பின்வரும் மூன்று பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்களுடன் கூடியதாகக் காணப்படுகின்றது. ஒருவருடைய வாழ்நாளில் அவரைப் பல ஆயிரம் கிலோமீற்றர் வரை காவிச் செல்வது அவரது பாதங்களாகும். இவ்வாறு பாதங்கள் எமது உடலைக் காவிச் செல்லும் போது காலில் பல்வேறு சேதங்கள் (உரசல் காயங்கள், கிழிவுகள், வெடிப்புக்கள்) ஏற்படுகின்றன. ஒரு வாகனத்தினுடைய அதிர்வு உறிஞ்சிகள் போல் செயற்படுவதும் எமது பாதங்களே. இவ்வாறு மகத்தான சேவை புரிகின்ற எமது பாதங்களுக்கு ஒழுங்கான கவனிப்பும் பராமரிப்பும் இன்றியமையாதவை.
ஒரு வாகனத்தைப் பல மைல்களுக்குச் செலுத்திய பின்னர் அதனைக் கழுவித் துடைத்து, சுத்தம் செய்து மீளத் தயார் செய்வது போல் பாதங்களையும் ஒழுங்கான முறையில் கழுவித் துடைத்து அதில் காணப்படும் தேய்வுகள், கிழிவுகள், புண்கள் என்பன ஒழுங்கான முறையில் கவனிக்கப்பட வேண்டும். இதனால் பாதங்களில் வரும் பாதிப்பை தவிர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறான கவனிப்பு ஒவ்வொரு தனி நபருக்கும் தேவை. அதிலும் சலரோக நோயாளிக்கு மிகவும் இன்றியமையாதது. ஒருவர் சலரோக நோய் உள்ளவர் என நோய் நிதானம் செய்யப்பட்ட நாளிலிருந்து சரியான பாதக் கவனிப்பு அவசியம். இன்று வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்படும் சலரோக நோயாளர்களில் அநேகமானவர்கள் காலில் சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களில் சலரோகம் கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்வதனால் சில சமயங்களில் குறிக்கப்பட்ட விரல் பகுதியை அகற்ற வேண்டிய நிலையும் அதனைத் தொடர்ந்து முழங்காலுக்கு கீழே கால்கள் தறிக்கப்பட வேண்டிய நிலையும் சில சமயங்களில் முழங்காலுக்கு மேல் கால் பாகத்தைத் தறித்தெடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
எனவே, ஆரம்பம் முதல் கொண்டே சரியான பாதக் கவனிப்பு இருக்குமாயின் இந்த நிலையைத் தவிர்க்கலாம். அநேகமாக இந்தப் பிரச்சினை
- சலரோகம் நீண்ட நாள் காணப்படும் போது பெரிய குருதிக் குழாய்களில் மாற்றம் ஏற்படுகிறது.
- சிறிய குருதிக் குழாய்கள் (மயிர்த்துளைக் குழாய்களில்) ஏற்படும் பாதிப்புக்கள்.
- பாதப் பகுதிக்குரிய நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு.
அநேகமாகப் பாதங்களில் ஏற்படும் பாதிப்பு சலரோகம் கட்டுப்பாட்டில் இல்லாத போது ஏற்படுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்கு நீங்கள் உங்கள் முகத்துக்கு எவ்வாறு கவனம் செலுத்துவீர்களோ அவ்வாறே உங்கள் பாதங்களுக்கும் கவனம் செலுத்தி உங்கள் பாதங்களைப் பாதுகாத்து ஆயுள் காலத்தைச் சந்தோஷசமாக அமையுங்கள்.