Diabetic Center Jaffna Teaching Hospital
Diabetic Center Jaffna Teaching Hospital

Preview WordPress themes designed by wpthemepremium.com

  • முகப்பு
  • வெளியீடுகள்
    • புத்தகங்கள்
    • இறுவட்டுக்கள்
  • ஒளிப்பதிவுகள்
    • காணொளிகள்
    • படங்கள்
  • பிரதிபலிப்பு
  • உறுப்புரிமை
  • தொடர்புகளுக்கு
  • About us

    The Diabetic Centre of Jaffna Teaching Hospital was established with the help of Ministry of Health and International Medical Health Organization (IMHO) in year 2009.
    Read more
    • History
    • Activities
    • Staff Details
    • Achievements
  • Calendar

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Apr    
  • அங்கத்தவர்கள்

    அங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்

  • ஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


    இந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.



நீரிழிவு அபாயகரமானது!

என்றுமில்லாதவாறு இன்றைய கால நகர்வில் நீரிழிவு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இதன் தாக்கம் அதிகரித்துச் செல்கிறது. இலங்கையில் வளர்ந்தவர்களில் 10 இற்கு ஒன்று என்ற விகிதத்தில் நீரிழிவு காணப்படுகிறது. முன்பு வயது வந்தவர்களில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நோயானது, தற்போது பதின்மவயதினரையும் தாக்குகின்றது. இது உடலிலுள்ள பல முக்கிய அவயவங்களைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. அபாயகரமான நோயாகக் காணப்படுகின்ற போதும் அதிக கரிசனையோடு இருந்தால் நீழிரிவு ஏற்படாமல் தடுக்க முடியும்.

வகைப்பாடு

நீரிழிவு இரண்டு வகைப்படும். இதில் முதலாம் வகை நீரிழிவானது சிறுவயதினரைத் தாக்கும் தன்மையுடையது. இது அரிதாகவே ஏற்படுகின்றது. உடலின் நீர்பீடனத் தொகுதியின் தாக்கத்தால் சதையச்சுரப்பியிலுள்ள கலங்கள் அழிவடைவதால் இது ஏற்படும். இந்த நோயாளிகள் வாழ்க்கை முழுவதும் ஆரம்பத்திலிருந்தே இன்சுலின் மருந்தை கிரமமாக ஏற்றவேண்டும். இரண்டாம் வகை நீரிழிவானது மிகவும் பொதுவானது. இது பற்றி இந்தப் பகுதியில் நோக்குவோம். உடல் நிறை கூடுதல், உடற்பயிற்சியின்மை, அதிக கலோரியுள்ள உணவு உண்ணுதல் போன்ற காரணங்களால் உடலில் இன்சுலினிற்கு எதிர்ப்பு ஏற்படுவதால் தான் நீரிழிவு ஏற்படுகின்றது.

நீரிழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்

முற்காலத்தில் மனிதர்கள் உடலுழைப்பை நம்பிதொழில் செய்தார்கள். வீட்டையும் வேலைத் தளமாகவே கருதி ஓய்வின்றி உழைத்தார்கள். இதனால் உண்ணும் உணவிலுள்ள சக்தி செலவழிந்தது. அவர்களுடைய உடற்பருமன் அதிகரிக்கவில்லை . நீரிழிவு ஏற்படவில்லை. ஆனால் இன்றைய காலநகர்வில் பல தொழில்களில் உடலுழைப்பைக் காணமுடிவதில்லை. வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளோடும், கணினித் திரைகளோடும்அ அதிகம் நட்புப் பாராட்டி காலத்தைக் கழிப்பதால் உடற்சக்தி செலவிடப்படுவதில்லை. நாம் உண்ணும் உணவிலும் அதிக சீனியுள்ள, இலகு வாகச் சமிபாட்டையக்கூடிய, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் குருதியிலுள்ள குளுக்கோஸின் அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்படுகிறது. தாய், தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் ளுக்கு நீரிழிவு இருக்குமாயின் அது உங்களுக்கும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது.

நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள்

நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாவிடில் உடலிலுள்ள எல்லாத் தொகுதிகளையும், எல்லா அங்கங்களையும் அது பாதிப்படையச் செய்யும். நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்தத் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

உதாரணமாக கட்டுப்பாடில்லாத நீரிழிவு நாளடைவில் சிறுநீரகத்தைக் தாக்குகின்றது. இதனால் சிறுநீரகங்கள் செயலிழந்து பாதிக்கப்பட்ட நோயாளி குருதிச் சுத்திகரிப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். பின்பு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

உலகம் முழுவதும் சிறுநீரகப் பாதிக்குக்கு முதன்மை யான காரணம் நீரிழிவாகும். நீரிழிவுக்குப் பாவிக்கப்படும் மெற்போமின் போன்ற மருந்துகளால் ஒருபோதும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதில்லை . இதில் எந்த உண்மையும் இல்லை. கட்டுப்பாடில்லாத நீரிழிவே சிறுநீரகப் பாதிப்புக்குக் காரணமாக அமைகிறது. தவிர நீரிழிவு
கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. கண்களைப் பாதிக்கலாம் என்பதால் கிரமமாக கண்களைப் பரிசோதிக்க வேண்டும். மாரடைப்பு, பாரிசவாதம், கால்களில் மாறாத புண்கள் ஏற்படுதல் போன்ற பல பாதிப்புக்கள் நீரிழிவால் ஏற் படலாம்.

நீரிழிவில் இருந்து பாதுகாப்பு

முறையான உடற்பயிற்சி மூலமும், உணவுக்கட்டுப்பாடு மூலமும் நீரிழிவு ஏற்படாமல் தடுக்கலாம். ஒருநாளைக்கு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அவசியமாகும். விரைவாக நடத்தல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகள் போதுமானதாகும். உணவைப் பொறுத்தவரை சீனி சேர்க்கப்பட்ட, இனிப்புச் சுவையுள்ள உணவுப் பொருள் களைத் தவிர்க்க வேண்டும். சீனி மட்டுமல்லாமல் சர்க்கரை, கற்கண்டு, தேன், கருப்பட்டி போன்ற இனிப்பான பொருள்களும் தீங்கானவை. மென்பானங்கள் அதிக குளுக்கோசைக்கொண்டிருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

ஆசிய நாட்டவர்களாகிய நாங்கள் சோறு, பாண், அரிசி, மா, கோதுமை மாவால் செய்யப்பட்ட காபோவைதரேற்றுக்கள் அதிகமுள்ள உணவுப் பொருள்களை அதிகமாக உண்கிறோம். இதனால் உடல்நிறை அதிகரித்து நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. எனவே அதிக புரதச் சத்துக்கள் பருப்பு, பயறு, கெளபி போன்ற உணவுகளை அதிகமாக உண்ணவேண்டும். சோறு, இடியப்பம், பாண் போன்ற உணவுகளின் அளவைக் குறைத்து, மரக்கறி வகைகளை அதிகம் சேர்த்து துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிக்கு மட்டும் உணவுக்கட்டுப்பாடு என்றில்லாமல் குடும்பத்திலும் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு அவசியமாகும். பெரிய பாத்திரத்தில் உண்ணாமல் சிறிய பாத்திரத்தில் உண்பதன் மூலம் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குருதியமுக்கம் என்பவற்றை ஒரு மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வருடம் ஒரு முறையாவது இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு ஏற்பட்ட ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்!

மேற்குறிப்பிட்டவாறு உணவுக்கட்டுப்பாட்டுடன் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 3 மாதத்துக்கு ஒருமுறையாவது மருத்துவரை அணுகிப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்க வேண்டும். வருடம் ஒருமுறை கண்கள், சிறுநீரகம் என்பவற்றைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

முடிவாக நீரிழிவு நோய் அபாயகரமானது. பல பாதிப்புக்களை நோயாளிக்கு ஏற்படுத்தி விடக்கூடியது. ஆனால் நாம் கவனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளலாம். நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கூட மருத்துவரின் உதவியுடன் ஒழுங்காக மருந்துகளை எடுப்பதன் மூலமும், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மூலமும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

எஸ்.கேதீஸ்வரன்
பொது மருத்துவ நிபுணர்,
யாழ்.போதனா மருத்துவமனை.

Posted in கட்டுரைகள்
« போட்டிகளுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது!
நீரிழிவு நடைபயணம் »

Comments are closed.

Copyright © 2014-2021 Diabetic Center Jaffna Teaching Hospital. All rights reserved.
Solution by Speed IT net
Indianapolis Premium Wordpress Themes Designed by Wpthemepremium.com