இவ்வருடம் உளநலம்சார்ந்து உலக சுகாதார அமைப்பு முன்மொழிந்த தொனிப்பொருளை நோக்கின் அது “வேலைசெய்யும் இடத்தில் ஒருவரது உளநலத்தைப் பற்றி கவனம் செலுத்தல்” என்பதாக அமைந்துள்ளது. வாழ்நாளின் பெரும்பகுதி வேலை செய்யும் இடங்களிலேயே கழிந்துவிடுகிறது. இந்த நிலையிலே வேலையற்றவராக இருப்பதால் தான் ஒருவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்னும் உண்மை ஒருபுறம் இருக்க நாம் வேலை செய்வது எம் உள சுகாதாரத்துக்கு நன்மையைத் தந்துவிடும் போதும் பாதகமான சூழற் காரணிகளான மதுபான பாவனை, ஆளணிப் பற்றாக் குறை மற்றும் நிறுவனத்துக்கு ஏற்படும் பொருளாதார நட்டம் போன்றவை ஊழியரது உடல் மற்றும் உளநலத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன.
ஆழ்மனத் துயரம் (Anxiety) மற்றும் பதகளிப்பு என்பன ஊழியர் ஒருவரிடம் காணப்படுகையில் நிறுவன பொருளாதாரம் சார்ந்து தனது மனித உழைப்பினை வெளிப்படுத்த முடியாது. அத்துடன் வேலை செய்யும் இடத்தில் வெளிப்படுகின்ற முறைப்பாடுகளாக துன்புறுத்தப்படல் அல்லது கொடுமைப்படுத்தப்படல் என்பன பொதுவாகவே வெளிப்பட்டுநிற்கின்றன. இந்தச் செயல்நிலைகளின் பின்னூட்டம் என்பது ஊழியரின் உள சுகாதாரத்தைப் பாதித்துவிடுகிறது.
வேலை செய்யும் இடத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் சுகாதார வசதிகள், ஒழுங்கற்ற தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவ வசதி வரையறைக்குட்பட்டதான முடிவெடுக்கும் தன்மை, சக ஊழியரின் ஒத்துழைப்பின்மை ,வரையறையற்ற வேலை நேரம் மற்றும் நிறுவனத்தின் தெளிவற்ற குறிக்கோள் போன்ற காரணிகள் பணிபுரியும் ஊழியர்களின் உளநலத்தைப் பாதிப்பதில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன.
மேற்கூறிய காரணிகளால் ஊழியர் ஒருவருக்கு உளநலம் பாதிப் படைந்தால் அவரைப் பாதுகாப்பதற்கு அந்தந்த நிறுவனங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் ஏற்ற விதமாக சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் வளர்ச்சி சார்பான பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல், ஊழியர்களின் திறமைக்கேற்ப வேலையைப் பகிர்ந்தளித்தல், அவர்களின்திறமையைக் கெளரவித்தல், பணிபுரியும் வேலை நேரத்தைத் தளர்வாக ஒழுங்கு செய்து கொடுத்தல் போன்ற செயல்நிலைகளை வினைத்திறனாக கரிசனையோடு மேற்கொள்ளலாம். உண்மையில் உளரீதியாக சுகவீனமுற்று உள்ள ஊழியர் ஒருவார் மீண்டும் வேலைக்குத்திரும்பி தொடர்ந்தும் அந்த நிறுவனத்தில் பணிபுரிவது என்பது அந்த நிறுவனம் அவருக்கு கொடுக்கும் அதீத ஆதரவிலும், பணிவான அரவணைப்பிலுமே தங்கியுள்ளது. இதனை அனைவரும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
இது குறித்து சிந்திப்பதற்கான ஒருசிறுகதையாடல் வெளி இங்கு இயக்கமுறுகிறது அதனில் நாமும் பயணிப்போம்
காலையில் மருந்து எடுக்கவில்லையா..?
“யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்” என்று கண்டெக்டர் மந்திரம் சொல்ல ரவிமாஸ்டர் மகனுடன் மினிபஸ்ஸில் ஏறிவசதியாக அமர்ந்து கொண்டார். மினிபஸ் நெல்லியடியைத் தாண்டவும் பஸ் கர்ப்பமானது நெருக்கி நெருக்கிப் பயணிகளை ஏற்றிய கண்டெக்டர் அங்கிருந்த பயணிகளின் பொது எதிரியாக தெரிந்தான். பாக்கு மென்றுகொண்டு அவன் பேசிய நக்கல் நையாண்டிப் பேச்சுக்கள் அத்தனையும் நெருங்கித் தவிக்கும் எவருக்கும் உவப்பாய் இருக்கவில்லை. பஸ்ஸின் இரைச்சலை விலக்கி “ஐயோ என்ற அலறலை வெளிப்படுத்திய கண்டெக்டர், “அண்ணா. காலை மிதிக்காதையும். காலையிலை குளிசை போடலையோ? இப்பிடி மாடு மாதிரி மிதிக்கிறியள்” என்று சொல்லி வார்த்தைகளுக்கு முற்றுந்தரிப்பிட்டு நிறுத்தினான். அந்த சந்தர்ப்பத்திலே பளார் என்ற அறையுடன் “ஏன்டா, இப்பிடி நெருக்கமா ஆக்களை ஏத்துறாய்? நீ விசரோ நான் விசரோ” என்று கெட்டவார்த்தையை உதிர்தபடி கண்டெக்ரரின் நச்சரிப்புக்கு நியாயம் கொடுத்தார் காலை மிதித்த பயணி கண்டெக்ரர் ஒன்றுமே பேசவில்லை. கன்னத்தை தடவியபடி “நல்லூரடி இறக்கம்” என்று மெதுவாகச் சொல்லியபடி முன்னே நகர்ந்து சென்றான்.
நடந்த நிகழ்வுகள் அங்கிருந்த பயணிகளில் அநேகம் பேருக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையைத் தந்தன. ரவி மாஸ்டர் மட்டும் குழப்பமும் கவலையும் கொண்டார். குற்ற உணர்வால் ஆட்கொள்ளப்பட்டார். “பெரியாஸ்பத்திரி இறக்கம்” என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ரவிமாஸ்டர் மகனையும் அழைத்துக்கொண்டு உளநோய் சிகிச்சை நிலையத்தை நோக்கி நடந்தார். பதினைந்து வயதிலிருந்து கடந்து சென்ற பத்து வருடங்களாக மகன் ஒழுங்காக கிளினிக்செல்வதற்கும் மருந்துகளை எடுப்பதற்கும் தானே காரணம் என்று அவருக்கு இறுமாப்பு ஒன்றும் இருந்தது. அப்பா தன்னுடன் கிளினிக் வருவது ஏதோ ஒன்றை வைத்தியரிடம் போட்டுக்கொடுப்பதற்கே என்று நினைத்தான். குறிப்பாக “குளிசை எடுத்தாயா என்று அப்பா ஞாபகப்படுத்துவதை தான் விரும்பாததையும், தான் எரிந்து விழுவதையும் சொல்லப் போகின்றார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். தனது முறை வந்ததும் சற்று பதற்றமாக உள்ளே சென்றான். தான் எதிர்பார்த்திருந்த எதையும் அப்பா சொல்லாததையும், ஒழங்காக வேலைக்குப் போகின்றான். தானே மருந்துகளை தவறாது எடுக்கின்றான். ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொன்னதையும் கேட்டுஆச்சரியமடைந்தான் ஏமாற்றமும் பிரமிப்பும் கொண்டு மகிழ்ச்சியின் தொனிப்பால் ஆட்கொள்ளப்பட்டான்.
“குளிசை போடவில்லையா” என்னும் வார்த்தைக்கு சமூகம் கொடுத்திருக்கும் விளக்கமே மகனின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் காரணம் என்பதையும், மகனின் நிலமை அதுவல்ல என்பதையும் ரவிமாஸ்டர்
உணர்ந்துகொண்டார். இந்தச் சிறு விடயம் கூட முப்பது வருடமாக ஆசிரியப் பணியாற்றிய தனக்குப்புரியவில்லையே என தன்னைத் தானே நொந்து கொண்டார். தெளிவு கொண்டார்.இப்போது ரவிச்சந்திரன் மாஸ்டர், பல நாள்களாய் மனைவி நச்சரிக்கும் மகனின் நல்ல காரியம் தொடர்பில் சிந்தித்தபடி பருத்தித்துறை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டார்.
ச.சஸ்ரூபி