இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக சிறுநீரகப் பாதிப்பு விளங்குகிறது. குறிப்பாக, வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும் இவற்றின் அருகாகவுள்ள புத்தளம், வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களும் உள்ளடங்கலாக நாட்டின் ஏனைய சில பிரதேசங்களுக்கும் இப்பாதிப்பு பரம்பலடைந்துள்ளது.
சிறுநீரக நோய்
உயிராபத்து மிக்க சிறுநீரக நோய்ப் பாதிப்பு முன்னொரு போதுமே ஏற்படாத அளவுக்கு ஏற்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த நோய்ப்பாதிப்புக்கான காரணம் என்ன..? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என்பதுபற்றி பல்வேறு மட்டங்களிலும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சூழலில் இந்தப்பாதிப்புத்தொடர்பில் ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய முறைமைகளின் பார்வை எவ்வாறானது என்பது குறித்து அறிந்திருப்பது பயன்மிக்கதாகும்.
உயிர் காக்கும் அவயவம்
மனித உடலானது, பல்வேறு அவயவங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய பணிகளை மிகச் சிறந்த முறையிலே செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். இது மனிதனுக்கு மிக முக்கியமான உடல் அவயவமாகும். மனித உயிரைக் காக்கும் மிக முக்கிய பணியைச் செய்து வருகின்றது. இந்த அவயவம் இன்றி எவரும் உயிர் வாழ முடியாது. அதில் ஏற்படும் பாதிப்புகள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகின்றன.
பணி
இத்தகு முதன்மைத்துவம்வாய்ந்த சிறுநீரகமானது. மனித உடலில் சேருகின்ற கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கிய பணியைச் செய்கிறது. அதாவது குருதியில் சேரும் கழிவுப் பொருள்களில் பெரும்பாலானவை பலவித இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகி சிறுநீர் ஊடாகவே வெளியேற்றப்படுகின்றன.
குருதியைச் சுத்திகரிப்பதன் ஊடாக இப்பணியை மேற்கொள்ளும் சிறுநீரகம், மனித உடலுக்கு புத்துணர்வை அளிக்கின்றது. அத்தோடு குருதி அழுத்தம்போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தக் கூடிய பண்பையும் சிறுநீரகம் கொண்டுள்ளது. மனிதன் பிறப்பிலேயே இரண்டு சிறுநீரகங்களைக் கொண்டுள்ளான். அவை மனிதனின் அடிவயிற்றுக்கு பின்புறமாக முள்ளந்தண்டுக்கு அருகாக இரு பக்கங்களிலும் அவை ஒவ்வொன்றும் சுமார் 150 நிறை கொண்டவையாக இருக்கும்.
குருதிச் சுற்றோட்டமும் சிறுநீரக இயங்கு நிலையும்
இச்சிறுநீரகத்தை குருதி ”ரீனல் தமனி” ஊடாக அடைகின்றது. குருதித்தமனி பல கிளைகளாக நுண்ணிய குருதிக்குழாய்களைக் கொண்டுள்ளது. இவற்றின் ஊடாக சிறுநீரகத்தை அடையும் குருதி சுத்திகரிக்கப்பட்டு அதிலுள்ள கழிவுப்பொருள்கள் சிறுநீர் ஊடாக வெளியேற்றப்படுவதோடு தூய்மைப்படுத்தப்பட்ட குருதி மீண்டும் ரீனல் சிறைகள் மூலம் உடலுக்கு வழங்கப்படுகின்றன. இது எப்போதும் இடம்பெறும் நிகழ்வாகும்.
இப்பணியின் நிமித்தம் சிறுநீரகத்திலுள்ள நெப்ரோன்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நெப்ரோன்கள் உரோமத்தை விட மிகவும் நுண்ணிய குழாய்களாக காணப்படும். ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் நெப்ரோன்களைக்கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு மனித உயிர்வாழ்வுக்கு தேவையான நெப்ரோன்கள் உடலில் இரு மடங்கு காணப்படவும் செய்கின்றன. அதன் பயனாகத் தான் ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியோடு மனிதனால் உயிர் வாழ முடிகிறது.
இந்த நெப்ரோன்கள்தான் குருதியில் காணப்படும், மனித உடலுக்கு ஒவ்வாத இரசாயனக் கழிவுகளை வெளியேற்றவும், உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களை உடலில் சேர்க்கவும் துணைபுரிகின்றது.
நோய்க்கான மூல காரணிகள்
இவ்வாறு மகத்துவம்மிக்க பணியில் ஈடுபட்டிருக்கும் சிறுநீரகம்பாதிக்கப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் துணைபுரிவதாகத் கூறப்படுகின்றது. எனினும் உகப்பற்ற இரசாயனங்கள்தான் சிறுநீரகப்பாதிப்புக்கு அடிப்படைக் காரணமாக இருக்க முடியும் என்றாலும் நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்புக்கு தண்ணிர்தான்காரணமென வலுவான ஆதாரமூலங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் காலாகாலமாக இப்பிரதேசம்சார்ந்த நிலக்கீழ்நீரைத்தான்பருகிவருகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்காத போதும் இப்போது சிறுநீரகப் பதிப்புக்கு மக்கள் உட்படுவதற்கான காரணம் என்ன என்பதை ஒரு தரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அந்த வகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் விவசாய நிலங்களுக்கு அண்மைக்காலமாகப்பாவிக்கப்படும் இரசாயனப் பசளைகளும் கிருமிநாசினிகளும் களை கொல்லிகளும் தான் இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்பதில் ஐயமில்லை. பசளை கிருமிநா சினி, களைகொல்லி என்ற போர்வையில் நச்சுப்பொருள்களை உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றன பல்தேசியக் கம்பணிகள்.
இந்த நடவடிக்கையின் ஊடே கம்பணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மை அடைந்து வருகின்றன. அதாவது பசளை களைகொல்லி கிருமிநாசினி என்பவற்றின் மூலம் நேரடியாக இலாபம் ஈட்டுவது போன்று அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென மருந்துகளை உற்பத்தி செய்தும் அந்த நிறுவனங்களே நன்மை அடைந்து வருகின்றன. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வண்டுகள் பூச்சிகள் களைகளை கட்டுப்படுத்தவுமென அளவுக்கு அதிகமாக நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக அவை உடனடி நன்மைகளை அளித்த போதிலும், எமது நிலக்கீழ்நீரில் கலந்துகொண்டுள்ள அந்த நச்சுப் பதார்த்தங்கள் நாம் பருகும் குடிதண்ணிரையும் பாதித்துள்ளன. இதுதான் சிறுநீரக நோய்ப் பாதிப்புக்கான முதன்மைக்காரணி என்பதில் ஐயமில்லை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பல தசாப்தங்கள் தேவைப்படலாம். அத்தோடு இரசாயனப்பதார்த்தங்களைப் பாவித்து உற்ப்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களிலும் அவற்றின் செறிவு அதிகம் இருக்கவே செய்யும்.
இயற்கை விவசாயமே பாதுகாப்பு
ஆக, இரசாயனப் பசளைகளதும், நச்சுக் கிருமிநாசினிகளதும், களைகொல்லிகளினதும் உண்மை முகத்தை அறிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவு உற்பத்தியைப் பெருக்கவென எமது மூதாதையர்
பயன்படுத்திய முறைமைகள் குறித்து அதிக கரிசனை கொள்ள வேண்டும். அப்போதுதான் இயற்கைப் பொருள்களைக் கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். இச் செயல் நிலையே உடலாரோக்கியத்தை பேணுவதற்கு உதவும். குறிப்பாக சிறுநீரகங்களுக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்கும்.
பைஷல் இஸ்மாயில்