கைபோகிளைசீமியா – Hypoglycaemia
- இது நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் குறுகிய காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களில் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இந்தப் பாதிப்பு நீரிழிவு நோயாளியை சில நிமிடங்களில் அல்லது சில வினாடிகளில் கூட இறப்பைத் தழுவச் செய்யக்கூடியது.
- ஆகவே அது ஏற்படுவதற்கான காரணத்தையும் அதை எவ்வாறு ஆரம்ப நிலையில் இனங்காண்பது என்பது பற்றியும் அதிலிருந்து எவ்வாறு இறப்பு ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் இதை எவ்வாறு முன்கூட்டியே எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் நீரிழிவு நோயாளி ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
- நாளக்குருதியில் குளுக்கோசின் அளவு குறிப்பிட்ட அளவிற்கு குறைவடையும் போது கைப்போகிளைசீமியா (Hypoglycaemia) என்ற நிலை உருவாகின்றது. அதாவது நாளக்குருதிக்குளுக்கோஸின் அளவு 63mg/dl (4mmol/l) இலும் குறைவடையும் போது அதை கைப்போகிளைசீமியா எனக் குறிப்பிடுவர்.
இது நீரிழிவு நோயாளிகளில் எவ்வாறு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்?
- நீரிழிவு நோயாளிகள் விரதம் இருக்கின்றமை அல்லது வேறு காரணங்களால் ஒரு வேளை உணவை உள்ளெடுக்காமை.
- நீரிழிவு நோயாளிகள் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவிலான உணவினை உள்ளெடுப்பது.
- நீரிழிவு நோயாளிகள் காலம் தாழ்த்தி உணவினை உள்ளெடுப்பது.
- நீரிழிவு நோயாளிகள் வழமைக்கு மாறாக மாச்சத்து குறைந்த உணவினை உள்ளெடுப்பது.
- வழமைக்கு மாறாக நீரிழிவு நோயாளிகள் அதிக இன்சுலினை அல்லது நீரிழிவு மாத்திரைகளை உள்ளெடுப்பது.
- வழமைக்கு மாறாக கடுமையான உடற்பயிற்சி செய்வது.
- வெறும் வயிற்றில் அற்ககோல் உள்ளெடுப்பது.
- அதிக வாந்தி எடுத்தல்.
இனி இதை எவ்வாறு இனங்காண்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்?
- குருதியில் குளுக்கோஸ் 60mg/dl (3.3mmol/l) இலும் குறையும் போது தான் கைப்போகிளைசீமிக்கான அறிகுறிகள் வெளியில் தெரியத் தொடங்கும்.
- களைப்பாக இருத்தல், நடுக்கம் ஏற்படல், வியர்த்தல், தலையிடி, கடுமையான பசி, தலைச்சுற்று, மயக்கம் ஏற்படல், கண்பார்வை மங்குதல், நெஞ்சுப் படபடப்பு, தடுமாற்றம், கூடுதலான நித்திரை உணர்வு ஏற்படல் (Drowsiness), வயிற்று வலி, செயற்பாடுகளில் மாற்றம் (Behaviour changes), அதிகம் பயப்படல், ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
- இவையெல்லா அறிகுறிகளும் ஒரு சலரோக நோயாளியில் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டியதில்லை இவற்றில் ஒரு சில அறிகுறிகள் தோன்றும் போது கவனத்தில் எடுத்து உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
- மேற்கூறிய அறிகுறிகள் சிலவற்றை நீங்கள் உணர்ந்து கொள்ள முதல் உமக்கு அருகிலிருப்பவர் நீங்கள் வியர்த்திருப்பதையும், வெளிறிப்போயிருப்பதையும், களைத்திருப்பதையும் உமது நடவடிக்கைகளில் மாற்றங்கள் (அதிகம் சினமடைதல், பதற்றமடைதல்) இருப்பதையும் அவர்கள் அவதானித்து உமக்கு தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு இனங்கண்டபின் உடனடியான அடுத்த கட்ட நடவடிக்கையாக நீரிழிவு நோயாளி ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்?
- உம்மிடம் அந்நேரம் புடரஉழஅநவநச இருக்குமாயின் குருதி குளுக்கோஸ் அளவை அளந்து உறுதிப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.
- அவ்வாறு இல்லையெனின் கைப்போகிளைசீமியா என கருதி பின்வருவனவற்றில் ஏதாவது ஒரு செயற்பாட்டை செய்து கொள்க.
- சிறிது குளுக்கோஸை நீரில் கரைத்து குடியுங்கள்
- 1மேசைக்கரண்டி அளவு சீனியை கரைத்து குடியுங்கள்.
- ½ கோப்பை பழச்சாறு அல்லது இனிப்பு சோடாவை குடியுங்கள்.
- 2 Toffee யை உட்கொள்ளவும்.
- அதன் பின் 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும், சுகமான உணர்வினை பெரும்பாலும் உங்களால் உணர முடியும். அவ்வாறு சுகம் உணர முடியாத போது உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள்
- சுகத்தினை உணர்ந்தாலும் வைத்திய ஆலோசனையை விரைவில் பெற்றுக் கொள்வது நல்லது.
- சுகமடைந்த ஒருவரின் அடுத்த கட்ட நடவடிக்கையாக,
- மீண்டும் குருதி குளுக்கோஸ் மட்டத்தை அறிந்து கொள்வது நல்லது.
- பிறகு 20 நிமிடங்களில் உமது அடுத்த நேர உணவினை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் இல்லாவிட்டால் 1 பழத்துண்டை அல்லது 1 கப் பாலை அல்லது 1 துண்டு Sandwich யை அல்லது 1 கப் கொழுப்பு குறைந்த Yogurt யை உட்கொள்ளலாம்.
குறிப்பு:
- இவ்வாறு குருதியிலுள்ள அதிதாழ் குளுக்கோஸ் நிலையை (கைப்போகிளைசிமைக்கை – Hypoglycaemia) உடனடியாக திருந்தாவிடின், அதனால் உடற்தொழிற்பாட்டின் ஒருங்கிணைப்பு இழக்கப்படல், குழப்ப நிலை (Confusion), பேச்சு தடுமாறுதல், சுய நினைவு இறப்புக்கூடப் பரிசவிக்கலாம்.
- நீர் வாகனமொன்ளை செலுத்தும் போது கைப்போகிளைசிமிக்கான அறிகுறிகள் தோன்றுமாயின் வாகனத்தை உடனடியாகப் பாதையின் ஓரப்பகுதிக்குக் கொண்டுசென்று வாகனத்தை நிறுத்தி, மேற்குறிப்பிடப்பட்ட உடனடியான சிகிச்சை முறையை மேற்கொள்க.
- உமது குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் உம்முடன் வேலை செய்பவர்களும், உமக்கு கைப்போகிளைசிமிக் நிலை வரும்போது அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றி தெரிந்திருத்தல் நல்லது.
‘வருமுன் காப்போம்’ என்பதற்கிணங்க எவ்வாறு கைப்போகிளைசிமிக் (Hypoglycemic) தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாப்பது என்பது பற்றி நீரிழிவு நோயாளி ஒருவர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.
- நீரிழிவு நோயாளிகள் விரதமிருப்பதை தவிர்த்துக் கொள்ளுதல்.
- ஒவ்வொரு தடவையும் உணவில் சேர்த்துக்கொள்ளும் மாப்பொருளின் அளவை இயன்றளவு எல்லா நாட்களிலும் சராசரியாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நீரிழிவு நோயாளி ஒவ்வொரு தடவையும் நீரிழிவு மாத்திரைகளை எடுக்க முன்பு எடுக்கின்ற அளவு சரியானதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நீரிழிவு நோயாளி தாம் பாவிக்கும் நீரிழிவு மாத்திரைகளின் அல்லது இன்சுலின் அளவையோ எடுக்கும் தடவைகளின் எண்ணிக்கையையோ வைத்திய ஆலோசனையில்லாமல் மாற்றம் செய்தல் கூடாது.
- நீரிழிவு நோயாளி ஒவ்வொருவரும் எப்போதும் தன்னுடன் Glucose packet யை அல்லது 2Toffee யை அல்லது சிறிதளவு சீனியை (Sugar) யையும் வைத்திருக்க வேண்டும்.
- அதைவிட நீரிழிவு நோயாளி ஒவ்வொருவரும் தான் நீரிழிவு நோயாளியென தெரியப்படுத்தும் அடையாள அட்டையொன்றை அல்லது வேறு ஏதாவது அடையாளப்படுத்தும் ஆவணமொன்றை எப்போதும் தம்முடன் வைத்திருக்குக.
- மேற்குலக நாடுகளில் தற்போது நீரிழிவு நோயாளியொருவர் Glucagon hypokit handy’ கட்டாயம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
- நோயாளி தாம் ஒவ்வொருவரும் உண்மையாக எடுக்கும் மாத்திரைகளின் எண்ணிக்கையையும் ஓர் நாளில் எடுக்கும் தடவைகளின் எண்ணிக்கையையும் அவை வைத்தியரினால் கூறப்பட்டனவற்றிற்கு வேறுபட்டிருந்தாலும் வைத்தியருக்கு எந்தத் தயக்கம் இல்லாது தெரியப்படுத்தல் வேண்டும். ஏனெனில் அப்போது தான் வைத்தியரினால் நோயாளியின் நோயின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அத்துடன் கைப்போகிளைசீமியா போன்ற உயிராபத்தினைத் தோற்றுவிக்கக்கூடிய நிலைமைகளை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும்.
ச.ஞானக்குமரன்
Posted in கட்டுரைகள்