இலங்கையில் தொற்றா நோயானது பெரிய பொதுச்சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. தொற்றாநோயானது இறப்புகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது. பெரும் பாலானவர்கள் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தொற்றாநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
நோய் அதிகரிப்பும் செலவீனங்களும்
இந்த நோய்கள் துரிதமாக அதிகரித்து வருவதனால் சுகாதார வரவு-செலவுத் திட்டத்தின் பெருமளவு நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது. தொற்றா நோய்களை ஆரம்பத்தில் கண்டறிதல் தொற்றாநோய்களுக்கான சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களின் சிக்கல் நிலமைகளை பராமரித்தல் போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளன. தொற்றாநோய்களும் மற்றைய நோய் களைப் போன்றே வருமுன் காத்தல் சிறந்ததாகும்.
இலங்கையைப் பொறுத்த வரை நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம், புற்றுநோய்கள் என்பவை முக்கியமான தொற்றா நோய்களாக உள்ளன. இவற்றுக்கான ஆபத்து காரணிகளை ஆரம்பத்தி லேயே தவிர்த்தல்தான் சிறப்பான பாதுகாப்பு நடைமுறையாகும். இந்த கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தி சமூகத்தில் முன்மாதிரியாக ஆபத்துக்காரணிகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் வழிமுறைகளை சுகாதார அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கண்டறியும் வசதியை அளிப்பதன் மூலம் தடுப்பு மற்றும் கட் டுப்பாட்டு நடவடிக்கைகளின் அளவை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மையங்கள் சகல சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மையங்களின் தோற்றம் தொற்றா நோய்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கையின் சுகாதார ஊட்டச் சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு 2011ஆம் ஆண்டில் பசுமையான “ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மையங்கள்” என்ற திட்டத்தை அறிமு கப்படுத்தி நடாத்திவருகின்றது. ஆரோக் கியமான வாழ்க்கைமுறை மையங் கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதில் தொற்றா நோய்களை கண்டறிவதற் கான வைத்திய பரிசோதனைகள் ஆய்வு கூடப் பரிசோதனைகள் மற்றும் அவசியமான மருந்துகள் என்பன கிடைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளன.
தொடர்பான ஆபத்து காரணிகளின் ஆரம்பக் கண்டறிதல் மூலம் தொற்றா நோய்கள் ஆரம்ப நிலையிலேயே தடுக் கப்படலாம் அல்லது நிர்வகிக்கப்படலாம். மேலும் சிக்கல் தன்மை ஏற்படுவதை தடுத்து அதிக விலையுயர்ந்த சிகிச்சை யின் தேவையை குறைக்கும். நாடு முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைமையங்கள் நிறுவப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஆரோக்கிய மான வாழ்க்கை முறை மையமும் வாராந்த அடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் செயற்படு கின்றது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மையங்களின் எண்ணிக்கையானது வேகமாக அதிகரித்து வருவதனால் இலக்கு வைக்கப்பட்ட மக்கள் தொகையை 2011ஆம் ஆண்டில் 2.5 சதவீதத்திலிருந்து 2018ஆம் ஆண்டில் 25 சதவீதமாக உயர்த்தியது.
நோய்கள் தொடர்பான புரிதல்கள் அவசியம்
ஒருமுறை ஆரோக்கியமான வாழ்க்கை முறைமையத்துக்குச் சென்று வந்தால் தொற்றாநோய்களைத் தடுக்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளைப்பற்றி நல்ல புரிதல் ஏற்படும். 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் தொற்றா நோய்களை 25 சதவீதம் குறைப்பதன் மூலம் உலகளாவிய இலக்கை அடைவதற்கு சுகாதார அமைச்சுஉறுதியளித்துள்ளது.முதன்மை சுகாதார பாதுகாப்பு மட்டத்தில் தொற்றா நோய்களை எதிர்த்து நாட்டின் பரந்த அணுகுமுறைக்கு இது முக்கிய பங்கை வழங்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மையமானது குறைந்தது வாரம் ஒரு முறை காலை 8 மணி முதல் 12 மணி வரை நாளாந்தம் குறைந்தது 20 பேர் பங்குபற்றுவது எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் மருந்து விநியோகிப்பவர் கடமையாற்றுவார்கள். இங்கு 35-65 வயதினருக்கான தொற்றா நோய்களுக்கான ஆபத்து காரணிகளுக்கான வைத்திய மற்றும் ஆய்வுகூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மையத்துக்கு வருகை தரும் அனைவரினதும் தனிப்பட்ட சுகாதார விவரங்களை சேகரிக்கப்பட்டு தனிப்பதிவேடு வழங்கப்படுகின்றது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மையங்களில் குருதியில் சீனிபரிசோதனை,குருதி அழுத்தம் மற்றும் உடலின் உயரத்திற்கேற்றதான நிறை தொடர்பான கணிப்பீடு போன்றவற்றின் மூலம் நோய்க்கான ஆபத்து நிலைகளைகண்டறிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புகையிலை மற்றும் மது நுகர்வு குறைந்த உடலுழைப்பு நிலை, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் குடும்ப வரலாறு போன்ற காரணிகளையும் நாங்கள் ஆராய்கின்றோம். தொற்றா நோய்க ளைத் தடுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்களின் முன்னேற்றத்தை சோதித்துப் பார்க்கவும் இந்த நிலையங்கள் உதவுகின்றன. மேலதிக மாக மார்பு புற்று நோய்க்கான வைத்திய பரிசோதனை, தைரோயிட் வைத்திய பரிசோதனை என்பனவும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்க்கை பற்றிய சுகாதாரக்கல்வியும் வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த சேவையினைப் பெறும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பொதுவாக ஆண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது. பெரும்பாலும் அக்கறையீனமும் காரணமாக உள்ளது. தொற்றா நோய்கள் ஏற்படும் அதற்கான வைத்தியசாலைகளை நோக்கி அலைவதனை விட ஒருநாள் நேரம் ஒதுக்கி ஆரம்பத்திலே கண்டறிதல் சிறந்ததாகும். நடைமுறை வாழ்க்கையில் பின்வரும் வழிமுறைகளை கடைப்பிடித்தல் தொற்றா நோய்களுக்கான ஆபத்துக் காரணிகளை தவிர்க்க முடியும். காலை உணவை தவிர்க்க வேண்டாம், வழக்கமான உணவு நேரங்களில் சாப்பிடுங்கள், பழம் மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிடுங்கள், மதுவை தவிருங்கள், உங்கள் உணவைத் திட்டமிடுங்கள். இவையே அந்த வழிமுறைகள்
வைத்திய கலாநிதி கோ.றஜீவ்
தொற்றாநோய் தடுப்பு வைத்திய அதிகாரி,
யாழ்ப்பாணம்