இன்று நீரிழிவு நோயானது உலகை ஆட்டிப்படைக்கும் சவால்மிக்க நோயாக மாறிவருகின்றது. நீரிழிவிற்கான உலக கூட்டமைப்பானது தற்போது உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தத் தொகையானது 2040 ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக இருக்கும் என்றும் கணிப்பிட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும் இந்தத் தொகை 2040 இல் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது.
ஆக, இந்த நோயின் தாக்கம் என்பது எவ்வளவு பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று எம்மிடம் காணப்படும் மிகப்பெரிய கேள்வி என்னவெனில் எவ்வாறுநோயைக் கட்டுப்படுத்தலாம் என்பதே உலகில் இது போன்ற பல நோய்கள்தாக்கத்தை ஏற்படுத்தியபோது அதனை எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாக இருந்தது.
எனவே அவை போன்று இதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமா? அவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரு வதற்கு எவ்வாறான விடயங்கள் சவாலாக அமையப் போகின்றன என்பது பற்றி ஆராய்தல் மிகவும் பொருத்தமானது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நோய்களான அம்மை, இளம்பிள்ளைவாதம், மலேரியா, போன்றவை தொற்று நோய்கள் ஆகும். தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த தடுப் பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மக்கள் எல்லோருக்கும் உள்ளிடாகக் கொடுத்ததன் மூலம் பெரும்பாலான நோய்த்தடுப்புச்செயன்முறைகள் வெற்றிகரமாகச்செய்துமுடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீரிழிவு நோயை அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது. இது பல்வேறு காரணிகளால் ஏற்படுக்கப்படுகின்ற ஒரு தொற்று அல்லாத நீண்டகால நோயாகும். இந்த நோயானது தொற்றுநோய் போன்று உடனடியாக ஏற்படுவதில்லை. எனவே இதனை கட்டுப்படுத்த வாழ்நாள் முழுவதும் அதற்குரிய கட்டுப் பாட்டு முறைகளைக் கடைப்பிடித்தல் என்பது மிகவும் அவசியமாகின்றது.
கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதற்கு முன்பாக நோய்க்காரணிகள் எவ்வாறு நோயுருவாக்குகின்றன என்பதை அறிதல் பொருத்தமானது. ஒருவருக்கு நீரிழிவு நோயானது பல்வேறு படிமுறைகளினுாடாக ஏற்பட்டு உடலில் பல்வேறு வகையானதாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த நோயைத் தடுக்க வேண்டுமெனின் அதனைப் பிறப்பில் இருந்து கைக்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது.
இனி நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற காரணிகள் எவை என் பதை அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. எமது உணவுப் பழக்க வழக்கங்கள். நாம் உணவை உட்கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உணவாகும். நாம் உணவை உட்கொள் வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எமது இயக்கத்திற்கும், உடற் தொழிற்பாட்டிற்குமான சக்தியை பெற்றுக் கொள்வதே. இந்தச்சக்தியை உணவிலுள்ள காபோவைதரேற்றுக்கள் மற்றும் இலிப்பிட்டுக்கள் மூலம்பெற்றுக்கொள்கிறோம். இந்த உணவுப் பதார்த்தங்களை உடலில் பல்வேறு உறுப்புகளிற்கு அனுப்பி வைக்கும் பணியை உடலும், குருதிச் சுற்றோட்டத் தொகுதியும் மேற்கொள்கின்றன. உடலில் உள்ள பெரும்பாலான கலங்கள் குருதிக்கோளங்களை தமது சக்தித் தேவைக்கு பயன்படுத்துகின்றன. எனவே கலங்களிற்குக் குருதிக்குளுக்கோசை கிரமமாக வழங்கும் பணியை ஈரலும் குருதிச்சுற்றோட்டத் தொகுதியும் செயற்படுத்துகின்றன.
அகநீர் சுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் ஓமோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. இந்தக்கட்டுப்பாடானது.இன் சுலின்சுரப்பான் அளவிலோ அல்லது அதன் செயற்படுதிறனிலோ தங்கியுள்ளது. எனவே இன்சுலின்சுரப்பில் ஏற்படும் குறைபாடோ அல்லது இன்சுலின் செயற்படுநிலையிலுள்ள குறைபாடுகளோ ஒருவரில் நீரிழிவுநோய் ஏற்படுவதற்கு காரணம் ஆகின்றது.
எனவே இன்சுலின் சுரப்பு மற்றும் அதன் செயற்படுநிலையைப் பேணக்கூடிய வகையில் எமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதுடன் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைத்தடுத்தலே ஒருவர் தன்னை நீரிழிவு நோயில் இருந்து பாதுகாப்பதற்கான வழிவகையாகும்.
இனி நீரிழிவை ஏற்படுத்தும் பிரதான காரணிகளை எவையெனப் பார்ப்போம். பின் வரும் காரணிகளை பன்னாட்டு நீரிழி விற்கான கூட்டமைப்பு (IDF) பிரதான காரணிகளாகப்பட்டியலிட்டுள்ளது.
1.அதிகூடிய உடற்பருமன்
2.ஆரோக்கியமற்ற உணவு
3.உடல் உழைப்பு குறைவு
4.குடும்பத்தில் நீரிழிவு காணப்படுதல்
இவற்றுடன்
1. உயர்குருதியமுக்கம்
2.வயோதிபம்
3.குளுக்கோசின்சகிப்புத்தன்மைகுறைதல்
4.கர்ப்பகால நீரிழிவுநோய்
5.கர்ப்பகாலத்தில் சரியாக உணவு உண்னாது போதல் போன்ற காரணிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்
எனவே ஒருவர் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்க வேண்டின் அவரின் வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்தல் என்பது இன்றியமையாததாகும்.
இதனைச்சுருக்கமாகக் கூறவேண்டுமாயின் ஆரோக்கியமான உடல்நிறையைப் பேணுவதும், மிதமான உடல் உழைப்பை ஏற்படுத்தலும் நீரிழிவில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகளாகும்.
எவ்வாறு இந்த ஆரோக்கியமான உடல்நிறையை அடைய வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவுகளை உடலின் சக்தித் தேவைக்கு ஏற்ப உள்ளெடுத்தல் என்பது மிகவும் அவசியமானது. ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் சக்தியானது அவர்களின் பால்நிலை. வயது மற்றும் உடல் உழைப்பு என்பவற்றில் பிரதானமாகத் தங்கியுள்ளது.
எனவே ஒருவர்தனக்கு சாதாரணமாக எவ்வளவு அளவு சக்தி தேவைப்படுகிறது என்பதை அறிந்திருத்தல் அவசிய மாகின்றது. இதன்பின்னர் தான் உள்ளெடுக்கும் உணவுப் பொருள்களை கருத்திற் கொண்டு அவற்றின் அமைப்பு அளவு என்பவற்றின் மூலம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவால்கிடைக்கப்பெறும் சக்தியின் அளவைக் கணிப்பிடுதல் அவசியமானது.
இந்த அளவானது தேவைக்கு அதிகமாக இருப்பின் அவை கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன.
உடல் அங்கங்களில் கொழுப்பு படிவடைதலே இந்த நோயின் உருவாக்கத்திற்கான ஆரம்ப காரணங் களாகச் சொல்லப்படுகின்றன. இந்தக் கொழுப்பு படிவதைத் தடுப்பதனூடாகவோ அல்லது அகற்றுவதனூடாகவோ நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தடுப்பது மட்டுமல்லாது நீரிழிவு நோய் ஏற்பட்டவர்களில் அந்தநோயால் ஏற்படும் தாக்கத்தை இயன்றளவு வினைத்திறனடன் கட்டுப்படுத்த முடியும் என அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தக் கொழுப்பு படிதலைகட்டுப்படுத்த கிரமமாக உடல் இழைப்பை ஏற்படுத்தக்கூடிய உடல் உழைப்பு அல்லது கிரமமாக உடற்பயிற்சி மிகவும் அவசியமாகின்றன. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தல் வேண்டும். மேலும் உடலில் கொழுப்புப் படிவதானது மதுப்பானப் பழக்கவழக்கம், புகைத்தல் மற்றும் வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம் போன்றன காரணமாகவும் ஏற்படுகின்றன. எனவே ஒருவர் மதுபான பழக்கத்தை அல்லது புகைத்தலை கைவிடுதன் மூலமும் நீரிழிவு நோயில் இருந்து எமைப்பாதுகாத்துக் கொள்ளலாம்.
இன்றைய அவசர உலகில்நாம் எமது தேவைகளை அதிகரிக்கச் செய்வதன் ஊடாக மன அழுத்தத்திற்கு
உட்படுகின்றோம். எனவே மன அழுத்தத்தைத் தடுக்கக்கூடிய வகையில் எமது வாழ்க்கையை அமைத்தல் என்பது இன்றி யமையாததாகும். பல நீரிழிவு நோயாளிகள் மனஅழுத்தம் காரணமாகவும் நோயின் பக்கவிளைவு காரணமாகவும், குருதியில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாடற்ற நிரிழிவினால் ஏற்படும் விளைவுகளால் அவஸ்தைப்படுவதை அவதானிக்க முடிகிறது.
எனவே தான் உலக நீரிழிவுக்கான கூட்டமைப்பு ஒருவர் குறைந்தது ஒருநாளைக்கு 6 தொடக்கம் 8 மணித்தியாலங்கள் நித்திரை செய்வது அவசியம் என அறிவுறுத்துகிறது. எனவே எமது வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் வாழ்வதே நீரிழிவு நோயில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் மக்களுக்குச் சரியான ஆரோக்கிய வாழ்வு முறைகளை செயற்படுத்த வழி ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அவர்களிடம் சரியான தகவல்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தவேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றச் சொல்லித் தர வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும்.
மருத்துவர். இ. சுரேந்திரகுமார்.
சமூக மருத்துவ நிபுணர்
மூத்த விரிவுரையாளர்,
தலைவர் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை
மருத்துவ பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்