மனி்த வாழ்வில் உணர்வுகள் முக்கியமானவை. பல சமயங்களில் நாம் எமது உணர்வுகளில் வாழ்கின்றோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணர்வு வெளிப்பாடு மிகவும் முக்கியமானது. இதற்கான பயன் தரவுள்ள படிமுறைகளைச் சிந்திப்போம்.
உணர்வுகளை இனம் காணுதல்
இதுதான் முதற்படி. பல உணர்வுகள் எமக்குப் பழக்கமானவை. மகிழ்ச்சி ஆச்சரியம், பயம், பாலுணர்வு, வெறுப்பு, குற்றவுணர்வு, கோபம், பொறாமை திருப்தி என அவை பல வகைப்படும். இந்த உணர்வுகளுள், எமது தற்போதைய உணர்வு என்ன என்பதற்கான விடை எமக்குத் தெரிந்திருத்தல் நன்று. உணர்வுகளைப் புரிந்து கொள்ளப் பின்வரும் வழிமுறைகள் பயனுடையவை.
சுய உரையாடல்
எம்முடன் நாம் உரையாடக் கற்றுக் கொள்வதன் மூலம் எமது உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளலாம். நாம் பல தடவைகளில் ஆச்சரியப்படும் அளவுக்கு எமது உணர்வுகள் வேறுபடுவதை இச்செயன்முறையின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
எழுதுதல்
எமக்காக நாம் செலவிடும் நேரங்களில் இதனை மேற்கொள்ளலாம். ஒரு அமைதியான குழப்பமில்லாத இடத்தில் உணர்வு வெளிப்பாடை அடிப்படையாக வைத்து மனம் விரும்பிய போக்கில் எழுதுவது எமது உணர்வுகளை எமக்கு வெளிப்படுத்தும்.
நட்புடன் அளவளாவுதல்
எமக்கு நம்பிக்கை உறவுகளில் எம்மை நாம் வெளிப்படுத்தும் போது எமது உணர்வுகளை நாம் இணங்காணலாம்.
உணர்வுகளை ஏற்றுக்கொள்ளலும், பொறுப்பெடுத்தலும்.
இது இரண்டாம் படி. மிகவும் முக்கியமானதும் கூட. நாம் இனங்காணக்கூடிய எல்லா உணர்வுகளையும் எம்முடைய உணர்வுகளாக ஏற்றுக்கொள்வதும் அவற்றுக்கு நாம் தான் பொறுப்பு எனப் பொறுப்பு எடுப்பதும் இன்றியமையாதன. பொதுவாக எதிர்மறை உணர்வுகளான கோபம், பொறாமை, குற்றவுணர்வு போன்றவற்றைப் பொறுப்பெடுக்க நாம் விரும்புவதில்லை.
உதாரணம். நான் கோபப்பட்டேன் என்று சொல்வதைத் தவிர்த்து எனக்கு கோபம் வந்தது என்று கூறுவதைக் குறிப்பிடலாம். சில உணர்வுகளை ஏற்றுக்கொள்வதில் எமக்குப் பண்பாட்டு ரீதியான தடைகள் தடங்கலாக இருக்கலாம், பாலுணர்வு அவற்றில் முக்கியமானது.
உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துதல்
இந்தச் செய்முறை எமது வாழ்வையே தீர்மானிக்கின்றது. இது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. நாம் இனங்கண்ட ஏற்றுக் கொண்ட ஒவ்வோர் உணர்வையும் ஆரோக்கியமாக வெளிப்படுத்தும் போது நாம் ஆளுமையில் வளர்ச்சியடைகின்றோம். பொதுவாக நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்துவது எமக்கு இலகுவானதாகவும் எதிர் மறையான உணர்வுகளை வெளிப்படுத்துவதும் எமக்கே கடினமானதாகவும் அமையலாம். குறிப்பாக எதிர்மறையான உணர்வுகளை ஆரோக்கியமாகக் கையாளுதல் எமக்கும் பிறருக்கும் மிகவும் முக்கியமானதாகும். உதாரணம் “நான் கோபத்தில் கத்திவிட்டேன்” அல்லது நான் கோபத்தில் எனது பிள்ளையை அடித்து விட்டேன் போன்ற வாக்கியங்கள் நாம் அடிக்கடி கேட்பவை.
எதிர்மறையான உணர்வுகளைக் கையாளும் போது கவனிக்க வேண்டியவை.
- அவ்வுணர்வுகள் நியாயமானவையா எனச்சிந்தித்தல்
உதாரணம் கோபம் நியாயமானதா? என்ற வினாவுக்கு விடை தேடுதல். - அது நியாயமானதெனில் அதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய முற்படல்
- எனது வரம்புக்குள் அக்காரணத்தை நிவர்த்தி செய்ய முற்படல்
- இதற்காகப் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டி ஏற்படலாம்.
- நிவர்த்தி செய்யமுடியாத காரணங்களாயின் உணர்வு வெளிப்பாட்டைமையப்படுத்திச் செயற்படுதல், இதற்கும் உரையாடுதல், எழுதுதல், வாய்விட்டுப் பிரார்த்தனை செய்தல், அழுதல் போன்ற முறைகளை் பயன்படலாம்.
- சரியான நேரத்தில் பொருத்தமான நபரிடம் பொருத்தமான அளவில் பொருத்தமான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்தல் மிகவும் முக்கியமானது. உணர்வுகளை இனங்கண்டு உணர்ந்து அவற்றுக்கு உரிமைகோரி உவப்புடன் வெளிப்படுத்தினால் நாம் ஆளுமையில் வளர்ச்சியடைவோம். அதைவிடுத்து உணர்வுகளை உயிருடன் புதைத்தால் அவை ஒருநாள் உயிர்த்தெழும்.
வைத்திய கலாநிதி G.J.பிரதீபன்
MBBS, MD (இலங்கை)
அவுஸ்ரேலியா