குழந்தையின் வளர்ச்சிப்படிமுறையைப் பிரதானமாக நான்கு எல்லைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: குழந்தைப் பருவம், முன்பள்ளிப்பருவம், இடைத்தர சிறுவர் பராயம் மற்றும் இளைஞர் பருவம் ஆகும். சிறுவர் பராயத்தின் முற்பாக விருத்திப் படிமுறையானது பிறந்தது முதல் இருவயது வரை உள்ளபகுதியை உள்ளடக்குகிறது.
இந்தக் காலப்பகுதியில் உடல் ரீதியான இயக்கச் செயற்பாடுகள் மற்றும் விவேகம் சார்பான விடயங்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
இவ்வறிவானது சிறுவரொருவரை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலுள்ள யாவருக்கும் தேவையானதாகும். முதலில் 4 மாதகால பிள்ளையின் திறன்களை நோக்கு வோம். தினம்தோறும் சராசரியாக 20 கிராம் அளவு உடற் பருமன் அதிகரித்தபடி சென்றபடி 4ஆம் மாத முடிவில் பிறப்புநிறையானது இருமடங்குநிறையைக்காட்டும்.தலை அசைவைப் பொறுத்தவரையில் குழந்தை எமது அரவணைப்பில் அமர்ந்திருக்கையில்தலைகீழே விழாமலும் குழந்தைபடுத்திருக்கையில் 90பாகை அளவுக்குதலையை நிமிர்த்தியும் வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், உடலை முதுகுப்புறமிருந்து வயிற்றுப்புறமாக குப்புறப்படுக்க முனைய வேண்டும். சிறிய ஏதுவான பொருளொன்றைப்பிடித்து வைத்திருக்கும்திறனுடையதாக இருக்கவேண்டும்.
உதாரணமாக கிலுகிலுப்பை(கிலுக்கட்டி) பிள்ளையின் கைவிரல்களுக்கிடையில்திணித்தால், அதை பிடித்துவைத்திருந்து தன்வாயை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் புலனுணர்வு மற்றும் நுட்பச்செயற்பாடுகளைப் பொறுத்தவரை தமது பெற்றோரை மட்டுமல்லாது ஏனையவர்கள் மீதும் நெருக்கமான கண் தொடர்பை ஏற்படுத்த அதிக முயற்சி செய்வர். இதைவிட கை அசைவையும் கண் அசைவுடன் தொடர்புபடுத்தி தன் உணர்வுகளை வெளிக்காட்டுதல், உரத்த தொனியில் சிரித்தல், பெற்றோரின் குரல் மற்றும் தொடுகையை இனங்காணல் மற்றும் போத்தலை பற்றிப் பிடித்து பால் குடிக்க எத்தனித்தல் என்பவற்றையும் செய்வார்கள்.
நித்திரையை பொறுத்தவரை ஒருநாளைக்கு 14 தொடக்கம்16 மணித்தியாலங்கள் வரைநித்திரைகொள்வர். இவ்வாறான பிள்ளைகளுக்கு எவ்வகையான விளையாட்டுக்கள் நாம் செய்யலாம் எனப்பார்ப்போம்.
அதாவது பிள்ளைக்கு முன்னால் முகம்பார்க்கும் கண்ணாடியொன்றைப் பிடித்தால் அந்தப்பிள்ளை அந்தக் கண்ணாடியை தொட்டுப்பார்க்க முயற்சிக்கிறதா? சிரிக்கிறதா? எனப் பரீட்சித்துப் பார்க்கலாம். பிள்ளை விளையாடுவதற்கு பிரகாசமான நிறங்களுடைய விளையாட்டுப் பொருள்களைக் கொடுத்தல், பிள்ளை தானாகவே எழுப்புகின்ற சத்தத்தை நாமும் எழுப்புவதன் மூலம் பிள்ளையை ஊக்குவித்தல் போன்ற சிறிய செயற்பாடுகளைச்செய்யலாம். இவ்வாறான செயற்பாடுகளைப் பிள்ளையை வயிற்றுப்புறமாக படுக்க வைத்துக் கொண்டு விளையாடலாம்.
அடுத்ததாக 9 மாத குழந்தையின் வளர்ச்சி விருத்தி படி முறையை நோக்குவோம். இந்த வேளையில் உடல் கிட்டத்தட்ட 15கிராமினால் தினந்தோறும் அதிகரிக்கையில் உடல் நீளம் 1.5 சென்ரி மீற்றரால் மாதந்தோறும் அதி கரிக்கிறது. பிள்ளை சலம், மலம் கழிக்கும் நேரம் கிரமப்படி ஒழுங்காக அமையும் உடல் இயக்க செயற்பாட்டைப் பொறுத்தவரையில் தலையானது கீழ்நோக்கி விழுமாற் போல் செல்கையில் தன் இரு கைகளையும் முன்நோக்கி நீட்டுவதன் மூலம் தானாக கீழே விழுந்து விடாமல் பாது காத்துக் கொள்வர். (பரசூட் இயக்கம்) மேலும் நிலத்தில் தவழ்ந்து செல்லும் தன்மை நீண்ட நேரமாக தரையில் உதவியுடன் அல்லது உதவியின்றி இருத்தல், பெருவிரல் மற்றும் சுட்டு விரலைப் பாவித்துப் பொருளைப் பற்றிப் பிடித்தல், பொருளை வீசுதல் அல்லது குலுக்குதல்தன்கை விரல்களை சூப்புதல் போன்ற செயற்பாடுகளைக்காட்டுவர்.
அவர்களின் சமூகவெளிப்பாட்டுத்திறனைப்பொறுத்தவரை புதுப்புதுவித்தியாசமான சத்தங்களை எழுப்புதல், தன்னை விட்டு பெற்றோர் தூர செல்கையில், ஏக்கம் கொள்ளல், இலகுவான கட்டளைகளைப் புரிந்து கொள்ளல் தன் பெயரைச் சொல்லி அழைப்பவரை திரும்பிப் பார்த்தல். இல்லை எனும் சொல்லைப்புரிந்துகொள்ளல், இலகுவான பேச்சொலியைத் தானும் திரும்பிச் சொல்லுதல், கையால் (bye) சொல்லுமாற்போல் அலை வடிவில் கை அசைத்தல் போன்ற சிலவற்றை அவதானிக்கலாம். இவ்வாறான செயற்பாடுகளைக் காட்டும் குழந்தைக்கு இலகுவான படங்களை (கார், புத்தகம், நாய், பந்து கரண்டி அப்பிள்) காட்டலாம். மனிதர்கள் அல்லது விலங்குகள் உள்ள இடங்களுக்குக் கொண்டு சென்று அங்கு கேட்கும் பலபல வித்தியாசமான சத்தங்களை வேறுபடுத்தி அறிய வைக்கலாம். உடம்பில் சூடு மற்றும் குளிர்தன்மையான பொருள்களை தொடப்பண்ணுவதன்மூலம் இருவேறுதன்மைகளையும் உணரச்செய்யலாம். அளவில் பெரிய விளையாட்டுப் பொருள்களைக் கையில் கொடுப்பதன் மூலம் நடை பயில ஊக்குவிக்கலாம். எம்முடன் சேர்ந்து பாட்டுப்பாட சொல்லலாம். தனிமையில் இருக்கவேண்டிய சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு பொருளை விருப்பத்துடன் பாவிக்கும்படி செய்யலாம்.
அடுத்து ஒரு வயது பூர்த்தியாகும் தறுவாயில் உள்ள பிள்ளையை நோக்குவோம். இந்தப்பிள்ளையின் உடல் நிறையானது பிறப்பு நிறையின் 3 மடங்காகவும் உடலின் நீளம் பிறப்புநீளத்தின் அரைமடங்கால் அதிகரிப்பதாகவும் நெஞ்சு மற்றும் தலையின் சுற்றளவு சமமாகவும் காணப்படும்.
இந்தப் பிள்ளையில் ஒன்று தொடக்கம் 8 பற்கள் காணப்படலாம்.உடலியக்கச்செயற்பாட்டைப்பொறுத்தவரை உதவியின்றிதானாகவே எழுந்துநிற்றல்தானாகவேநடக்க எத்தனித்தல், உதவியின்றித் தரையில் அமர்தல், புத்தகங்களின் பல பக்கங்களை ஒரு தடவையில் திருப்புதல், சிறிய பொருளை தன் பெருவிரல் மற்றும் சுட்டு விரலால் தன் முயற்சியால் எடுத்தல் (நாணயக்குற்றியை உண்டியலினுள் போடுதல்) ஒருநாளைக்கு 3 தொடக்கம் 10 மணிநேர இரவு நித்திரை கொள்பவராக இருப்பர். இவர்களின் விவேகத்திற னைப் பொறுத்தவரை நடித்துக்காட்டும் செயற்றிறன் உடை யவர்(உதாரணமாக கோப்பையிலிருந்துதண்ணி குடிப்பது போல் வேகமாக அசையும் பொருளைக் கண்களால் பின் தொடர்வர். தம் பெயருக்கு மறுமொழி கூறுவர். அம்மா அப்பா சொற்களைக் கூறுதல், விலங்குகளின் சத்தத்தைப் போல்தானும் ஒலிகளை எழுப்ப முயற்சித்தல், தன் உடையை அணிவிக்கும்போது தானாகவே தன் இரு கைகளையும் உயர்த்தி தன் முயற்சியை வெளிக்காட்டல், பொருளொன்றைச் சுட்டுவிரலால் குறித்துக் காட்டுதல், குறிப்பிட்டஒருசாதாரண பொருளை அல்லது விளையாட்டுப் பொருளை எப்போதும் தம்முடன் வைத்திருத்தல், தனக்கு பழக்கமான சூழலாயின்தன் பெற்றோரைவிட்டுசிறிதளவில் விலகியிருத்தல் போன்ற குணங்களைக் காட்டுவர்.
இவ்வாறான பிள்ளைகளுக்கு ஏற்கனவே குறிப்பிட்டது போன்று படங்கள் உள்ள புத்தகங்களைக்காட்டுதல், மிருகக் காட்சிச்சாலைக்கு கூட்டிச் செல்லல், பந்து விளையாடல், சூழலிலுள்ள பொருள்களைப் பெயர் சொல்லிக் காட்டுதல், ஒத்த வயது குழந்தைகளுடன் விளையாடச்செய்தல் போன்ற விளையாட்டுக்களைச் செய்யலாம்.
அடுத்ததாக 18 மாதங்கள் முழுமையாகும் கட்டத்திலுள்ள பிள்ளைகளிடம் எவ்வாறான செயற்பாடுகளை எதிர் பார்க்கலாம் எனப் பார்க்கலாம். வளர்ச்சி வீதம் குறைவான வேகத்தில்நடக்க பசிக்கும்தன்மையும் முன்னைய வயதை விட குறைவாகவே காணப்படும் சலம், மலம் கழிக்கும் தன்மையை அவர்கள் கட்டுப் படுத்தமுனைவர் நிலத்தில் வீழ்ந்து எழும்பி ஓட முயற்சித்தல், சிறியகதிரையின்மீது உதவியின்றி ஏறி இருத்தல், அருகிலுள்ள சட்டத்தை ஒரு கை யால் பிடித்தபடிபடிகளின் மேல் ஏறுவர். இரண்டு தொடக்கம் நான்கு கட்டங்களைப் பாவித்து கோபுரம் கட்டுதல், கரண்டிமற்றும் கோப்பையை பாவித்து தனக்குத்தானே ஊட்டுதல், புத்தகத்திலுள்ள
இரண்டு அல்லது மூன்று பக்கங்களை திருப்புதல் போன்ற செயற்பாடுகளை காட்டுவர்.
இவ்வாறான பிள்ளைகள் புத்தகத்தைப் பார்த்தபடியே நாம் சொல்லும் கதைகளை செவிமடுப்பர் பத்துச்சொற்களாயினும் சொல்லக்கூடியதாக இருப்பர் உடலின் பாகங்களாகிய கண் மூக்கு காது என ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களை அடையாளம் காட்டக் கூடியதாக இருப்பர் தாம் அணிந்திருக்கும் தொப்பி, சப்பாத்தை கழற்றுவர். சில பொருள்களை மற்றும் தன்னுடன் இருப்பவர்களுடன் அதிக சொந்தம் கொண்டாட எத்தனிப்பர். தம் உதடுகளை குவித்து பெற்றோருக்கும், விருப்பமானவர்களுக்கும் முத்தம் கொடுப்பர்.
இவ்வாறான பிள்ளைகளுக்கு பாதுகாப்பான விளையாட்டுப் பொருள்கள், உபகரணங்களை மற்றும் பரந்த இடப்பரப்பை வழங்குவதன்மூலம் விளையாட்டுசெயல்முறையில் ஈடுபட ஊக்கமளிக்கலாம். இதே நேரத்தில் வீட்டில், கிரமமாக நிகழும் செயற்பாடுகளிலும் தம் பங்கை செய்ய அனுமதிக்கலாம். (வீடு கூட்டுதல், பூமரங்களுக்கு தண்ணி ஊற்று தலை அவதானித்தல்)
இறுதியாக இரு வருடங்களைப் பூர்த்தி செய்யும் குழந்தையைப் பற்றி நோக்குவோம்.தானாக கதவைதிறப்பதற்குரிய Knob ஐ திருப்புதல், புத்தகத்தின் ஒரு பக்கத்தை ஒரு தடவையில் திருப்பி புத்தகம் முழுவதும் ஒரு கண்ணோட்டம் விடல், ஆறு தொடக்கம் ஏழு கட்டங்களைப் பாவித்து கோபுரம் கட்டுதல், பந்தை தன் உடல் சமநிலை குழப்பாமல் உதைத்துவிடல், தாமாகவே மலம் கழிப்பதற்கு ஆயத்த மாகுதல், கிட்டத்தட்டமுதல் 16 பற்களும், முளைத்துக்காணப் படல் என்பன இருக்கும்.
இந்தக் காலப் பகுதியில் உடலின் உயரமானது இளம் பருவத்தினரின் உயரத்தின் அரை மடங்காக வந்துவிடுகிறது. இவர்களின் சமூக வெளிப்பாட்டுத்திறனை தாமாகவே சிறிய உடுப்புக்களை அணிவதிலும், உடுப்பைக் கழற்றுவதிலும் வெளிக்காட்டுவர். இந்தக் கால கட்டத்தில் இவர்கள் தமக்குரிய தேவைகளை (பசிக்குது. தாகமாக இருக்குது,சலம், மலம்கழிக்கவேணும்) எனஎமக்குத் தெரியப்படுத்துவர்.
இதேபோல இரண்டு அல்லது மற்றும் மூன்று சொற்களைப்பாவித்து வசனம் அமைத்துக் கொள்வர். அதேபோன்று தொடர்ச்சியான இரு கட்டளைகளை செவிமடுத்து அதன்படி செயற்படுவர். உதாரணம் பந்தை என்னிடம்தந்துவிட்டுசப்பாத்தைப்போடுங்கோ) 50 தொடக்கம் 300 வரையான சொற்களை அறிந்து வைத்திருப்பர்.
சூழலில் உள்ள பொருள்களை அவற்றின் தூரம், நிறம், தரம்மாறாது கண்களால் பார்த்துணரும்தன்மையைக்காட்டுவர். இவ்வாறான பிள்ளைகளுக்கு முன்னர் குறிப்பிட்ட விளையாட்டுக்களுக்கு மேலதிகமாக வீடு முழுவதும் சுற்றித் திரியவைத்துவிட்டுப்பொருள்களை அவர்களைக்கொண்டு பாவித்து, அந்தப்பொருளை இனங்காட்ட அனுமதிக்கலாம். வாளியினுள்தண்ணி ஊற்றிசெய்வதன்மூலம் வாளியின் பயன்பாட்டை உணரச்செய்தல் இதேபோல நாளாந்த வீட்டு வேலைகளைச் செய்ய ஏதுவான சந்தர்ப்பம் அளிக்கலாம். வீட்டுத்தரை கூட்டுதல், புல்பிடுங்குதல் இவ்வாறான எளிய விளையாட்டுமுறைகளை எமது சிறிய பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், அவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.