மாரடைப்பு என்றால் என்ன?
எமது இதயம் சக்தி வாய்ந்த பம்பியாகச் செயற்பட்டு உடல் முழுவதற்கும் குருதியை வழங்குகின்றது. இதயத் தசைக்கு குருதி வழங்கும் முடியுரு நாடிகள் (coronary arteries) ஒட்சியேற்றப்பட்ட குருதியைத் தேவையான அளவு வழங்குவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாகப் பேணுகின்றன. இரத்தக் கட்டி அடைத்தல், கொலஸ்ரோல் படிவு, முடியுரு நாடியின் சுவரில் ஏற்படும் சுருக்கம் என்பவற்றால் முடியுரு நாடியில் இரத்தோட்டம் தடைப்படுவதால் முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் தசைப்பகுதியில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி நிரந்தரமான பாதிப்புக்கு உள்ளாகின்றது. இந்நிலையே மரடைப்பு ஆகும்.
மாரடைப்பு ஏற்படுவதைத் தூண்டும் காரணிகள்
1. மாற்றமுடியாத காரணிகள்
வயது, பால் (sex), குடும்பத்தில் நெருங்கிய உறவினர் மாரடைப்பால் பாதிக்கப் பட்டிருத்தல்
2. மாற்றக்கூடிய காரணிகள்
குருதியில் அதிகரித்த கொழுப்பின் அளவு, சிகரெட் புகைத்தல், உயர் குருதி யமுக்கம், நீரிழிவு, போதிய உடற்பயிற்சி இன்மை, உடற்பருமன், சில வகை மருந்துகள் (உ+ம்:- கர்ப்பத்தடை மாத்திரைகள்), அதிக மதுபாவனை
மாரடைப்பின் அறிகுறிகள்
நெஞ்சுப் பகுதியில் மிக இலேசான அசௌகரியம் முதல் கடுமையான நெஞ்சுவலி வரை அறிகுறிகள் வேறுபடலாம்.
நடுநெஞ்சுப்பகுதியில் மார்பெலும்புக்குப் பின்னால் பாரமான அல்லது இறுக்குவது போன்ற அல்லது எரிவுத் தன்மையான வலி ஏற்படும். இவ்வலி கைகள், கழுத்து, தாடை, முதுகு, மேல்வயிறு நோக்கிப் பரவலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஓர் இடத்தில் மட்டும் ஏற்படலாம்.
இத்துடன் வயிற்றுப்பிரட்டல், வாந்தி, அதிக வியர்வை, மூச்சு விடுவதில் சிரமம் என்பனவும் ஏற்படலாம். சிலா் இவ் அறிகுறிகளை சமிபாட்டுக்குறைவு என்று தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.
சிலரில் வலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம். இந்த நிலை பொதுவாக நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும். உடனே வைத்திய சாலைக்குச் சென்று முறையான வைத்திய பரிசோதனைகளுக்கும் ECG மற்றும் குருதிப்பரிசோதனைக்கும் உட்படுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படவில்லலை என்பதை உறுதி செய்வதே பாதுகாப்பானதாகும்.
நெஞ்சு நோவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒருவருக்கான சிகிச்சை
முதலில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு விரைவான மதிப் பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
வைத்தியரும், தாதி உத்தியோகத்தரும் நோயாளியின் குணங்குறிகளையும், நோய் பற்றிய சரிதையையும் அறிந்து கொள்கின்றனர். தேவையான உடற்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ECG மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. இதே நேரத்தில் வலி நிவாரணிகள், ஒட்சிசன் என்பனவும் வழங்கப்படுகின்றன.
மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் நோயாளி இதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகின்றது. மாரடைப்பு ஏற்படும் முதல் 48 மணிநேரத்துக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டு உயிர் ஆபத்து நிகழலாம் என்பதாலும் நோயாளி அதிதீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்.
ECG மற்றும் குருதிப்பரிசோதனைகள் நோய் நிர்ணயத்தில் உதவுதல்.
மாரடைப்பு ஏற்படும் போது ECG யில் பிரத்தியேகமான சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம் மாற்றங்களைக் கொண்டு முடியுருநாடிகள் பகுதியாகவோ அல்லது முற்றாகவோ தடைப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குருதிப் பரிசோதனையின் போது நோயாளியின் குருதியில் உள்ள Troponin என்ற புரதத்தின் அளவு மதிப்பீடு செய்யப்படுகின்றது. இப்புரதம் சாதாரணமாக இதயத்தசைக் கலங்களின் உள்ளே காணப்படுகின்றது. இதயத்தசை பாதிப்புக்குள்ளாகும் போது இப்புரதம் குருதிக்குள் விடுவிக்கப்படுகின்றது. Troponin குருதிப் பரிசோதனை Positive ஆயின் அது இதயத்தசை சேதமடைந்திருப்பதை உறுதி செய்கின்றது. குருதியில் உள்ள அதிகரித்த Troponin அளவைப் பாதிப்பு நிகழ்ந்து 4-6 மணிநேரத்துக்குள் கண்டறிய முடியும்.
இது தவிர இதயத்தசைக் கலங்களின் உள்ளே காணப்படும் வேறு சில நொதியங்களின் அளவைக் குருதியில் அளவிடுவதன் மூலமும் இதயத்தசையில் சேதமேற்பட்டிருப்பதை உறுதிப்படுத்த முடியும்.
மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை அளித்தல்
இரத்த கட்டியைக் கரைப்பதற்கான Thrombolysis மருந்து உட்செலுத்தப்படுகின்றது. இம் மருந்து இரத்தக் கட்டியைக் கரைத்தால் தடைப் பட்டிருந்த முடியுருநாடியின் குருதியோட்டம் சீர்செய்யப்படுகின்றது.
இதனால் இதயத் தசையில் பாதிக்கப்பட்ட பரப்பளவு மட்டுப்படுத்தப்படுவதுடன் அதன் அயற்பகுதிகளோ அல்லது அந்த முடியுரு நாடியால் குருதி வழங்கப்படும் இதயத்தின் மற்றைய பகுதிகளோ பாதிக்கப்படுவது தடுக்கப்படுகின்றது. அத்துடன் அடுத்தடுத்த மாரடைப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.
இந்தச் சிகிச்சை முறை மாரடைப்பு ஏற்பட்டு முதல் 12 மணித்தியாலயத்திற் குள் வழங்கப்படின் மிகவும் நற்பயன் அளிக்கக்கூடியதாகும். அதிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஓரிரு மணி நேரத்திற்குள் வழங்கப்படின் இரத்தக்கட்டி முற்றாகக் கரைவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இதனால் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைகின்றது. எனவே நெஞ்சு நோ ஏற்பட்ட உடனே வைத் தியசாலையை அணுகுதல் நோயாளியின் நலனைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான விடயமாகும்.
இந்த வகையான சிகிச்சை முறை யாழ். மாவட்டத்தில் போதனா வைத்திய சாலையிலும், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை, சாவகச்சேரி ஆதாரவைத்திய சாலை என்பவற்றில் மட்டுமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர இதயத் தொழிற்பாட்டை மேம்படுத்துதல், இதயத்துடிப்பு வேகத்தையும் குருதி அமுக்கத்தையும் குறைப்பதன் மூலம் இதயத்தசையின் வேலைப் பளுவைக் குறைத்தல், குருதியிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைத்தல், குருதி யிலுள்ள குளுக்கோசின் அளவை மட்டுப்படுத்துதல் என்பவற்றுக்குரிய மருந்துகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கங்கள் பற்றி ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
மாரடைப்புக்கான சிகிச்சையில் Echo Cardiogram இன் பங்கு
அதிவேக ஒலியலைகள் செஞ்சறைக்கூட்டினூடாக இதயத்தினுள் செலுத்தப் படுகின்றன. இதன் மூலம் இதயத்தின் அறைகளின் அளவு, இதயத்தசையின் தடிப்பு, இதயத்தின் தொழிற்பாட்டுத்திறன், இதய அறைகளில் சுவர்களின் சுருக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு, வால்புகளில் ஏற்பட்ட பாதிப்பு, இதயத்தினுள் இரத்தக் கட்டி காணப்படுகின்றதா இதயத்தைச் சுற்றி திரவம் காணப்படுகின்றதா, என்பன போன்ற விடயங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பிக்கலாம்.
Exercise ECG செய்யப்படுவதன் நோக்கம்
மாரடைப்பு ஏற்பட்டு 6 வாரங்களினுள் Exercise ECG மேற்கொள்ளப்படு கின்றது. இதன் போது உடற்பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தையும் அப்போதுECGஇல் ஏற்பட்ட மாற்றத்தையும் கொண்டு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பின் அளவை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு இனங்காணப்பட்ட நோயாளிகளுக்கு Coronary Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
Coronary Angiogram என்றால் என்ன?
இரத்தக் குழாயினுள் விசேட சாயமூட்டியைச் செலுத்தி இதயத்தின் முடியுரு நாடிகளின் இரத்தோட்டத்தை அறிதலாகும். இதன் மூலம் பெறப்படும் படங்கள் முடியுரு நாடிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளின் அளவு, அமைவிடம், அதன் தீவிரத்தன்மை பற்றித் துல்லியமாக தெளிவுபடுத்துகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நோயாளியினதும் இதயநோயின் தாக்கத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகள் தெரிவு செய்யப்படுகின்றன. அவையானவ
Medication – மருந்து மூலமான சிகிச்சை
Balloon Angioplasty and surgery stenting
Coronary artery – by- pass surgery
மனதிற் கொள் வேண்டியவை
மாரடைப்பு உயிராபத்தானது
மேற்கூறிய குணங்குறி உடையவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று ECG பரிசோதனைகள் மேற்கொண்டு மாரடைப்பு இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன் வைத்தியசாலையை அணுகுவதன் மூலம் மாரடைப்பால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
மருத்துவர் :- எம்.குருபரன்
இதய சிகிச்சை நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை