பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையம் பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இவை வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நிகழ்வுகளாக இடம்பெறும்.
கட்டுரைப் போட்டிகள் கனிஸ்ட, இடைநிலை மற்றும் சிரேஷ்ட வயதுப் பிரிவு ரீதியாக இடம்பெறவுள்ளன. கனிஸ்ட பிரிவில் தரம் 1 முதல் தரம் 5வரையான மாணவர்களும், இடை நிலைப் பிரிவில் தரம் 6 முதல் தரம் 9 வரையான மாணவர்களும், சிரேஷ்ட பிரிவில் தரம் 10 முதல் க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களும் கலந்துகொள்ள முடியும்.
மூன்று வயதுப் பிரிவினரும் “ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து நீரிழிவை வெற்றி கொள்வோம்” எனும் தலைப்பில், முறையே 250, 500, 1000 சொற்களை உடைய ஆக்கங்களை சுயமாகப் படைக்க வேண்டும்.
இதேபோன்று சித்திரப் போட்டி நிகழ்வானது கட்டுரைப் போட்டி நிகழ்வு போன்றே மூன்று வயதுப் பிரிவினருக்குமாக இடம்பெறும். “நீரிழிவை வெற்றி கொள்வோம்” என்ற தொனிப்பொருளை பிரதிபலிக்கும் வகையில் ‘ஏ – 3’ சித்திரத் தாளில் விரும்பிய வர்ண வகைகளைப் பயன்படுத்தி சித்திரங்களை வரைய முடியும்.
போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை, மேற்படி போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆக்கப் பிரதிகளோடு இணைத்து எதிர்வரும் மார்கழி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ். போதனா மருத்துவமனை எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.