இன்சுலின் என்றால் என்ன?
எமது உடல் உறுப்பாகிய சதையியினால் சுரக்கப்படும் ஓர் ஓமோன ஆகும். இது உடலின் குளுக்கோசின் செறிவைப் பேணுவதற்கு முக்கிய பங்காற்றுகின்றது. இந்த இன்சுலின் ஓமோனானது ஒருவரில் சுரக்கப்படுவது குறைவாகவோ அல்லது சுரக்கப்படும் தொழிற்பாட்டில் தடை ஏற்படும் போதோ அவரில் குருதி குளுக்கோசின் செறிவு சீராக இருக்காது. இந் நிலையைத் தான் நீரிழிவு நோய் என அடையாளப்படுத்துகிறோம்.
இந்த நிலையில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் தொழிற்பாட்டை கூட்டுவதற்கு மாத்திரைகளும், இன்சுலின் ஊசி மருந்தும் சிபார்சு செய்யப்படுகிறது. இங்கு இன்சுலின் பாவிக்கும் நோயாளி ஒருவர் இன்சுலின் மருந்தை எவ்வாறு பேணுவது என்பது பற்றியும், ஊசி (Syringe) சிறிஞ்சுகள் என்பவற்றை எவ்வாறு தெரிவு செய்வது என்பது பற்றியும் பார்ப்போம்.
ஊசி என்றால் பெரும்பாலானோர் பயப்படுகிறார்கள். ஆனால் தற்போது மிகவும் மெல்லிய ஊசிகளுடன் கூடிய இன்சுலின் சிறிஞ்சுகள் கிடைக்கின்றன. அத்துடன் இன்சுலின் பேனா என்னும் நவீனப்படுத்தப்பட்ட உபகரணமும் கிடைக்கின்றது. இவை குறைந்த வலியுடன் போடக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இலகுவில் கொண்டு செல்லக்கூடியதாகவும் உள்ளன.
பொதுவாக கிளினிக்குகளில் பெறும் இன்சுலின் மருந்தைப் பெரும்பாலானோர் சட்டைப் பொக்கற்றுகளிலும், கைப்பைகளிலும் வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இது தவறானது. ஏனெனில் இன்சுலின் மருந்தானது பொதுவாக 2-8℃ வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டியது. சூழல் வெப்பநிலையில் அதிக நேரம் இன்சுலினை வைத்திருந்துவிட்டு பின் அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் அதன் செயற்பாடு குறைந்துதான் இருக்கும். எனவே கிளினிக்குகளில் பெறப்படும் இன்சுலின் மருந்தை சரியான முறையில் கொண்டு சென்று சரியான முறையில் பேணிப்பாதுகாக்க வேண்டும்.
முதலில் கிளினிக்குகளில் பெறும் இன்சுலினை எவ்வாறு வீட்டுக்கு கொண்டு செல்வது என்பது பற்றி பார்ப்போம். ஒரு சிறிய சுடுநீர்ப் போத்தலினுள் சிறியளவு ஜஸ்கட்டிகளைப் போட்டு அதனுள் இன்சுலின் மருந்துக்குப்பியை வைத்துக்கொண்டு செல்லலாம். இது ஒரு பாதுகாப்பான முறையாகும். எவ்வளவு நேரம் சென்றாலும் இன்சுலின் மருந்துக் குப்பியை குளிர்சாதனப்பெட்டி வசதியுள்ளவர்கள் அதனுள் வைத்து பாதுகாக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது சிறந்த முறையாகும்.
குளிர்சாதனப்பெட்டி வசதியில்லாதவர்கள் பின்வரும் முறையிலும் பாதுகாக்கலாம். வாயகன்ற ஒரு மண் பானையையும் அதனுள் வைக்கக் கூடியதான இன்னோர் சிறிய மண் பானையையும் வாங்கிக்கொள்ள வேண்டும். வாயகன்ற பானையுள் அரைவாசிக்கு நீர் விட்டு சிறிய பானைக்குள் இன்சுலின் குப்பியை வைத்து அதனை நீருள்ள பானைக்குள் வைத்து மூடிப்பாதுகாக்கலாம். இதுவும் ஓரளவு பாதுகாப்பான முறையாகும்.
இனி, இன்சுலின் ஊசி எப்படி போடுவது என்பது பற்றிப் பார்ப்போம். இன்சுலின் ஊசி போடுவதற்கு உகந்த சரியான சிறிஞ்சுகளை, ஊசிகளைத் தெரிவு செய்ய வேண்டும். மருந்துக் கடைகளில் 29G x 1/2’’’ அளவுடைய ஊசி பொருந்திய இன்சுலின் சிறிஞ்சுகளைக் கேட்டு வாங்குங்கள். இவை மெல்லிய ஊசிகளையுடைய சிறஞ்சுகள் ஆகும். அத்துடன் ஊசி போடுவதற்கு தேவையான பஞ்சுத் துண்டுகள், ஸ்பிரிட் என்பவற்றையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் உங்கள் கைகளைச் சவர்க்காரம் பாவித்து கழுவித் துப்பரவான துவாயினால் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் இன்சுலின் குப்பியை உள்ளங்கையில் வைத்து மெதுவாக உருட்ட வேண்டும். பின் ஊசியையும் சிறிஞ்சையும் பைக்கற்றிலிருந்து வெளியே எடுத்து இன்சுலின் குப்பியின் வாயைத் துப்பரவு செய்து விட்டு சிறிஞ்சின் உட்தண்டை (Piston) பின்னோக்கி இழுத்து தேவைப்படும் இன்சுலின் அளவில் விடுக. பின், இன்சுலின் மருந்துக் குப்பியின் இறப்பர் மூடியினூடாக ஊசியைச் செலுத்தி சிறஞ்சின் உட்தண்டை முன்தள்ளித் தேவையான இன்சுலினைச் சிறிஞ்சினுள் நிரப்புதல் வேண்டும். இப்போது ஊசியை இன்சுலின் மருந்துக் குப்பியிலிருந்து வெளியே எடுத்து ஊசி போடும் பகுதியை (Sprit) ஸ்பிரிட்டால் துப்பரவு செய்து மிகவும் கெட்டியாகத் தோலைக் கிள்ளிப் பிடித்துக்கொண்டு கிடைமட்டத்திலிருந்து 45° கோணத்தில் தோலினுடாக ஊசியைச் செலுத்த வேண்டும். ஊசியை ஏற்றிய பிறகு 5 செக்கன்கள் கழித்த பின்பே ஊசியை வெளியே எடுத்தல் வேண்டும். ஒருவர் ஒரு ஊசியை வெளியே எடுத்தல் வேண்டும். ஒருவர் ஒரு ஊசியையும் சிறிஞ்சையும் 2-3 நாட்களுக்கு கவனமாக பாதுகாத்துப் பாவிக்கலாம்.
நீரிழிவு நோயாளி தானே தனக்கு ஊசி போடுபவராக இருந்தால் வயிற்றுப்பகுதி, தொடைப்பகுதி என்பவற்றில் தொடர்ந்து ஒரே இடத்தில் போடாமல் சுழற்சி முறையில் ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். வேறொருவர் மூலம் ஊசி போட்டுக் கொள்பவராக இருந்தால் மேல் கைப்பகுதியிலும், புட்டப் பகுதியிலும் போட்டுக் கொள்ளலாம். மேலதிக விபரங்கள் தேவையானோர் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள நீரிழிவு யைத்துடன் தொடர்பு கொண்டு விரிவான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
செ. தவச்செல்வம்,
தாதிய உத்தியோகத்தர், நீரிழிவு சிகிச்சை நிலையம்,
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.