நீரிழிவு நோயாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் ஏற்படும் மாறாநிலைப் புண்கள் என்பது பொதுவானதாகும். இவை சிறு புண்கள் முதல் நீண்ட காலமாகக் குணமாக்க முடியாத பெரிய புண்கள் வரை வேறுபடலாம். இதனால் நடப்பதில் சிரமம், அன்றாட கருமங்களை ஆற்ற முடியாமை, நீண்ட காலமாக வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டி இருத்தல் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சில வேளைகளில் கால் விரல்களை அல்லது அவயவங்கைளை நிரந்தரமாக சத்திர சிகிச்சையின் மூலம் ( Amputation) அகற்ற வேண்டி ஏற்படலாம்.
இவற்றை தடுப்பதற்கு நீரிழிவு நோயாளர்கள் தங்கள் பாத ஆரோக்கியம் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
நீரிழிவு நோயாளர்கள் குருதிக் குளுக்கோஸ் அளவை சரியாகப் பேணுதல் வேண்டும். சரியான உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு கால்களைக் கழுவி சுத்தமாக்குவதோடு கால்களில் காயங்கள், வீக்கங்கள், வெடிப்புக்கள் அல்லது சிவப்பு நிற அடையாளங்கள் உள்ளதா என அவதானித்தல் வேண்டும். அடிப்பாதங்களை அவதாகிப்பது கடினமாக இருப்பின், கண்ணாடி அல்லது வேறொருவரின் உதவியுடன் பாதங்களை அவதானிக்கலாம். அவ்வாறு சிறு புண்கள் அல்லது காயங்கள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.
நீரிழிவு நோயாளர்களின் கால்களில் உணர்திறன் குறைவாக இருப்பதனாலும், காயங்கள் ஏற்படும் போது அவற்றின் வலியை உணர முடியாமல் இருப்பதாலும் நோயாளர்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறத் தவறுகிறார்கள், கால்களில் ஏற்கனவே புண்கள் உள்ளவர்கள் தொடர்ச்சியான சிகிச்சை மூலமும் குருதியில் குளுக்கோஸ் அளவைச் சரியாகப் பேணுவதன் மூலமும் விரைவாகக் குணமடைய முடியும். வெளியில் செல்லும் போது பாதணிகளை அணிந்து செல்வதன் மூலம் கால்களில் சிறு காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். பாதணிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அவை கால்களின் சரியான அளவில் இருப்பதும், உட்புறமும் மிருதுவாகவும் கால்களில் அழுத்தத்தை பிரயோகிக்காதனவாகவும் இருத்தல் சிறந்தது. கால்களை மூடியதாகப் பாதணிகளை அணிவதும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.
கால்களில் ஆணிக்கூடு (Callosity) இருப்பின் அவற்றை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக் கொள்ளலாம். கால்களில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க மென்மையாக்கும் திரவங்கள் அல்லது எண்ணெய் பூசிக்கொள்ளலாம். வெடிப்புக்கள் உள்ளவர்கள் அவற்றினுள் அழுக்குகள் சேராது சுத்தமாகப் பேண வேண்டும்.
காலில் ஏற்படும் வலிகளை நீக்க Hot bag சூடுநீரில் தோய்க்கப்பட்ட துணி என்பவற்றைப் பியோகிப்பதைத்த தவிர்க்கவும். அதிக வெப்பமான மற்றும் கரடுமுரடான தரையில் பாதணிகள் இன்றி நடத்தல் ஆபத்தானது.
பாதங்களுக்கான இரத்த ஒட்டத்தை சீராகப் பேணுவதற்கு நடைப்பயிற்சி மற்றும் பாதங்களுக்கான உடற்பயிற்சிகள் உதவியாக அமையும்.
உங்கள் கால்களில் அவதானிக்கும் மாற்றங்கள் மற்றும் விறைப்புத் தன்மை பற்றி சிகிச்சை நிலையம் செல்லும்போது மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். வருடத்தில் ஒரு தடவையாவது உங்கள் பாதங்களை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
K.பவித்திரா
நீரிழிவு சிகிச்சை நிலையம்.
யாழ் போதனாவைத்தியசாலை.
யாழ்ப்பாணம்.