. இதனால் எமது சதையின் தொழிற்பாடு தூண்டப்படுகின்றது.
வயிற்றுப்புறத் தசைகள் அழுத்தப்படுவதால் உடலின் உள்ளுறுப்புளான பித்த, சதையச் சுரப்பிகள் தூண்டப்படுவதுடன் வாய்வு, சமிபாட்டுக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.
மேலும் ஆஸ்த்துமா போன்றவற்றையும் குறைக்கின்றது. அத்துடன் முறையான பயிற்சியானது தைரொயிட், பராதைரொயிட் சுரப்பிகளையும் தூண்டுவதுடன் அவற்றின் தொழிற்ப்பாட்டையும் அதிகரிக்கின்றது.
எனினும் ஒருவர் யோகாசனங்களையும் ஆரம்பிக்க முன் ஒரு யோகா ஆசிரியரிடம் கற்றல் அவசியமானதாகும். முறையாகப் பயிலாது ஆரம்பிப்பது ஆபத்தானதாகும்.
இவ்வாறு முறையாகப் பயின்ற யோகாசனமானது நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு சிறந்த மருத்துவ முறையாக அமைகின்றது. இவ்வாறாக ஆசனங்களை மேற்கொள்ளும் போது எமது உடலின் தசைகள் தளவடைந்து இறுக்கமறற்ற மனநிலையை வழங்குவதுடன், நாம் உடலை வளைத்தல், திருப்புதல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்வதனால் உடலின் உள்ளுறுப்புகளும் தளர்வடைவதுடன் அழுத்தத்தையும் உணர்கின்றன. இதனால் உடல் உறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் ஓட்சிசன் அளவும் அதிகமாக கிடைக்கின்றது. இதன் விளைவால் உடல் உறுப்புகள் வினைத்திறனுடன் தொழிற்படுகின்றன. இவ்வாறாக உடல் உட்சுரப்பிகளும் தூண்டப்படுவதனால் உடலில் அவற்றின் தொழிற்பாடு அதிகரிப்பதுடன் அவற்றிலான சுரப்புகளும் உடலில் அதிகரிக்கின்றது.
தனுராசனம். அர்த்த மத்ஸ்யேந்திராசனம், வஜ்ராசனம், பவனமுக்தாசனம், சர்வாங்காசனம், கலாசனம், மச்சானம் போன்ற வகைகள் எமது சதையச்சுரப்பியின் தொழிற்பாட்டில் அதிக செல்வாக்கு செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
மேலும் யோகாவின் மூச்சு பயிற்சியும் அதிக செல்வாக்கை நீரிழிவு நோயாளியில் செலுத்துகின்றது. ஒருவர் மூச்சுப் பயிற்சியை மேற் கொள்ளும் போது உடலில் நரம்புத்தொகுதியும் தசைகளும் அமைதியான ஒர் உணர்வைப் பெறுகின்றது. இதனால் உடலின் இறுக்க நிலை குறைவடைந்து உடலில் இன்சுலினின் பயன்பாட்டின் வினைத்திறனைக் கூட்டுகின்றது. இதனால் நோயார்களின் இன்சுலின் மருந்தின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
மேலும் தனது உடல் நிறைக்கு ஏற்றவாறான ஆசனங்களை தெரிவதுடன் இலகுவான ஆசனங்களில் இருந்து படிப்படியாக உயர்ந்த படிமுறை ஆசனங்களை மேற்கொள்ளல் சிறந்ததாகும்.
இவ்வாறாக முறையாகப் பயின்ற யோகாவினை தினமும் ஒரு நீரிழிவு நோயாளி மேற்கொண்டு வருகையில் அவர் உள்ளெடுக்கும் நீரிழிவு மாத்திரைகளின் அளவும் நீரிழிவினால் ஏற்படும் சிக்கல்கள் நிலைகளும் குறைவடையும்.
02. சாந்த வழிமுறைகள்
யோகவுடன் எமது உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தி உரு தளர்வான நிலையில் வைத்திருக்க சாந்த வழிமுறைகள் உதவுகின்றன. எமது சாதாரண வாழ்க்கையில் மிக எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி எமது உடல் உள இறுக்கங்களில் இருந்து விடுபடலாம். அதாவது ஒரிடத்தில் அமைதியாக இருத்தல் மென்மையாக இசையைக் கேட்டல், இயற்கையை இரசித்தல், கலை ஈடுபாடு என்பன சில முறைகளாகும்.
எனினும் முறையான சில வழிமுறைகளாக
- சுவாசப்பயிற்சி
- தசை தளர்வுப் பயிற்சி
- மந்திர உச்சாடனம்
- தியானம் என்பன அமைகின்றன
மேற்கூறிய ஒவ்வொரு பிரிவுகளிலும் பல உப பிரிவுகள் காணப்படுகின்றன. எனினும் இவ்வகையான சாந்த வழிமுறைகளைப் பயிற்சி மற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து முறையாகக் கற்றுக்கொள்ளல் விரும்பத்தக்கது.
இவ்வாறு யோகாவுடன் சாந்த வழிமுறைகளையும் இணைத்துக் கொள்ளும்போது எமது உடலும் உள்ளமும் அமைதி அடைவதுடன் வாழ்வில் விழிப்பு நிலையையும் புத்துணர்வையும் உணராலாம். இதனால் நாம் உள்ளெடுக்கும் நீரிழிவு மாத்திரைகளின் அளவு. எமது மனவழுத்தமும் , நீரிழிவு நோயின் தாக்கமும் குறைவடைகின்றது.
எனவே ஒரு நீரிழிவு நோயாளி முறையான பயிற்சிகளின் மூலம் நீரிழிவு மாத்திரையின் அளவைக் குறைப்பதுடன் நீரிழிவின் சிக்கல் நிலையையும் குறைத்துக் கொண்டு புத்துணர்வுடனான நல்வாழ்வைப் பெறலாம்.
சி.ரஜீவ்ராஜா