Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நகங்களின் பாதுகாப்பு

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மையான நரம்புக்கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருட்களைக் கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் முளைக்கும் போது மிருதுவான செல் (Cell) களால் உருவாகின்றன. பிற்பாடு வளரும் போது கடினத்தன்மை அடைகின்றன. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு ‘க்யுடிகிள்’ (Cuticle) எனப்படும். இதில் அழுக்கு, நுண்ணிய கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்து வைக்கிறது.

பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புக்களைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சட்காமாளையால் (Jaundice) பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும் (Koilonychia) தட்டையாக அல்லது கரண்டி போல் நகங்கள் தோற்றமளிக்கும். (அனீமியா, தைரொட்சைய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய்த் தொடர்புகளைச் சுட்டும்). சக்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்துக் குறைவாக இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைப்பிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். (நகங்களுக்குப் பொலிஷ் தீட்டுவதனால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்). நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி அவற்றில் வெடிப்பு ஏற்பட்டுச் செதில் செதிலாக உதிர்ந்தால் ‘ சொரியாசிஸ்’ (Psopriasis) என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுக்களால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் நீல நிறத்தில் காணப்படும். இரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாக இருந்தால் குறைத்துக்கொள்ள வேண்டும். க்ளப்பிங் (Clubbing) நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுரண்டும் காணப்பட்டால் அவை நாள்பட்ட நுரையீரல், இதய, குடல் நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.

லிண்ட்ஸே (Lindsay) நகத்தின் முனைப்பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் (Cuticle) சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும். ‘ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்’ (Splinter Heamorrhages) ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுக்கள் இரத்தக் கசிவைப் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.

நகங்களின் பாதுகாப்புக்கு….

அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடிச்சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும் நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.

சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். (நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி வயிற்றுப் போக்கு ஆகியவை உண்டாகும்) நகத்தின் இயல்பான வளர்ச்சிக்குச் சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியைத் தாமதப்படுத்தும். ‘ப்யூலைன்’ (Beauline) என்ற சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், உதிரவும் வாய்ப்பு உண்டு. நகங்கள் அழகுடன் திகழ காய், கனிகள் நிறைய உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.

குளித்தவுடன் நகம் வெட்டினால் நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால் எளிதாக வெட்டவரும். அதே போல் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். தண்ணீரை மிதமாகச் சூடுபடுத்தி, சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களைச் சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். எலுமிச்சைச் சாற்றுடன் வெந்நீரைக் கலந்து கைகளை சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இப்படிச் செய்வது விரல்களுக்கும் நகங்களுக்கும் மிகவும் நல்லது.
கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் நகங்கள் பளபளப்படையும். ஒலிவ் எண்ணெய்யை மிதமாகச் சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களைத் தேய்த்துச் சுத்தப்படுத்தினால் நகங்களிற் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும். நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே, நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

எஸ். ருஷ்யந்தினி,
2007/FM/42 மருத்துவபீட மாணவி.

Posted in கட்டுரைகள்
« வைத்தியசாலையில் தொற்றும் நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல்
குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசக்குழாய் அழற்சி (Bronchiloitis) »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com