ஆரோக்கிய வாழ்க்கைக்கு மூன்று வேளையும் உணவு உட்கொள்வது அத்தியவசியமானது.இருந்த போதிலும் எம்மில் பலர் காலை உணவை தவிர்த்துக் கொள்கின்றனர்.
பாடசாலை செல்லும் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள் இதில் அடங்குவர் .இதற்க்கான முக்கிய காரணங்கள் நேரமின்மை, உணவில் விருப்பமின்மை, சுவையின்மை, தேகம் மெலிய வேண்டும் போன்றவைதான்.
காலை உணவை தவிர்ப்பதால் நாம் பல ஆபத்தான பின் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். ஆகவே நாம் உணவைத் தயாரிக்கும் போது, சத்தானதாக, இலகுவில் உண்ணக்கூடிய விதத்தில் விரும்பி உண்ணக்கூடிய வகையில் தயாரிப்பது அவசியம்.
அரிசி சோற்றை எமது பிரதான உணவாகக் கொண்டாலும், அதைவிட அரிசியுடன் வேறு உணவுப் பொருள்களையும் சேர்த்து உணவுகளை தயாரிக்கும் போது அந்த உணவின் போசணைப் பெறுமானம் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில் நாம் அரிசிக்கஞ்சி பதிலாக சத்தூட்டக்கஞ்சி தயாரிக்கும் முறை ஒன்றை பார்ப்போம்.
போசணைக்குறிப்பு:
உடலுக்கு தேவையான விற்றமின்கள் இரு வகைப்படும். கொழுப்பில் கரைபவை,நீரில் கரைபவை. பச்சை அரிசியில் காணப்படும்.விற்றமின் B, நீரில் கரையும் விற்றமின் ஆகும். பச்சையரிசித் தவிட்டுடன் சேர்த்து இந்த விற்றமின் காணப்படுகின்றது. ஆகவே அளவுக்கு மீறி பிசைந்து கழுவுவதால் அரிசியில் காணப்படும் விற்றமின் B வீணாகி விடும். விலை கொடுத்து வாங்கும் சத்தான உணவுப் பொருள்களின் உணவுச் சத்துக்களை எம் அறியாமையினால் இழந்து விடக் கூடாது.
சத்தூட்டக்கஞ்சி
தேவையான பொருட்கள்:
சிவப்பு பச்சையரிசி – 1 சுண்டு
வறுத்துக் குற்றிய பாசிப்பருப்பு – 1/4 சுண்டு
தேங்காய்ப்பால் – 1/2 தேங்காய்
ஏலம் – 3,4
உப்பு அளவாக
சீனி விரும்பிய அளவு
செய்முறை:
அரிசி பாசிப்பருப்பை நன்கு கழுவி அளவாக தண்ணிர் சேர்த்து அவியவிடவும். உப்பு ஏலம் சேர்க்கவும். அரிசி நன்கு வெந்ததும் கடைந்து எடுக்கவும். தேங்காய்ப்பாலில் உழுத்தமாவைக் கரைத்து அவிந்த அரிசி பருப்புடன் சேர்க்கவும். அகப்பையால் நன்கு கலக்கி,கஞ்சிப் பதத்தில் தேவையாயின் மேலும் சுடுநீர் சேர்த்து கிளறவும். அடுப்பில் இருந்து இறக்கும் வரை அகப்பையால் கிளறியபடி இருக்க வேண்டும். நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
அளவாக சீனி சேர்த்து பரிமாறவும்.
சீனியை தவிர்த்தும் குடிக்கலாம்.