டெங்குக் காய்ச்சலானது நுளம்பால் பரப்ப படும் டெங்கு வைரஸ் இனால் உருவாக்கப்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது பெரும்பாலான வெப்பவலய நாடுகளை பாதிக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன் நேரத்துக் நேரம்மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்சல் (Dengue fever) தொடக்கம் உயிர்கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic fever) மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock syndrome) போன்றவற்றையும்ஏற்படுத்தலாம். இதுஅனை வரையும் பாரபட்சமின்றிப் பாதித்தாலும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நீண்டகால நோய்களுக்குட்பட்டவர்கள் (நீரிழிவு புற்றுநோய்) போன்றவர்களை வெகுவாகப் பாதிக்கின்றது.
நோய் காவி நுளம்பு
ஏடிஸ் (Aedes) வகை பெண் நுளம்பு இவை கறுப்புநிற காலில் வெள்ளை சிறுபுள்ளிகளைக் கொண்ட இலகுவில் அடையாளம் காணக்கூடியவையாகக் காணப்படுகின்றன. இந்த நுளம்பு பொதுவாக பகலிலேயே (விடியற்காலை, பிற் பகல்) மனிதர்களைக் கடிக்கின்றது. இந்த நுளம்புகள் சுத்தமான நீர் தேங்கும் எமது சுற்றாடல்களிலேயே முட்டை இட்டுப் பெருக்கமடைகின்றன. அதாவது பூந்தொட்டிகள், கூரைப் பீலிகள், பிளாஸ்ரிக் போத்தல்கள்/ பாத்திரங்கள், அலங்கார தாவரங்கள், சிரட்டை ரயர் போன்ற வற்றிலேயே நீர் தேங்கி நுளம்பு பெருக வழி வகுக்கின்றன. ஒரு ஆரோக்கியமானநுளம்பு ஒருமுறை 100-200 முட்டைகளிடும். அவை ஒருவார காலத்தில் நுளம்பாக உருவாகின்றன. நோய்தொற்றுள்ளவரை கடிக்கும்போது நுளம்பை அடையும் வைரஸ் அதன் உணவு பாதையை அடைந்து பின் அதன் உமிழ்நீர் வழியாக நோயற்ற ஒருவரைக் கடிக்கும்போது சென்றடையம்.
நோய் அறிகுறிகள்
நோய்த் தொற்றுக்குள்ளாகுபவர்களில் 50-90 வீதமானோர் எதுவித நோய் அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. சிறு பகுதியினர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படுவர். இந்தக் காய்ச்சலானது 2-7 நாள்களுக்கு இருப்பதோடு சிறு அறிகுறிகளுடன் சேர்ந்துகாணப்படலாம். அவையாவன
- தலைவலி
- கண்களின் பின் பகுதியின் வலி
- உடற்சோர்வு
- என்புவலி, தசைவலி
- குமட்டல் வாந்தி
- தோலில் ஏற்படும் மாற்றங்கள்
- குருதிப்பெருக்கு அறி குறிகள்-அதாவது முரசிலிருந்து, மூக்கிலிருந்து குருதி வெளியேறல். சிறுநீருடன்/மலத்துடன் (கபில/கறுப்பு நிற மலம்) குருதி வெளியேறல் தோலில் சிறு சிறு சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல், பெண்களுக்குஅதிகளவு மாதவிடாய் வெளியேற்றம் போன்றனவாகும்.
ஏனையோர் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலைக்கு உட்படுகின்றனர். டெங்குக் காய்ச்சலானது 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- காய்ச்சல் நிலை(Febrile)
- கடுமையான நிலை(Critical phase)
- மீள் நிலை (Recovery phase)
காய்ச்சல்நிலையில் மேற்குறிப்பிட்டஅறிகுறிகள் ஏற்படும் இதனைத்தொடர்ந்து காய்ச்சல்குறைந்து ஓரிருநாள்களில் கடுமையான நிலை ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இதன்போது குருதிக் குழாய்களின் ஊடுபுகவிடும்தன்மை அதிகரித்துக்கசிவு உடற்குழிகளில் ஏற்படும். அதாவது நெஞ்சறை(Peural effusion) வயிற்றுப்பகுதி (AScies) நீர்த்தேக்கம் ஏற்பட்டு சுவாசச் சிக்கல் மற்றும் வயிற்று வலி ஏற்படும். அத்துடன் உறுப்புக்கள் செயலிழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி நிலையும் ஏற்படலாம். இந்தநிலை 24-48 மணி நேரமே நீடித்து இருக்கும். பின் மீள் நிலையில் நோயாளி பழைய நிலையை அடைவர்.
வைத்தியசாலையை நாடவேண்டிய சந்தர்ப்பங்கள்
- குருதிப்போக்கு அறிகுறிகள் உள்ள போது
- தொடர்ச்சியான வாந்தி
- சுவாசிப்பதில் கடினம்
- காய்ச்சல் திடீ ரென குறை வடைவதுடன் நோயாளி தொடர்ந்தும் சோர்வாகவும் சுகவீனமடைந் தும் காணப்படல்.
- பாதிக்கப்பட் டவர்-குழந்தைகள், சிறுவர்கள் நீண்ட கால நோய்க்குள்ளானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாராக இருப்பின்
- நோய் முற்றிய அதிர்ச்சி நிலை – உடல் குளிர்வடைதல் வெளிறியிருத்தல், நாடித்துடிப்பு அதிகரித்தல்.
- மனக்குழப்பம் போன்ற நிலை மற்றும் உறக்கநிலை
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
- காய்ச்சல் ஏற்படின் இயன்றவரை ஒய்வெடுக்க வேண்டும்
- பகல்நேரத்தில் ஒய்வெடுக்கும்போதும் நுளம்புவலையை பயன்படுத்தல் வேண்டும்.
- அதிக பானங்களைப் பருகுதல் வேண்டும். உடன் தயாரிக்கப்பட்ட பழச்சாறு, தேநீர், கஞ்சி, ஜீவனிபோன்றன சிறந்தவை. சாயம் ஊட்டப்பட்ட பழச்சாறு சோடா போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- காய்ச்சலைக்குறைப்பதற்குபரசிட்டமோல் எடுக்கலாம். தினமும் 4 வேளைகளுக்கு மட்டுமே வைத்திய ஆலோசனைப்படி கவனமாக எடுக்கவும்.
- அஸ்பிரின் /அஸ்பிரின் அடங்கிய மருந்துகளை எடுப்பதைத் தவிர்க்கவும்
- தொடர்ந்து இரண்டுநாள்களுக்கு மேல் காய்ச்சலிருப்பின் வைத்தியசாலையை நாடவும்.
டெங்கு நோயை இல்லாது ஒழிப்பதற்கு…
நுளம்பு கடிப்பதால் மட்டுமே டெங்கு வைரஸ் உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. எனவே நுளம்புப் பெருக்கத்தை தடுப்பதுடன் நுளம்பு எம்மைக் கடிக்காது தடுப்பதற்கு நுளம்புவலை திரி போன்றவற்றைப் பயன்படுத்துவதாலும் நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். நுளம்புப் பெருக்கத்தைத் தடுக்க வாரம் ஒருமுறை உங் கள் வீட்டுச் சுற்றுச் சூழலிலும் பாடசாலைக் காரியாலயம் என்பற்றிலும் உள்ள டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை இனங்கண்டு இல்லாது ஒழிக்க வேண்டும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.
- சிரட்டை பிளாஸ்ரிக் பாத்திரங்கள், டின் போத்தல் போன்றவற்றை மழை நீர்நிரம்பாது களஞ்சியப்படுத்தல்
- கூரை, பீலிகள், நீர்நிறையும் கொங்கிரீட் கூரைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இலை கழிவுகள் மற்றும் தேவையற்றவைகளை அகற்றிவிடல்
- நீர்த்தாங்கி, பெரல் போன்ற நீர் சேமிப்புக்களை மூடி வைத்திருத்தல் அல்லது வாரம் ஒருமுறை தேய்த்துக் கழுவிச் சுத்தமாக்கல்.
- பூச்சாடி, பூந்தோட்ட அலங்காரத் தொட்டிகளை நீர் தேங்கிநிற்காது பாதுகாத்தல்.
- இலைகளின் மத்தியில் நீர் தேங்கும் அலங்கார பூச்செடிகள், மூங்கில் மரங்கள், மரத்தண்டுகள் போன்றவைகளை நடுவதிலிருந்து தவிர்ப்பதுடன் நீர் தேங்காமல் கவனமாகப் பராமரித்தல்.
இது உங்களது கடமையும் பொறுப்புமாகும். இதிலிருந்து நீங்கள் தவறுவது தண்டனைக்குரிய குற்றமாவதோடு இதற்காக நீங்கள் நீதிமன்றத்தில் 2000-5000 ரூபா வரை அபராதமாகச்செலுத்தவேண்டியநிலை ஏற்படலாம்.
எனவே நாம் அனைவரும் விழிப்புணர்வோடு செயற்பட்டு எம்மையும் எமது சமூகத்தையும் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வோமாக.
மருத்துவர் மு.பியற்றிஸ்கேஷினி