அநேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதய நோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
நீரிழிவு நோயாளிகள் தமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும்கூட அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அவையாவன,
- குறைந்த வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல்.
- அதிகரித்த குருதி அழுத்தம்
- நரம்புகள் பாதிக்கப்படுதல்.
- கண்கள் பாதிக்கப்படுதல்.
- பாரிசவாதம்
- சிறுநீரகப்பாதிப்பு : இது நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் இருதய நோய்களுக்கான சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்கும்.
நீரிழிவால் ஏற்படும் இருதய நோய்கள்
- முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்பும் இருதயப்பலவீனமும்
- இருதயத்தசைகள் செயற்பாடிழத்தலும் இருதயப்பலவீனமும்.
முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களால் ஏற்படும் இருதயநோய்கள்
நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் பிரதானமான இருதய நோய்கள் முடியுரு நாடிகளில் அடைப்புகள் ஏற்படுவதாலேயே ஏற்படுகின்றன.
இருதயத்துக்குக் குருதியை வழங்கும் முடியுரு நாடிகளில் கொழுப்புப்படிவுகள் ஏற்படு வதாலும், இந்தக் கொழுப்புப் படிவுகள் உடைந்து குருதிக்கட்டிகள் உருவாவதாலும் இருதயத்தின் அந்தக்குறிப்பிட்ட பகுதிக்கான குருதியோட்டம் தடைப்படுகின்றது. இதனால் அந்தப்பகுதி இறப்படைவதுடன் இருதயத் தொழிற்பாடும் பலவீனம் அடைகின்றது. இது சாதாரணமான ஒருவரிலும் பார்க்க துரிதமாக நீரிழிவு நோயாளி ஒருவருக்கு ஏற்படும்.
இவர்களின் வாழ்க்கை முறைக்கட்டுப்பாடும் குருதியில் குளுக்கோசின் அளவைத் தொடர்ந்து சீரான அளவில் கட்டுப்படுத்தலும், மீள இருதய நோய்கள் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கும் மருந்துகளில் முக்கியமானவை.
- குருதி உறைவதைக் குறைக்கும் மருந்துகள்
- கொழுப்புப்படிவுகளைக்குறைக்கும் மருந்துகள்
- குருதி அழுத்தத்தைச்சீராக்கும் மருந்துகள்
- இருதயத் துடிப்பைக் குறைக்கும் மருந்துகள்
- நீரிழிவு நோய்க்கான மருந்துகள்
என்பவை அடங்கும்.
நீரிழிவுநோயாளிகளில், சிறப்பாகக் குருதி உறைவதைக் குறைக்கும் மருந்துகளும், கொழுப்புப் படிவுகளைக் குறைக்கும் மருந்துகளும் குருதியின் கொலஸ்ரோலின் அளவுகட்டுப்பாடாக இருப்பினும் கூட வழங்கப்படுதல் அவர்களுக்கான இருதய நோய்க்கான வாய்ப்புக்களை குறைக்கும். 10 ஆண்டுகளில் 10வீதத்துக்கும் அதிகமாக இருதய நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்களுக்கு அஸ்பிரின் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
40 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் இருதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகளைக்கொண்டிருந்தாலும் கொண்டிருக்கா விடினும் மருந்துகளுக்கு பரிந்துரைக்கப்புடுவார்கள்.
40 வயதுக்கு உட்பட்ட நீரிழிவு நோயாளிகள் இருதய நோய்க்கான மருந்துக்களுக்குப்பரிந்துரைக்கப்படுவார்கள்.40 வயதுக்கு உட்பட்ட நீரிழிவு நோயாளிகளில் காரணங்கள் எதுவுமற்ற நோயாளிகள் ஆண்டு தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மருத்துவர்.பூ.லக்ஸ்மன்
இருதயநோய் சிகிச்சை நிபுண்ர்,
யாழ்.போதனாவைத்தியசாலை.