ஆலயங்களும் விருந்தோம்பல் பண்பும்
ஆலயங்களில் திருவிழாக்கள் ஆரம்பித்துவிட்டாலே இறைத்துவம் எங்கும் தழைத்தோங்கும். பக்தியின் திருப்பொலிவு அவ்வூர் எங்கும் அமைதியை செந்தளிக்கும். மனம், வாக்கு, காயத்தால் அடியவர்கள் அனைவரும் இறையருளின் சித்தமாய் அருள் மணம் கமழ்வர். சாந்த சொரூபமாய் திருத்தொண்டுகள் பல செய்வர். ஆம், ‘அன்னதானம் வழங்கல், தாகசாந்தி செய்தல்’ என விருந்தோம்பல் பண்பு ஆலய சுற்றுப் புறச் சுழலில் தனித்துவப் பேறு தரும்.அடியவர்களை அன்பால் அரவணைப்பது ஆங்கு சுற்றம் பேணலாய் திருநிலைபெறும். ஆலயச் சூழலில் நிலைப்படுத்தப்படுகின்ற மேற்படி கைங்கரியங்கள் யாவும் தொன்றுதொட்டே எம்மவர்களால் ஆற்றப் பட்டுவருகின்ற ஆன்மிகத்தின்பாற்பட்ட புண்ணிய காரியங்களாக விளங்குகின்றன. அதன்வழியே அடியார்கள் இறை தரிசனமும் விருந்தோம்பலின் நிறையன்பும் கண்டுகொள்கின்றனர். உடல் அயர்ச்சி நீங்கப் பெற்று உற்சாகமாக வீடு திரும்புகின்றனர். திருத்தொண்டில் ஈடுபட்டோரும் மனதளவில் பண்பால் உய்வுறுகின்றனர்.
செயல் நேர்த்தி வேண்டும்
ஆக, இந்தச் சந்தர்ப்பங்கள் அவதானத்துக்குரியவை. காரியங்கள் யாவும் புனிதத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை காலமும் பக்குவத்தோடும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், தகுந்த மேற்பார்வையோடும் இததொண்டுகள் ஆற்றப்பட்டுவந்தமை மகிழ்ச்சி தரும் விடயம். எடுத்துக்கூறக் கூடிய வகையில் எதுவிதமான அசம்பாவிதங்களும் கடந்த காலங்களில் இடம்பெறவில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளமையை அச்சு ஊடகங்கள் வாயிலாக அறிந் துகொள்ள முடிந்துள்ளது. இது குறித்து சிந்தனையும் விழிப்புணர்வும் பெற வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். இன்றைய இயந்திரத் தனமான வாழ்க்கைப் பயணத்தின் கால நகர்வில் நாம் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் உளப்பக்குவத்தையும் செயல் பக்குவத்தையும் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறன்றி மேற்படி இறைத்துவம் உடைய ஆன்மிகச் செயற் காரியங்களை ஆற்றும் போதும், அவற்றைப் பரிமாறும் போதும் பக்குவத்தன்மையை பேணிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லாது போனால் உணவு தொற்றுகைக்குள்ளாகின்றது. தொற்றுகைக்குள்ளான உணவை உட்கொள்வோர் பலவிதமான வயிற்று உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். நோயுறும் நிலையை அடைகின்றனர். நோய்த் தொற்றுகையின் தீவிரம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெரும் எண்ணிக்கையானோருக்கு மருத்துவசேவையை வழங்குவதில் இட நெருக்கடி நிலைஏற்படும்கிறது. இதன் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இயல்பாகவே கிடைக்கவேண்டிய மருத்துவ சேவையில் காலதாமதமும் சிரமமும் ஏற்படுகிறது. பெரும் எண்ணிக்கையான அடியவர்களுக்கு இவ்வாறான இடர்பாடுகள் நிகழாவண்ணம் இருப்பதை உறுதிசெய்வதற்கு பல விடயங்கள் குறித்து நாம் அவதானம் கொள்ளவேண்டும். குறிப்பாக ஒரு சிறிய இடத்தில் உணவை தயார் செய்யும் போது, “இடச் சுத்தம், தனிநபர் சுத்தம், உணவு கையாளுவதில் சுத்தம், உணவு பரிமாறலில் சுத்தம்’ என்பன தொடர்பில் அதீத கரிசனையும் செயல் நேர்த்தியும் வேண்டப்படுகிறது. ஆன்மிகத்தின் சிறத்தலாய்தானங்களை செய்வதானால் உளத்தூய்மையுடனும். செயல் தூய்மையும்டனும் செயலாற்றவேண்டும். அப்போது வேண்டிய நன்மைகள் அத்தனையும் நிறைவாகக் கிடைக்கும். இறை ஆசி என்றும் நிலைத்திருக்கும்
அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்
ஆகவே, “அன்னதானம், தாகசாந்தி மற்றும் பெரும்படிச் சமையல்” போன்ற திருத்தொண்டுகளை செய்கின்ற வேளைகளில் தூய்மையான,பாதுகாப்பான உணவு வழங்கலை மேற்கொள்ள முயற்சிப்போம். இதற்கு பின்வரும் அடிப்படைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் நன்று.
- அன்னதான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு முன்பாகவே அப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரிக்கோ அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கோ (PH) அறிவித்தல் வேண்டும். அவர்களின் ஆலோசனைகளின் படி ஆயத்தங்களை மேற்கொள்ளுதல் நன்று.
- பாவனைக்கிணற்றை குளோரின் இட்டு சுத்தமாக்கி இறைத்தல் வேண்டும். அவ்வாறே நீர் சேமித்து வைக்கும் நீர்த்தாங்கியையும் குளோரின் கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும். இதன் மூலம் சுத்தமான நீர் உபயோகத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.
- உணவு தயாரிப்பதற்கு அனுபவமுள்ள, குடிப்பழக்கமற்ற, பாதுகாப்பான உணவு வழங்கலை உறுதி செய்யக்கூடிய உணவு கையாள்வோருக்கான தகுதி மருத்துவச் சான்றிதழை பெற்றுக்கொண்டவர்களையே பணிக்கமர்த்த வேண்டும்.
- உணவு தயாரிப்பதற்கு முன்பாகவும், உணவைப் பரிமாறுவதற்கு முன்பாகவும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டுக்கழுவிக் கொள்ள வேண்டும்.
- உணவு தயாரிப்பிலும் பரிமாறலிலும் ஈடுபடுவோர் கூடுமானவரை தனி மனித சுகாதார நிலையை பேணிக் கொள்ளவேண்டும். குறிப்பாக, ‘தலைமயிர், நகங்களை கட்டையாக வெட்டுதல், சுத்தமான பருத்தி ஆடையை அணிதல் போன்ற சுகாதார கடமைகளை குறிப்பிடலாம்.
- பாவிக்கப்படும் உணவுப் பொதிகளில் பொறிக்கப்பட்ட காலாவதியாகும் திகதியை கவனத்தில் கொண்டு உணவுப் பொதிகளை கொள்வனவு செய்ய வேண்டும். தகுந்த முறையில் பொதியிடப்படாத, உடைந்த அல்லது கிழிந்த நிலையிலுள்ள உணவுப் பொதியிலுள்ள உணவு மூலப் பொருள்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- கைகளிலோ அன்றி விரல்களிலோ வெட்டுக்காயங்களோ, புண்களோ இருப்பின் உணவு கையாள்வதை தவிர்த்துக் கொள்ளவும். அதேபோன்று நீண்டகால இருமல், தும்மல் போன்ற நோய் நிலை உள்ளோர் தகுந்தசிகிச்சை பெற்ற பின்பே உணவு கையாளலில் ஈடுபட வேண்டும்.
- மரக்கறி வெட்டும் பலகைகள், கத்திகள் என்பவற்றை நிலத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பாவனையின் முன்பாக சவர்க்காரமிட்டு நன்கு கழுவிக்கொள்ளவேண்டும்.
- உணவு பரிமாறலுக்கு பயன்படுத்தும் இலைகளைபாவிப்பதற்கு முன்பாக அவற்றை நீரால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- இலைவகை மரக்கறி உணவை சமைக்காத நிலையில்பச்சையாக பரிமாறுவதை தவிர்த்தல் நன்று.
- சோற்றுக்கு உப்பு சேர்ப்பதை தவிர்த்துக் கொள்ளுதல்நன்று.
- அச்சாறு, ஊறுகாய் என்பவற்றை பரிமாறுவதற்கு அலு மினியப் பாத்திரங்களை தவிர்த்து மட்பாண்டத்தினால் ஆன பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
- சமைத்த உணவுகளை எப்போதும் மூடி வைத்தல் வேண்டும். மூடியற்றபாத்திரங்களில் சமைத்த உணவுகளை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.
- சமைத்த உடன் சுடு நிலையிலேயே உணவைப் பரிமாறுவதே சிறப்பாகும்.
- பிளாஸ்ரிக் மூலப்பொருள்கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருநாள் குவளைகளில் பாயாசம் பரிமாறுவதை தவிர்க்க வேண் டும். சில்வர் குவளைகளை பயன்படுத்த வேண்டும்.
- முழுப்பாவாடை அணிந்து, பந்தியில் உணவுப் பரிமாறலில் ஈடுபடும் சிறுமிகளின் ஆடை நிலம்கூட்டுவது போலமையாது, கணுக்கால் முட்டியளவில் இருப்பதே விரும்பத்தக்கது. இலைகளில் பரிமாறப்பட்ட பின்னரான உணவு மாசடைதல் இதன் மூலம் தவிர்க்கப்படலாம்.
- தண்ணீர் பந்தல்களில் செயற்கையான இனிப்பூட்டப்பட்ட பானங்களுக்கு பதிலாக இயற்கையான மூலிகைப் பானங்கள் வழங்குதல் சிறப்பு. உதாரணம், மோர், மூலி கைப் பானம், இலைக்கஞ்சி’
- இயற்கையான பழச்சாறுகளை தயாரிக்கும் போது சீனியை உள்ளீடாக சேர்ப்பதைத் தவிர்த்தல் நன்று.
- உணவு பொதியிட பொலித்தீன் தாள்களை பாவிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும். உணவுக் கழிவுகளை இடுவதற்குத் தனியான குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும். நாள்தோறும்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கழிவு நீரை நன்கு சூரிய ஒளிபடக்கூடிய இடத்தில் உலர விடுதல் வேண்டும். இடவசதி சிறிதாக இருப்பின் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டியினுள் அதனை சேர்ப்பிக்க வேண்டும். அவை உடனுக்குடன் அகற்றப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- உபயோகிக்காத அல்லது எஞ்சிய உணவை தகுந்த முறையில் அகற்றிக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ். பேதனா மருத்துவமனை.