யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக் கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன.
ஏன் இத்தனை தற்கொலைகள்?
யாரில் என்ன தவறுள்ளது?
நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான். ஏன் அவ்வாறான எண்ணம் தோன்றியவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை? அது கண நேர மனநிலைத் தடுமாற்றம். சில கேள்விகளுக்கு அவர்கள் விடை தேடிக் கொள்கிறார்கள். மறுகணம் தமது முடிவை மாற்றிக் கொள்கிறார்கள்.
- நான் இறப்பதால் கிடைக்கும் பலன் என்ன?
- நான் இறந்து விடின் துன்பப்படுபவர்கள் எத்தனை பேர்?
- ஒரு சிறு நன்மையாவது என்னால் இந்த உலகத்துக்கு உள்ளதா?
- நான் இறப்பின், மனத்தால் சித்திரவதைப்படுபவர்கள் உள்ளார்களா?
- உதாரணமாக ஒருவர் நான் இதைச் செய்திருந்தால் இவர் இறந்திருக்கமாட்டாரா? என்று எண்ணித் துன்புறப் போவது யார்?
- எனது இக்கட்டான இம் மனநிலைக் குழப்பத்துக்கு வேறு மாற்று வழியுள்ளதா?
- வாழ்வில் ஒரு தடவையேனும் நான் மற்றவர்களால் பாராட்டப்பட்டு உள்ளேனா?
- என்னை விட மிகச் சிக்கலில் உள்ளவர்கள் இருக்கிறார்களா?
- ஆன்மீகப் பற்றுள்ளவராயின் இறந்த பின் என் ஆவிக்கு கொடுமையான மறுபிறப்பு கிடைத்து விடுமோ?
- தவறுதலாக உயிர் பிழைப்பின் என் கௌரவம் என்ன ஆகிவிடும்?
ஏனோ ஒரு சிலர் இவ்வாறான கேள்விகளை சந்திக்க முதலே முடிவெடுத்து விடுகிறார்கள் அல்லது கேட்டுக்கேட்டு விடைதெரியாமல் வேறு வழியற்று மரணத்தை தழுவிக் கொள்கிறார்களா? இப்படியாக இறப்பவர்களில் பலர் மனதளவில் மிகவும் துன்புற்றவராகவே தனது பிரச்சினைகளைக் கலந்து ஆலோசிக்க தகுந்த நபர் கிடைக்காமலே இறந்திருக்கலாம். அடுத்து எமது இளைய தலைமுறையினரின் தற்கொலை முயற்சிக்குப் பொதுவான காரணங்கள் தான் நம்பமுடியாமல் உள்ளன.
- மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு பெற்றோர் கடன் எடுத்து தர முடியாமை.
- காதலனோ, கணவரோ, மனைவியோ கையடக்கத் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமை.
- பரீட்சைகளில் தவறுதல்.
- தொலைக்காட்சி பார்ப்பதையோ, வேறு கேளிக்கைகளையோ குறைக்குமாறு கண்டிக்கப்படுகிறமை.
ஏன் இப்படியான நிலைமை ஏற்படுகின்றது. பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான மனநெருக்கம் குறைவடைந்தமை தான் காரணம், வேறு வேறு காரணிகளால் ஒருவரையொருவர் அறிந்தும் புரிந்தும் கொள்ள நேரப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை.
எனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை யாரும் தாழ்வாகவோ, வெறுப்பாகவோ நோக்குகின்ற தன்மை இயலுமானவரை குறைக்கப்படவேண்டும். உடலில் ஏற்படும் நோய் போல அவருக்கு மனதளவில் தற்காலிகமாக ஏற்படும் ஓர் இயலாத் தன்மைதான் இதற்கு காரணம்.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டு வலுப்படுகையில் அந்த நபர் தன்னையே கேள்வி கேட்டு மனநிலையைச் சீராக்கலாம். புரிந்துணர்வு உடைய ஒருவருடன் உரையாடித் தெளிவடைய வேண்டும். வன்னியில் இடம் பெயர்ந்த எம்மக்கள் இத்தனை இழப்பின் பின்பும் தமது நிலையைக் கட்டி எழுப்புகின்ற மனவலிமையுடையவர்களாக இருக்கின்ற போது அதே தமிழராகிய எம் யாழ். குடாநாட்டு இளம் சமுதாயம் ஏன் இப்படி வழிமாறிக் கொண்டு இருக்கிறது. விடையை அவரவரே தேடிக்கொள்வோம்.
விடையளிக்க வேண்டியவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள் மருந்தக முதலாளிகள். (எந்த விதமான மருந்துச் சிட்டைகளுமின்றித் தொகையான மாத்திரைகளை வழங்குதல்)
டாக்டர். பானு தில்லையம்பலம்
மருத்துவ பதிவாளர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.