இருதய மீள் இயக்கம் எனும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை உங்கள் எண்ணங்களின் தோன்றுவது கண்கூடு. ஆனால் இந்த இருதய மீள் இயக்கம் என்பது உங்கள் அண்மையில் உள்ளவர் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் (அதாவது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முதல்) இதயத்துடிப்பு நிறுத்தப்படுமானால் அவர் இறப்பு நிலைக்கு செல்வதற்கு முதல் அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலான நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் சி.பி.ஆர் என்ற சொற்பதத்தால் வழங்கப்படும் ஒரு அவசர சிகிச்சையாகும். இந்த நிலைக்கு அதாவது இதயத் துடிப்பு நின்ற பின்னும் எழுந்து நடமாடி எங்கள் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கும் எம்மவர் இன்று பலர் உள்ளனர். இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களுக்குத் தேவையான நேரத்தில் தகுதியான மீளளிப்புச் சிகிச்சைவைத்தியசாலைகளில் நடைபெறுவதால் மட்டுமே ஆகும்.
உங்களாலும் முடியும் ஆனால் வைத்தியசாலைக்குப் போக முன்னர் இதயம் துடிக்க மறந்தால், மறுத்தால் வைத்தியரோ, துணைவைத்திய உத்தியோகத்தரோ உங்கள் பக்கத்தில் இல்லாவிட்டாலும் உங்களால் அந்த நோயாளிக்கு நிச்சயமாக உதவமுடியும். உற்றார் யார் உள்ளாரோ அவரால் நிச்சயமாக மிகவும் அத்தியாவசியமான உயிர் காக்கும் இருதய மீளளிப்பு சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்க முடியும்.
இதற்கு ஒரு நல்லெண்ணம் கொண்ட உதவும் மனப்பான்மை பண்மைக்கொண்ட ஒரு மனித உள்ளம் மட்டும் போதுமானது. அத்துடன் அது பற்றிய விழிப்புணர்வும் சில பயிற்சிகளையம் எடுத்திருந்தால் நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வரை அல்லது வைத்தியரோ துணை வைத்திய அதிகாரிகளோ உங்கள் உதவிக்கு வரும் வரை நோயாளியை சாவு நிலைக்குச் செல்லாமல் தடுத்தாட்கொள்ள முடியும்.
செய்ய வேண்டியவை இதயத் துடிப்பு நின்றால் உடலுக்குத் தேவையான குருதி ஓட்டம் உடனடியாகத் தடைப்பட்டுவிடும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் தேவையான ஒட்சிசனும் போசாக்கும் இல்லாமல் இறப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். முக்கியமாக மூளைக்கு 3 – 4 நிமிடங்கள் குருதி ஓட்டம் இல்லாவிட்டால் மீளியங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும். குறித்த 3-4 நிமிடங்களுக்குள் வைத்தியசாலைக்கு நோயாளியைக் கொண்டு செல்வது இந்த இலத்திரனியல் யுகத்திலும் முடியாத ஒன்று தான். இதற்கு நீங் கள் செய்ய வேண்டியது இதயம் மீளியங்கத் தொடங்கும் வரை அவரது இதயத்தை வெளிப்புறமாக அமத்தி குருதி ஓட்டத்தை ஏற்படச் செய்வதும் சுவாசப் பாதையைச் சீர் செய்து காற்றில் இருந்து தேவையான ஒட்சிசனைக் கிடைக்கச் செய்வதும் தான். இதற்கான பயிற்சி நெறிகள் உலகெங்கிலும் உற்றார் இருதய மீளளிப்புப் பயிற்சி என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது.
வட மாகாணத்திலும் இது பல்வேறு பிரிவினரின் உதவியுடன் ஒத்தாசையுடனும் உணர்வழியியல் மருத்துவர்களின் வழிகாட்டலின் கீழும் அர்ப்பணிப்பாண சேவைகளாலும் பல இடங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே பல பாடசாலைகளிலும் இது நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் பல பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் பொருட்டு ஒரு விழிப்புணர்வு தினமாக பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்தமுறை யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கார்கில்ஸ் கட்டடத் தொகுதியின் முதலாம் தளத்தில் 16ஆம் திகதியன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கலந்து கொண்டு உயிர் காக்கும் பணியில் உங்களின் பங்கினைப் பெருக்கிக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
1. சோதித்தல்
- பாதிக்கப்பட்டவரை அணுகுவதற்கு உங்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா என உறுதிசெய்யவும்.
- பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருக்கின்றாரா என சோதித்துப்பார்க்கவும்.
- தலையை நிமிர்த்துங்கள், நாடியைப் பிடித்து உயர்த்துங்கள், சுவாசம் இருக்கின்றதா எனச் சோதிக்கவும்.
- சுவாசம் இல்லாவிடின் அல்லது சுவாசம் அசாதாரணமாக இருப்பின் இருதய சுவாச மீள் இயக்கும் செயல் அவசியம்.
2. அழைத்தல்
- அவசர மருத்துவ சேவையினை அழையுங்கள், அறிவுறுத்தலின்படி செயற்படுங்கள்.
- வேறுயாராவது அழைப்பை ஏற்படுத்த இருந்தால், அவரை அழைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
- இதயத்துக்கு அழுத்தம் கொடுப்பது உயிர்வாழ்வதற்கு மிகவும் அவசியம்.
- இருதயத்துக்கு அழுத்தம் கொடுப்பதை தாமதிக்கவோ அல்லது இடைநிறுத்தவோ வேண்டாம்.
3. அழுத்தம் கொடுத்தல்
- இரு கைகளையும் நடு நெஞ்சின் மேல் வையுங்கள்.
- நெஞ்சை 5 – 6 cm அளவு கீழே செல்லக்கூடியதாகவும், ஒரு நிமிடத்துக்கு 100 – 120 தடவயும் அழுத்துங்கள்.
- நீங்கள் வாயினால் செயற்கை சுவாசம் கொடுக்க முடியுமானால் ஒவ்வொரு 30 இருதய அழுத்தத்திற்குப் பிறகு 2 தடவை செயற்கைசுவாசம் கொடுங்கள் அல்லது தொடர்ந்து இருதயத்திற்கு அழுத்தத்தைக் கொடுங்கள்.
- கடினமாகவும் விரைவாகவும் அழுத்தத்தைப் பிரயோகிக்கவும். ஏதாவது தீங்கு விளையும் எனக் கவலையடையத் தேவையில்லை.
- தானியங்கி இருதயத் துடிப்பு ஒழுங்காக்கி கிடைக்குமானால் உடனடியாக அதனை இயங்கச் செய்து அதன் அறிவுறுத்தலின்படி செய்யவும்.
- அவசர மருத்துவப் பிரிவு வந்தவுடன் அவர்கள் உங்களை நிறுத்தவும் என சொல்லும் வரை தொடர்ந்து இருதய அழுத்தத்தை கொடுக்கவும்.
- நன்றாகச் செயற்பட்டு உள்ளீர்கள். உயிர்களை காப்பாற்றுவதற்கு ஏதாவது செய்வது ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட எப்பொழுதும் மேன்மையானது.
மருத்துவர்.வசுமதி தேவநேசன்,
சிறப்பு மருத்துவ நிபுணர்.