நண்பரொருவருக்குக்காய்ச்சல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரி, ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று மழை தூறிக்கொண்டிருந்த பொழுதொன்றில் புறப்பட்டேன். மருத்துவமனைவாசலில் குவிந்திருந்த சனக்கூட்டத்துள் நுழைந்து, நோயாளர் விடுதிக்குள் போவதற்கிடையில் போதும் போதுமென்றாகிவிட் டது. நல்லூர்த் தேருக்குக்கூட இப்படிக்கூட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியொரு கூட்டம். வெளியேதான் அப்படி என்றால், விடுதிக்குள் கட்டில்கள் நிரம்பி வழிந்து, நிலமெங்கும் பாய்களை விரித்து, கால் வைக்கக்கூட இடைவெளியின்றி எங்கும் ஒரே நோயாளர் மயம். பார்க்கப்போன நண்பரைக்கூட சரிவர சுகம் விசாரிக்கமுடியவில்லை . “எல்லாம் டெங்குக்காரர். இஞ்சவருத்தக்காரர் இருக்கவே இடமில்லாம இருக்கு. பார்க்க வந்தவை கன நேரம் நிக்காமல் போங்கோ ” என்ற துரத்தல் வேறு. “கடும் வருத்தக்காரரை மட்டும் தான் இப்ப வார்ட்ல அட்மிட்பண்ணுகினம். மற்றவையை எடுக்கிறேலை. எல்லாம் உந்த டெங்கால வார்ட்ல இடமேயில்லையாம்” வருகிற வழியில் இருவர் பேசிக்கொண்டதையும் காது கவனமாக வாங்கிக் கொண்டது.
யாழில் பெரும் தாக்கம்
யாழ்ப்பாணத்தை ஒரு வழி பண்ணியே தீருவதென்று கங்கணம் கட்டி இந்தமுறை டெங்கு பேயாட்டம் போட்டு வருகின்றது. மழை பெய்தவுடன் மண்ணில் புல், பூண்டு முளைக்கிறதோ இல்லையோ, டெங்கைப் பரப்பும் ‘ஈடிஸ்’ நுளம்புகள் மட்டும் எப்படியோ பெருக்கமடைந்து, படையெடுக்கத் தொடங்கி விடுகின்றன. சட்டென்று அடித்தால், பட்டென்று நசுங்கி விடக்கூடிய இந்தச் சின்னஞ்சிறிய நுளம்புகள், மனித உயிரைக் காவு வாங்குமளவுக்கு வீரியம் கொண்டவை. ஈடிஸ் என்னும் பெண் நுளம்பு டெங்குத் தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து குருதியை உறிஞ்சும் போது, கூடவே டெங்குத் தொற்றையும் வாங்கிக் கொள்கிறது. அப்படியே இன்னும் கொஞ்சக் குருதியைக் குடிக்கும் ஈடிஸ் நுளம்பின் பேராசைதான் மனிதர்களுக்கு டெங்கைப் பரப்ப வழிசெய்து விடுகின்றது. இருப்பினும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள நோயெதிர்ப்பு சக்தியின் தன்மைக்கேற்ப டெங்கின் தாக்கம் வேறுபடலாம். சாதாரண காய்ச்சல் முதல் குருதிப்போக்கு வரை வெவ்வேறு தன்மைகளில் டெங்கின் ஆட்டம் இருக்கும். சாதாரண டெங்குக் காய்ச்சல், வீட்டில் இருந்த படி ஓய்வெடுத்தாலே மாறிவிடக்கூடியது. ஆனால் குருதிப்போக்கு வரை சென்று உயிரைப் பறிக்கும் கடுமையான டெங்குக் காய்ச்சல், மருத்துவமனையில் உரிய சிகிச்சையின்றி அவ்வளவு எளிதில் எம்மை விட்டு விலகிவிடாது. சிக்கல் என்னவென்றால் இந்த சாதாரண டெங்கையும், ஆபத்தான டெங்கையும் ஆரம்பக்கட்டத்தில் வேறுபடுத்தி இனம் காண்பது கடினம். எனினும் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதென்பதை சில அறிகுறிகள் மூலம் ஓரளவு ஊகிக்க முடியும். திடீர்காய்ச்சலுடன் தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, தோல் தடித்து சிவப்பு நிறமாக மாறுதல், குமட்டல், வாந்தி குருதிக் கசிவு போன்றன இருந்தால் அது டெங்காக இருக்க அதிக வாய்ப்புண்டு. வீட்டுக்கு அருகில் டெங்கு நோயாளிகள் இனம்காணப்பட்டிருந்தால் அது டெங்காக இருக்கச் சாத்தியங்கள் அதிகம். உடனடியாக குருதிப்பரிசோதனை செய்து உங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் டெங்கா இல்லையா என்பதை உறுதிப்படுத்துங்கள். டெங்கு காய்ச்சலை இனங்காண வைத்தியசாலையில் குருதிச் சிறுதட்டுகளின் எண்ணிக்கை பரிசோதனை (FBC) முறை மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு நாள்களின் பின் இந்தப் பரிசோதனை செய்யப்படும். சாதாரணடெங்குகாய்ச்சலா அல்லது குருதிப்போக்கு டெங்குக் காய்ச்சலா என்பதை வேறுபடுத்தி இனங் காண வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்குக்காய்ச்சலின் ஆபத்தான குருதிப்போக்கு நிலை சில அறிகுறிகளைக் கொண்ட தாக அமையும்.
அறிகுறிகள்
அதிகமான வயிற்றுவலி, தொடர் வாந்தி, முரசில் இருந்து குருதி வெளியேறல், கருமைநிற மலம், குருதி கலந்த வாந்தி, கைகால் குளிர்தல், உடல் சோர்வு, சிறுநீரின் அளவுகுறைதல் என்பன காணப் பட்டால் அது டெங்கு தீவிரமடைந்ததைச் சுட்டி நிற்கும். இதை அலட்சியமாக விட்டால் மரணம் ஏற்படுவது நிச்சயம். டெங்குக்காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட் டால் அவர் கடினமான வேலைகளைத் தவிர்த்து போதுமான ஓய்வு எடுப்பது அவசியம்.
காய்ச்சல், தவிர்ப்பதும் தடுப்பதும் உடல் வலி என்பவற்றைத் தணிக்க ஆரம்பக்கட்டத்தில் பரசெடமோல் மாத்திரையை எடுத்தல் மற்றும் மிதமான வெந்நீரில் தோய்த்தெடுத்த துணியொன்றால் உடலை நனைத்தல் என்பன டெங்கின் வீரியத்தைக் குறைக்கக் கூடும். ஆயினும் அஸ்பிரின் வலிநிவாரணிகளை இதன் போது முற்றாகத் தவிர்க்க வேண்டும். டெங்குக்காய்ச்சலுடன் வாந்தி ஏற்படுவதால் நீரிழப்பு ஏற்படும். எனவே போதுமான அளவு நீரையும் உட்கொள்ள வேண்டும். இளநீர், பால், எலுமிச்சைச் சாறு, பழங்கள், காய்கறிச்சாறு, அரிசிக்கஞ்சி சூப் போன்றவை சிறந்தவையாகும். குளிரான பானங்களை முற்றாகத்தவிர்க்க வேண்டும். சிறுகுழந்தை களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் அடிக்கடி சிறிதளவு குளுக்கோஸ் கொடுக்க வேண்டும். வாந்தியுடன் குருதிவெளியேறுவதால் சிவப்பு, கபிலம், கறுப்பு நிற உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண் டும். நீர் தேங்கும் இடங்கள், பூச்சாடிகள், சிரட்டை கள், ரயர்கள், வெற்றுப் பேணிகள் என்பன ஈடிஸ் நுளம்புகளுக்கு மிகப்பிடித்த வசதியான இடங்கள். ஏனெனில் நன்னீர் தேங்கும் இடங்களில் தான் அவை முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்ய முடியும். அதனால் அவை அங்கு தங்கள் சந்ததியைப் பெருக்கி, யாருக்கு டெங்கைப் பரப்பலாம் என்று “ரூம் போட்டு யோசித்து தங்கள் காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. எனவே இப்படி நன்னீர் தேங்கும் இடங்கள் என நீங்கள் சந்தேகிக்கும் பொருள்களை அல்லது இடங் களை தேடிக்கண்டுபிடித்து ‘தகர்ப்பதே’ டெங்கை ஒழிக்கும் நடவடிக்கையின் முக்கியமான பணியாகும். காலை 6 மணிக்கு முன்னரும், மாலை 6 மணிக்கு பின்னரும்தான் ஈடிஸ் நுளம்புகள் படையெடுக்கும் நேரம். அந்த நேரங்களில் பாதுகாப்பாக நிலையெடுத்துக்கொண்டால், டெங்கின் தாக்கத்தை ஓரளவுக்கு குறைக்க முடியும்.
கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளைவிடவும் இந்தவருடம் டெங்கின் தாக்கம்யாழில் பலமடங்கு அதிகரித்துள்ளது. தடுக்கி விழுந்தாலும் டெங்கு நோயாளர்கள் மீதே விழுமளவுக்கு, நாளும் பொழுதும் டெங்கால் பாதிப்புறுவோரின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருக்கின்றது. டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் திணைக்களம், உள்ளூராட்சி சபைகள் என்பன தம்மால் இயன்றவு போராடி வருகின்றன. ஆயினும் அதனையும் மீறி விஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் ஆட்டிப்படைத்து அச்சமூட்டி நிற்கின்றது டெங்கு. டெங்கின் தாக்கத்தை கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களையே இழுத்து மூடுமளவுக்கு நிலைமை கட்டுமீறிச் சென்றுகொண்டிருக்கிறது. தனியே சுகாதாரத்திணைக்களமோ, உள்ளூராட்சி அமைப்புகளோ மட்டும் களத்தில் இறங்குவதால் டெங்கைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது. ஒவ்வொரு தனி மனினும் தன் கடமையை உணர்ந்து, தம் வீட்டையும், சுற்றாடலையும் தூய்மையாகப் பேணினாலே தூர ஓடிவிடும் டெங்கு. இந்த மாற்றத்துக்கு நாமெல்லாம் தயாரானால் எதிர்காலத்திலும் டெங்கு எம்மைச் சீண்டக்கூட முடியாத நிலை ஏற்ப டும். எனவே ஈடிஸ் நுளம்பு மீதும், சுகாதாரத் திணைக்களம் மீதும் பழியைப் போட்டு விட்டு வாளாவிருக்காமல், எல்லோரும் ஒன்றிணைந்து டெங்கை ஒழிக்க கரம் கோர்ப்போம்.
ஊடகக் கற்கைகள் மாணவி,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.