இன்றைய காலகட்டத்தில் வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது. ஒவ்வொருநாளும் பத்திரிகைகளை வாசிக்கும் போது விதிவிபத்து தொடர்பான ஒரு செய்தியையாவது காணக் கூடியதாக உள்ளது.
பச்சிளம் பாலகனிலிருந்து தள்ளாத வயது வயோதிபர் வரை வீதி விபத்துக்களில் சிக்குவதைக் காணமுடிகின்றது. முப்பதாண்டுகாலப் போரினால் மடிந்து போன உயிர்களை விட விதி விபத்துக்களினால் உயிரிழந்தோரின் எண்ணிைக்கையானது அதிகமானதென அண்மைய புள்ளி விவரமொன்று எடுத்துக்காட்டுகின்றது.
அதிகரித்த வாகனங்களின் பயன்பாடு விதி ஒழுங்குகளை மதியாது நடக்கின்ற மனப்பாங்கு வீதி ஒழுங்குக் கட்டுப்பாடுகளில் போதிய இறுக்க மின்மை மற்றும் அதிகரித்த மதுப் பாவனை போன்றனவே இதற்குப் பிரதானமான காரணங்களாகும்.
வீதி ஒழுங்குகளை மதியாது தான் தோன்றித்தனமாக வாகனங்களைச் செலுத்திச் செல்வது இன்று ஒரு சாதாரண காட்சியாகி விட்டது. பாதசாரிகள் கடப்பதற்கான மஞ்சள் கடவையானது என்ன காரணத்திற்காக உள்ளது என்று அநேகமான சாரதிகளுக்குத் தெரியாமல் இருக்கின்றது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்றவற்றுக்குமுன்னால் உள்ள பாதசாரிக்கடவைகளிலும் கூட உயிரைக் கையில் பிடித்தவாறே கடக்க வேண்டி பிருக்கிறது.
எந்தவொரு வேலையோ அவசரமோ இல்லாதபோதிலும் மிகவும் விரைவாக ஒலிஎழுப்பியவாறு (ஹோர்ண்) வாகனங்களை செலுத்திச் செல்வது இன்று நாகரிக மாகி விட்டது. எம்மவர்களுக்கு புகையிரதம் வரும் வேளையில் பாதுகாப்புத் தடை போடப்பட்டிருந்தாற் கூட அதனை மீறி ஓடிச் செல்கின்ற பழக்கம் இருக்கிறது.
இவ்வாறு பாய்ந்து செல்பவர்களில் வேலை மற்றும் காரண நிமித்தம் செல்பவர் மிகச் சிலரே. இதை நினைக்கும்போது நாய்க்கு வேலையில்லை. ஆனால் நடக்க நேரமில்லை” என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
வீதி விபத்துக்களுக்கான மிகப் பிரதானமான காரணங்களில் அரச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டிச் சவாரியும் ஒரு காரணமாகும். இவர்களின் கொடிய இந்தப் போட்டிச் சவாரிக்கு சாவடைந்த உயிர்கள்தான் எத்தனை? இவர்களின் வீரவிளையாட்டால் ஐந்து வயதுப் பாலகனொருவனின் உயிர் பறிபோய் சில மாதங்களே ஆனநிலையில் மிக அண்மையில் மருத்துவர் ஒருவரின் உயிரும் காவு கொள்ளப் பட்டிருக்கிறது.நீதிமன்ற உத்தரவின் பின்னரும் இவர்களின் வெறிகொண்ட ஓட்டப் போட்டியானது நின்றபாடில்லை.
வீதி விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதற்கான மிக முக்கியமான அடுத்தகாரணம் அதிகரித்த மது மற்றும் போதைப்பாவனையாகும். மதுஅருந்திய நிலையில் வாகனங்களைச் செலுத்திச் செல்பவர்களினால் பந்தாடப்பட்டு உயிரிழந்தோர்தான் எத்தனைபேர் பதின்ம வயதுச் சிறுவர்களுக்குக் கூட நவீன வகை யான மோட்டார் வாகனங்களைப் பெற்றோரும் உற்றோரும் வாங்கிக் கொடுப்பதனால் அவர்களும் தலைகால்புரியாமல் “புஷ்பக விமானத்தில் பறப்பது போன்று வாகனங்களைச் செலுத்திவருவதை எமது கண்கூடாகக் கண்டுவருகின்றோம்.
இவ்வாறான நட வடிக்கைகளினால் இந்தச் சிறுவர்கள் தமதுயிருக்கும் தெருவில் செல்வோரின் உயிருக்கும் உலை வைக் கின்றார்கள். முன்னைய காலத்திலெல்லாம் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் சிறுவர்களுக்கும் இளையோருக்கும் புத்தகங்கள் போன்ற கல்விசார் பொருள்களையே வழங்குவது வழக்கமாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் அநேகமானோர் வழங்குவது நவீன மான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தேவையற்ற அளவு பணம் என்பனவேயாகும். எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருந்து மது அருந் தியகாலம் போய்மாமன், மச்சான் பெற்றோர் மற்றும் புதல்வர்கள் என அனைவரும் கூடியிருந்து மது அருந்திச் சுவைத்து ஆனந்த வெள்ளத்தில் திளைப் பதையும் இன்றைய கால கட்டத்தில் எமது கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
நவீன தொடர்பு சாதனங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையும் விபத்துக்களுக்கு இன்னொரு காரணமாகும். வாகனத் தைச் செலுத்தும் போதும் விதியைக் கடக்கும் போதும் அலைபேசி அழைப்புக்களில் கவனம் செலுத்தி மடிந்தவர்கள் எத்தனைபேர்.
அண்மையில் ஐந்து வயதுப்பாலகனொருவனின் உயிர் காவு கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றமானது வாகனப்போக்குவரத்து பற்றிய கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் எடுத்துரைத்திருந்தது. “இனி யொரு விதி செய்வோம்” என்ற வாசகத்தோடு விழிப் புணர்வுச்செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இனிவரும் காலங்களில் விதிவிபத்துக்களைக் குறைத்து மனித உயிர்களின் பெறுமதியையும் கெளரவத்தையும் காப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற் பட வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.
தீர்வுகள்
- வீதி ஒழுங்கு முறைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மிக அவசிய மாகும். மேலைத்தேயநாடுகளில் சிறுவயது முதலே வீதி ஒழுங்கு முறைகளை எடுத்துரைப்பதனால், அந்த நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகள் அரிதாகவேயுள்ளன. காவல்துறையினர். சனசமூக நிலையங்கள் பொதுசன அமைப்புக்கள் மற்றும் அரச அரச சார்பற்ற அமைப்புக்கள் என சகலரும் ஒன்றிணைந்து இதனை மேற்கொள்ள வேண்டும்.
- பாடசாலைச் சிறுவர்களுக்கு சிறு வயது முதலே வீதி ஒழுங்கு முறைகள் பற்றிய பூரண விளக்கத்தை ஏற்படுத்துவது மிக அவசியமாகும். இதனைக் கல்வியமைச்சு, திணைக்களம் மற்றும் பாடசாலைச் சமூகம் என்பன கருத்திற்கொள்வது அவசியமாகும்.
- வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எந்தவித தயவு தாட்சணியமுமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும். இதனை மிக இறுக்கமாகக் கடைப் பிடிப்பதன் மூலமே விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளமுடியும்.
- மது மற்றும்போதைப்பாவனையோடு வாகனம் செலுத்துபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்
- பதின்ம வயது இளையோர்களுக்கு தேவையற்ற விதத்தில் மோட்டார் வாகனங்களை வழங்கும் செயற்பாட்டை அடியோடு நிறுத்துவது அவசியமாகும்.
- அரச மற்றும் தனியார் பேரூந்துகளின் போட்டிச் சவாரிக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். நீதி மன்றத்தால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்ட ளையை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசிய மாகும். வாகனச் சாரதிகளுக்கு வீதி ஒழுங்கு முறைகள் பற்றிய விளக்கங்களையும், அறிவு ரைகளையும் குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை வழங்க வேண்டியது உரிய தரப்புக்களின் கடமையாகும்.
- பாதுகாப்பற்ற விதத்தில் வாகனங்களைப் பேணுபவர்களை இனம்கண்டுதண்டனை வழங்க வேண்டியதும் அவசியமாகும். குறிப்பாக ஒட் டோக்களின் பாவனையையும், போக்குவரத்து முறைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.
- வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும்போதும், வீதி ஒழுங்கு களை மீறும் போதும் உரியதரப்பில் லஞ்சமாக பணம் பெற்று வருவதும் ஒரு காரணமாகும். இதனை நிறுத்தவும் ஆவன செய்தல் மிகவும் அவசியமாகும்.
- வாகனங்களைச் செலுத்தும்போதும், வீதியைக் கடக்கும் போதும், அலைபேசி போன்ற இலத் திரனியல் உபகரணங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
- .இறுதியாக நாம் அனைவரும் சிந்தித்து ஒன்றிணைந்து செயற்படுவோமானால் வீதி விபத் துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களையும் அங்கவீனங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.
மருத்துவர்.M.அரவிந்தன்
நீரிழிவு அகஞ்சுரக்கும், தொகுதியியல் (ஹோர்மோன்), சிறப்பு வைத்திய நிபுணர்,
யாழ்.போதனா வைத்தியசாலை.