குழந்தைப் பருவம் ஆபத்தை அறியாத ஆழமறியாது காலை விட்டு மாட்டிக்கொள்ளும் பருவமாகும் பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.
குழந்தைகள் இறப்பு வீதம்
ஒவ்வொருவருடமும் எம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். அதே போல, கிட்டத்தட்ட 27,0000 சிறுவர்கள் வைத்திய சாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாகக் காப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்க வீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களைத் தவிர்த்துவளரும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவைபற்றிய அடிப்படை அறிவு அவசியமாகும்.
குழந்தைகள் பராமரிப்பு
குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் சிறிய பொருள்களை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் இயல்பு கொண்டவை. இதன் விளைவாக வயிற்றோட்டம் வாந்திபேதி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படலாம். மிகவும் சிறிய விதைகள், குன்றிமணி, பட்டன் (Button), மாபிள், முத்து போன்றவற்றை மூக்கினுள் செலுத்தும் அபாயமும் உண்டு. இது மூச்சுக் குழாயில் சிக்குண்டு மூச்சுவிடக் கஷ்டம் ஏற்பட்டு, போதிய உடனடிக் கவனம் செலுத்தாதபோது, இறப்புக் கூட சம்பவிக்கலாம்.
எனவே இவற்றை சிறுவர்களுக்கு எட்டாத வகையில் பேணுவதுடன், நிலத்தில் சிறுபொருள்கள் சிந்தி இல்லாதவாறு நிலத்தைக்கூட்டித் துப்புரவாகப் பேணுதல் வேண்டும். அண்மையில் கூட சமயல் அறையினுள் தவழ்ந்து சென்ற குழந்தை வெங்காயத்தை வாயினுள் செலுத்தி மூச்சுத்திணறலுக் குள்ளாகி பரிதாபகரமாக இறந்த சம்பவம் எல்லோர் மனங்களிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல, வீட்டிலுள்ள வயது முதிர்ந்தவர்கள் தம்நோய்களுக்காகப்பாவிக்கும் கிளினிக் மருந்து மாத்திரைகளையும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தல் வேண்டும்.
சமையலறை முகாமைத்துவம்
குழந்தைகளை சமையல் அறையினுள் அழைத்து வருவதைத்தவிர்த்தல்.நன்று கடுகஞ்சி, சுடுநீர்கொட்டுதல்,சுடு எண்ணெய் கொட்டுதல், நெருப்புச் சுடுதல் போன்ற எரிகாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் நிலத்தில் அடுப்பு வைத்து சமைக்கும் இடங்களில் மிக மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். மண்ணெண்ணெய், பெற்றோல் போன்ற எரிபொருள்களை சோடாப் போத்தல்களில் சேமித்து வைக்கவோ அல்லது குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் வைக்கவோ கூடாது.சோடா எனத்தவறாக நினைத்து எரிபொருளைப்பருகும் நிலை ஏற்பட்டு உயிராபத்துக்கள் ஏற்படலாம்.
சுற்றுப்புறச் சூழல் தொடர்பான அவதானம்
கிணற்றின் மேல் பாதுகாப்புக் கம்பிவலை அற்றகிணறுகளின் அருகில் குழந்தைகள் செல்வதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது. இயலுமானவரை பாதுகாப்பற்ற கிணறுகளுக்கோ மலக்குழிகளுக்கோ தடுப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளுதல் நன்று. மழைகாலங்களில், ஏற்கனவே வெட்டப்பட்ட குழிகளில் தேங்கி உள்ள வெள்ளநீரினுள் வீழ்ந்து மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
மோட்டார் கார்களில் பயணிக்கும்போது முன்சீற்றில் குழந்தையை மடியில் வைத்துப் பயணித்தல் கூடாது. பாதுகாப்பு இருக்கையில் குழந்தையை இருத்திப்பயனிப்பதே சிறந்தது. மோட்டார் சைக்களில்களில் கைக்குழந்தைகளுடன் பயணிப்பது ஆபத்தானதே.
குழந்தைகள் தண்ணீருடன் விளையாடுவதற்கு அதிகம் பிரியப்படுவர். எனவே இது விடயத்திலும் எங்கள் கவனம் இருத்தல் வேண்டும்.தமது கைக்கெட்டும் குழாயைத்திறந்து வாளிகளில் சேகரித்துவைக்கப்பட்டிருக்கும் தண்ணியில் தட்டியும் விளையாடுதல் குழந்தைகளின் வழக்கம். இதன் காரணமாக அடிக்கடி சளித்தொற்றுக்கு உள்ளாவார்கள். இதனால் வயதுக்கு ஏற்ற நிறை அதிகரிப்பு ஏற்படாத தன்மை ஏற்படலாம். எனவே தேவையற்ற குழாய்களை நன்கு இறுக்கி மூடிவிடுவதும், தேவை முடிந்த பின் நீரைக் கொட்டி விடுவதும் நன்று. சில சமயம் பெரிய பாத்திரங்களில் உள்ள நீரில் விளையாட முனைந்து நீரில் மூழ்கும் ஆபத்தும் நிகழலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். இவ்வாறான பாத்திரங்களை மூடி கொண்டு மூடிவிடலாம்.
வீட்டில் உள்ள பொருள்களின் ஓழங்கமைவு
ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை நீராட்டும்போது அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியுடன் ஆலோசனையுடனும் கவனமாக நீராட்டவும். இரண்டு, மூன்று வயதுடைய குழந்தைகள் கதிரைகளிலோ சிறிய மேசைகளிலோ, அடிக்கடி ஏறி இறங்கி விளையாடும் தன்மை கொண்டவர்கள், பாரம் குறைந்த பிளாஸ்ரிக் கதிரையில் ஏறி இறங் கும்போது சமநிலை தப்பி விழுந்து அடிபடும் நிலை ஏற்படலாம். எனவே பிளாஸ்ரிக் கதிரைகள், சிறிய மேசைகள் மற்றும் கால் உடைந்த, சம நிலை அற்றகால்களுள்ள கதிரைகளை அவர்கள் விளையாடும் இடங்களிலிருந்து அகற்றுதல் நன்று. இந்த வயதொத்தவர்கள், மேசை மீதுள்ள பொருள்களை எடுப்பதற்காகமேசைவிரிப்புக்களை இழுத்து கீழே வீழ்த்தும் குணம் கொண்டவர்கள். எனவே மேசைக்கோ மற்றும் மேசைகளுக்கோ மேசை விரிப்புக்கள் போடாதிருத்தலே நல்லது. அல்லாது விட்டால் மேசை மீதுள்ள பொருள்கள் அவர்கள் மீது விழுந்து காயங்களையும் முறிவு களையும் ஏற்படுத்தி விடலாம். மின் அழுத்தியை (irom box)பாவனையின் பின்புவைக்கும் போதும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தரையில் வைத்து மின்அழுத்தியைப் பாவிப்பதைத் தவிர்க்கவும். கண்ணாடி அலுமாரிகளை சுவர்ப்பக்கமாகத் திருப்பி வைப்பதால் வெட்டுக்காயங்களையும் அங்க இழப்புக்களையும் தவிர்த்திடலாம். மின்னிணைப்புப் பொருத்திகளை (Plug Points) அவர்களின் கைக்கெட்டாத உயரத்தில் பொருத்திக் கொள்ளுதல் மூலமும் பாதுகாப்பான மூடியுள்ள Plug Points ஐ பொருத்திக் கொள்வதன் மூலமும் மின்னொழுக்கு அபாயத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
மாடிப்படிகளில் தடக்கி விழுந்து ஏற்படும் காயங்களைத் தவிர்த்திட பாதுகாப்புக் கதவை மாடிப்படிகளுக்குப் பொருத்திக் கொள்ளுதல் வேண்டும்.
பயண விழிப்புணர்வு
துவிச்சக்கர வண்டியில் குழந்தைகளைக் கொண்டு செல்லும்போது அதற்கான ஆசனத்தைப் பொருத்தி, அதில் அவர்களை இருத்திக் கொண்டு செல்லலாம். மாறாக ஒரு கையால் குழந்தையை தாங்கிப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் சைக்கிளை செலுத்துவதை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ளவும். குழந்தைகளை பின் இருக்கையில் ஏற்றிச் செல்வதும் சரியான முறையன்று. ஓரளவு வளர்ந்த குழந்தைகளை பின்கரியரில் ஏற்றிச் செல்லும்போது கால் பாதம் சில்லினுள் அகப்படும் அபாயம் எப்போதும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதத்தை மூடிய சப்பாத்து அணியாது சைக்கிளில் ஏற்றக்கூடாது.
பொழுது போக்கு அம்சங்களில் கவனம் வேண்டும்
வீட்டின் முன்படலையை எப்போதும் மூடி வைத்தி ருக்க வேண்டும்.குழந்தை விளையாடும் போது பந்து தெருவுக்கு உருண்பேடுவதனாலோ அல்லது பிள்ளைதானே சுயமாகவோ வீதிக்கு ஓடிச்சென்று எதிர்பாராத வாகனவிபத்துக்கள் ஏற்படலாம். இதனைத் தவிர்த்திட பிள்ளை விளையாட பாதுகாப்பான இடம் ஒன்றைத் தெரிவு செய்து கொடுத்திடல் வேண்டும்.
பிள்ளைகள் சேர்ந்து விளையாடும்போதும் உங்கள் கண்காணிப்பு இருத்தல் அவசியமாகும். அவர்களிடம் ஏற்படும் முரண்பாடுகளும் காயங்களை ஏற்படுத்தலாம். வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடும்போதும் அவதானம் வேண்டும். அவை உணவு உண்ணும்போதோ, நித்திரை செய்யும் போதோ குட்டி ஈன்று இருக்கும் போதோ குழந்தைகள் அவற்றுக்கு அருகேசெல்வதை அனுமதிக்காதீர்கள். அல்லாதவிடத்து அவர்கள் அந்த விலங்குக் கடிக்கு உள்ளாக நேரிடலாம்.
முன்பள்ளிக்கோ, கடைத் தெருவுக்கோ நடத்திக் கூட்டிச்செல்லும்போது, போக்குவரத்து இல்லாத பக்கமாகப் பிள்ளையை வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இது அனாவசிய விபத்துக்களை தவிர்த்திட உதவும்.
வீட்டில் தரித்து நின்ற வாகனத்தை பின்னோக்கி செலுத்தும் போது மிக மிக கவனமாக இருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை வாகனத்தின் பின்புறமாகவோ அண்மையாகவோ செல்ல அனுமதிக்காதீர்கள்.
பிள்ளைகள் தனியாகவோ அல்லது அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்தோ, அனுபவமுள்ள ஒருவரின் மேற்பார்வையின்றி நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது நீந்துவதற்கோ அனுமதிக்காதீர்கள். எமது நாட்டிலும் நீர்ச்சுழியில் அள்ளுண்டுமரணம் அடைந்த பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன.
வழுக்கும் மாபிள் தரையில் வோக்கரில் நடைபயின்ற குழந்தை வேகக்கட்டுப்பாட்டை இழந்து திறந்திருந்த கதவின் வழிபாய்ந்து இறந்ததைத் தொடர்ந்து மேலை நாடுகள் வோக்கரை பாவிப்பதை தடைசெய்துள்ளன. நாமும் அதனை பாவிப்பதை நிறுத்தி மூன்று சில்லு நடை வண்டிலை பயன்படுத்தலாம்.
மேலும் சிறுவர்களுக்கு வயதுக்கு பொருத்தமான விளையாட்டுப் பொருள்களை வாங்கிக்கொடுப்பதை கருத்தில் கொள்ளவும். விளையாட்டுப்பொருள்களின் பைகளில் இது எந்தவயதுக்கு உகந்தது எனகுறிப்பிடப் பட்டிருக்கும். அதனை பார்த்து வாங்கிக் கொடுக்கவும்.
இரண்டு வயதுக்கு குறைந்தவர்களுக்கு தகரம், கம்பியினால் உருவாக்கப்பட்டவையும் கூரான விளிம்புகளை கொண்டவையுமான விளையாட்டுப்பொருள்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு, சண்டை வெறி, மன விகாரங்களை ஏற்படுத்தும் போர் வாகனங்கள், சுடுகலன் போன்ற விளையாட்டுப் பொருள்களை வாங்கித்தராதிருப்பதே சிறந்தது.
எவ்வளவு விலை மதிப்பான விளையாட்டுப்பொருள்கள் வாங்கினாலும், அவற்றை காட்சி அலுமாரியில் வைக் காது பிள்ளைகள் விளையாடி உடைக்க கொடுப்பதே சிறந்தது. இது அவர்களின் மூளைவிருத்தி, கற்பனாசக்தியை அதிகரிக்கும் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
பாதுகாப்பான சூழவை வளம்படுத்துவோம்
சிறுவர்கள் உள்ள வீடுக்ள் படிக்கும் பாடசாலைகள், சிறுவர்களுக்கு நட்புச் சூழலை வழங்குகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதோடு அவை அவர்களுக்கு காயங்கள் ஏற்படுத்தாத, பாதுகாப்பான சூழலாக அமைந்திட உதவுகின்றதா என்பதையும் பெரியவர்களான நாம் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற விபத்துக்கள், காயங்கள் என்பவைபற்றி மற்றவர்களையும் விழிப்படையசெய்து எதிர்காலச் செல்வங்களான குழந்தைகளைப் பாதுகாப்போமாக.
DR.P.ஜெசிதரன்
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ்.போதனா வைத்தியசாலை