உலகில் பெண்களில் சாவை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நான்காவது இடத்தை கருப்பைக் கழுத்துப் புற்றுநோயே வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் மிகவும் ஆரம்ப நிலைகளிலேயே கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் கண்டுபிடிக்கப் படுவதால் இந்த நோயின் தாக்கம் மிகவும் குறைவு. ஆனால், இலங்கை போன்றநாடுகளில் அத்தகைய வசதிவாய்ப்புக்கள் குறைவாக இருப்பதால், இந்தப் புற்றுநோய் வளர்ச்சி அடைந்த பின்பே கண்டு பிடிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் சத்திரசிகிச்சை (Surgery) மற்றும் கதி ரியக்க சிகிச்சை (Radiotherapy) போன்ற மேலதிக சிகிச்சைகள் அவசிய மாகின்றன. இதனால் நோயாளிக்கு பல்வேறு அசெளகரியங்களும் பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
ஏன் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படுகிறது?
கருப்பைக் கழுத்துப்புற்றுநோய் ஒருவித வைரஸ் (Human papilloma virus – HPV) தொற்றால் ஏற்படும் ஒருபுற்று நோய் ஆகும். இந்த வைரஸ் தொற்றி பலவருட காலத்தின் பின்பே புற்றுநோய் உருவாகும். இந்தக் காலத்தில் கருப்பைக் கழுத்தில் பல மாறுதல்கள் ஏற்படும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் கருப்பைக் கழுத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டுபிடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படக் கூடிய புற்றுநோயைத் தவிர்க்கலாம்.
வளர்ந்த நாடுகளில் பெண்கள் 25 வயது அடைந்ததும் ஒவ்வொரு 3 வருடத்துக்கு ஒரு முறை 49 வயது வரும்வரை ஒரு பரிசோதனையை (Pap smear) மேற்கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையில் ஏதாவது சந்தேகம் இருப்பின் மேலதிக சோதனை (Colposcopy) செய்யவேண்டி வரும்.
யாழ். மாவட்டத்தில் ஒரு சில நிலையங்களிலேயே Pap smear test சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர் காலத்தில் கூடியளவு சுக வனிதையர் சேவைநிலையங்களில் (Wel Woman clinic) இந்தப் பரிசோதனையைச் செய்யக் கூடியதாக இருக்கும்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் யாருக்கு ஏற்படலாம்?
- கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் தாம்பத்திய உறவில் ஈடுபடும், ஈடு பட்ட எந்த பெண்ணுக்கும் ஏற்படலாம்
- Human Papilloma virus உடலுறவின் மூலமே பரவுதல் அடையும் நீண்டகாலம் அல்லது பலருடன் உடலுறவில் ஈடுபட்டோருக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.
- ஒழுங்கான Pap Smear test பரிசோதனை செய்வதன் மூலம் கருப்பைக் கழுத்துப்புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்
- ஒழுங்கற்ற குருதிப்போக்கு (regular bleeding )
- உடலுறவின் பின் ஏற்படும் குருதிப்போக்கு (postcoital bleeding)
- கடுமையான அல்லது மணத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் (Offensive discharge)
- மாதவிடாய் முற்றாக நின்றபின் ஏற்படும் குருதிப்போக்கு (postme nopausal bleeding)
என்ன செய்யவேண்டும்?
மேற்கூறப்பட்ட ஏதாவது அறிகுறிகள் இருப்பின் தாமதியாது உரிய வைத்திய ஆலோசனையை நாடவும்.
எவ்வாறான சிகிச்சைகள் உள்ளன?
1. ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் சத்திரசிகிச்சை மூலம் குணமாக்கலாம்.
2. சிலவேளைகளில் பரவிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைக்கேற்ப ஊசி மருந்து ஏற்றுதலும் கதிரியக்கச் சிகிச்சையும் ( Chemoradiation ) தேவைப்படும்.
கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை எவ்வாறு தடுக்கலாம், (Pap smear test)
- 35 வயது அடைந்த பெண்கள் அனைவரும் ஒழுங்கான கால இடைவெளியில் (3வருடத்துக்கு ஒருமுறை) Pap smear பரிசோதனையைச் செய்தல்.
- Pap smear பரிசோதனையில் ஏதாவது மாற்றம் அல்லது சந்தேகம் இருப்பின் மேலதிகமாக Colpo Scopy பரிசோதனை செய்ய வேண்டும்.
- சிலவேளைகளில் சிறு சத்திரசிகிச்சை மூலம் கருப்பைக் கழுத்தின் ஒரு பகுதிஎடுத்து (Biopsy) பரிசோதிக்க வேண்டும்.
- புற்றுநோய் மிகவும் ஆரம்பநிலையில் கண்டுபிடிக்கப்படும்போது சத்திரசிகிச்சையால் முற்றாகவே குணமாக்க முடியும்.
- பின் ஆறு மாதகாலத்துக்கு ஒரு முறை கருப்பைக்கழுத்தை ColpoScopy மூலம் பரிசோதிக்கவேண்டும். எமது பிரதேசங்களில் இந்தப் பரிசோதனையை சுக வனிதையர் சேவை நிலையங்களில் ( Well woman clinic) இல் செய்யலாம்.
கருப்பைக் கழுத்துப் பரிசோதனை (Colposcopy)
- Pap smear பரிசோதனை அறிக்கை சந்தேகமாக இருப்பின் அல்லது தெளிவில்லாமல் இருப்பின் Coposcopy பரிசோதனை செய்வதனால் மேலதிக தகவல் களைப் பெறமுடியும்.
- கருப்பைக்கழுத்துப்பரிசோதனைக்கு மயக்க மருந்து தேவை இல்லை.
- வெளிநோயாளர் பிரிவு அல்லது சிகிச்சை நிலையத்தில் (Clinic) செய்யலாம்.
- சிறுகருவி மூலம் கருப்பைக் கழுத்தை நேரடியாகப் பார்த்தால் சந்தேகமான பகுதிகளை நேரடியாகப் பார்த்துத் தேவையான சிகிச்சைகளை செய்யமுடியும்.
தடுப்பூசி (Vaccine)
- கருப்பைக்கழுத்துப் புற்றுநோய் ஒரு வைரஸ் (Human Papilloma Virus) மூலம் உருவாவதால் ஒரு வக்சின் (Cervarix) கருப்பைக் கழுத்து புற்றுநோய் உருவாவதைத் தடுக்க கொடுக்கப்படுகிறது.
- இதுவாழ்நாளில் இரண்டுதடவைகள் கொடுக்கப்பட வேண்டும்.
- தற்சமயம் வெளிநாடுகளில் இந்த வக்சின் கொடுக்கப்படுகிறது.
- இலங்கையில் இன்னும் சில வரு டங்களில் இந்தத் தடுப்பூசி பாவனைக்கு வரலாம்.
மருத்துவர் K. குருபரன்
பெண்நோயியல் மகப்பேற்று நிபுணர்,
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்