மதுவில்லா வேலை.
மது அடிமை நிலையிலிருந்து விடுபட்ட ஒருவர் மீண்டும் வேலை செய்யத் தொடங்கும் பொழுது அவர் பல விடயங்களளில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக அவர் வேலை செய்யும் இடங்களில் குடிக்கின்ற நண்பர்கள் அதிகமாக இருந்தால் அவர் அவ்வாறான வேலை செய்யும் இடங்களைத் தவிர்த்துக் கொண்டு தனது வேலைக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வது மிகவும் அவசியமானது.
அதுபோல் அவர் பார்க்கின்ற வேலை காரணமா, பழக்கதோஷம் காரணமாக, அவர் வேலையின் பொழுது மீண்டும் குடிக்கக்கூடிய சாத்தியங்கள் ஏற்படலாம். எனவே குடியிலிருந்து மீண்டு புதிய வாழ்ககையைத் தொடங்கும் ஒருவர் எப்பொழுதும் வழிப்பாக இருக்க வேண்டும். அவதானமாக இருக்க வேண்டம்.
சம்பளம் எடுக்கம் நாட்களில் மதுவை நோக்கிய இழு விசைகளும், தள்ளு விசைகளும் மிக அதிகமாகும் சாத்தியங்கள் காணப்படும். இது பற்றிய உள்ளுணர்வோடு இருந்தால் இவ்வாறான ஆபத்தான சந்தர்ப்பங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
குடும்பங்களில் நடப்பதுபோல், வேலை செய்யும் இடங்களிலும் சிலர் பழைய குடிக்கின்ற நிலையில் இருந்த வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் குத்திக்காட்டிக் கதைக்கலாம். இவ்வேளைகளில் எல்லாம் உணர்ச்சி வசப்படாது, அமைதியாக இருந்து அதனை எதிர்கொள்ளப் பழக வேண்டும்.
நான் இப்பொழுது மாறிவிட்டேன் என்று மனதினுள் அடிக்கடி சொல்லிக்கொள்ளலாம்.
மதுவும் பொருளாதாரமும்
மது ஒருவரிலே ஏற்படுத்துகின்ற பொருளாதாரத் தாக்கமானது மிக மிகப் பாரதூரமானது.
கீழே தரப்பட்டுள்ள எளிமையான கணக்கைச் செய்து பார்க்கலாம்.
அவர் கூலித்தொழில் செய்பவராக இருந்தால் அவர் மாதம் முழுக்க கடுமையாக வேலை செய்து வருகின்ற அவரது உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு இப்படிக் குடிக்கான செலவாகிப் போவதனைக் காணலாம்.
இரு ஒரு எளிமையான உதாரணக் கணக்குத்தான். உண்மையில் குறைந்த ஊதிய உழைப்பில் இருந்து கொண்டு குடிக்கும் பலர் தங்களது உழைப்பில் அரைவாசிக்கும் மேலாகத் தமது மதுபாவனைக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்ததப் பாரதூரமான பொருளாதாரத் தாக்கமானது மது அருந்துபவரோடு சேர்த்து அவரோடு கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களையும் பாதிக்கின்றது. இவ்வாறு பொருளாதாரம் தொடர்பாக ஏற்பட்டிருக்கக்கூடிய சில தாக்கங்களைக் கீழே பார்க்கலாம்.
- வேலை செய்ய முடியாமையினால் அல்லது வேலை இழந்தமையினால் வருமானம் குறையும் அல்லது அற்றுப் போகும்.
- குடும்பத்தில் ஏற்படும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பணப் பற்றாக்குறை ஏற்படும்.
- அடைவுகள் வைத்தோ, ஈடு பிடித்தோ, அதிக வட்டிக்கு கடன் வாங்கியோ மாளுகின்ற நிலை ஏற்படும்.
- போதைக்காக பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காது இதுவரை சேர்த்து வைத்த பணம் மற்றும் பொருட்களை இழத்தல்.
- அவசர தேவைகளுக்கெனக் கொஞ்சமேனும் சேமிப்புச் செய்ய முடியாத நிலை உருவாகும்.
- மொத்தத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீர்குலைந்து அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து விடும்.
ஆயினும் மதுவுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டும் மதுவை விட்டு விலகிய ஒரு புதிய வாழ்க்கை வாழ முயற்சிக்கின்ற நிலையில், அவரது குடும்பத்தின் பொருளாதாரத்தை எவ்வாறு திட்டமிடுவது? அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது? போன்ற விடயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது முக்கியத்துவமாகின்றது.
கீழே தரப்பட்டுள்ள சில விடயங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம்.
- ஒருவரது குடும்பத்திலுள்ள ஏனைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு பல்வேறு விதமான சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். அதிக முதலீடு தேவைப்படாத ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, சிறுதோட்டச் செய்கை போன்ற ஏதாவதொன்றையோ, பல வற்றையோ செய்யத் திட்டமிடலாம்.
- தற்போது அவரது ஊரில் இயங்கிக் கொண்டிருக்கும் அசர மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, மேலதிக பொருளாதார ஆதரவைப் பெற முயற்சிக்கலாம்.
- கடந்த காலத்தில் பார்த்து வந்த தொழில் பறிபோயிருந்தால், தற்போதைய மனமாற்றத்தையும், வாழ்க்கை முறை மாற்றத்தையும் அடிப்படையாக வைத்து, தொழில் வழங்குனருடன் கதைத்து, இழந்த வேலையை மறுபடியும் பெற்றுக்கொள்ளத் தீவிரமாகப் பாடுபடலாம்.
- நலிந்த போயிருக்கும் குடும்பப் பொருளாதாரத்தைச் சீர் செய்யும் முகமாக, அவரது குடும்பத்தில் இருக்கும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினருக்கும் வேலை வாய்ப்பைத் தேடலாம்.
- சிறுகச் சிறுகவாவது சேமிப்பு நடவடிக்கையைத் தொடக்கி வைக்கலாம்
இவை சில உதாரணங்கள் மட்டுமே. மதுவை விட்டு வந்தவரும், அவரது குடும்பத்தவரும் அவருக்கு ஊக்கமளிக்கும் நண்பர்களும் இவை போன்று எத்தனையோ வழிமுறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, மதுவால் சீரழிந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவலாம்.
நன்றி –
சா.சிவயோகன்
ச.ரவீந்திரன்
சி.கதிர்காமநாதன்
”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு
உளநல சங்கம்
மாவட்ட வைத்தியசாலை
தெல்லிப்பளை
2014