நமது நாளாந்த வாழ்க்கை உறவுகளை அடிப்படையாகக் கொண்டது. பலதரப்பட்ட உறவுகளை நாம் சந்திக்கின்றோம். அவை குடும்பங்களிலும், வேலைத்தளங்களிலும், நண்பர்கள் வட்டத்திலும், விதிகளிலும் எனப் பல பரிணாமங்களைப் பெறுகின்றன. உறவுகளை ஆரம்பிப்பதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் நாம், எமது குறிப்பிடத்தக்களவு நேரத்தையும் சக்தியையும், பணத்தையும் பயன் படுத்துகின்றோம். இவ்வாறான பல பயனுள்ள உறவுகளால் எமக்கும், எமது உறவுகளுக்கும், சமுதாயத்துக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. சிலவேளைகளில் எமக்குப் பயனளிக்காத சில உறவுகளை நாம் தொடர்வதில்லை. பலருக்குக் கெடுதலை ஏற்படுத்தக்கூடிய சில உறவுகளும் உருவாவதுண்டு.
உறவுகளை உருவாக்குவதற்கும் அவற்றைப் பேணுவதற்கும் அவசியமான சில காரணிகளை ஆராய்வோம். இவற்றில் உறவுகளை உருவாக்குவதற்குத் தனிமனிதர்கள் செலுத்தும் ஆர்வம், அவற்றுக்காகப் பயன்படுத்தக்கூடிய நேரம், ஒத்த ஆளுமைக் கூறுகள், உறவுகள் உருவாவதற்கான புறச்சூழல், உறவுகளில் தங்கியிருக்க வேண்டிய தனி மனிதர்களின் தேவை, அந்த உறவுகளைப் பேணுவதற்காக அவர்களால் பயன்படுத்தக்கூடிய வளங்கள் மற்றும் உறவுகளின் திருப்தியளிக்கும் தன்மை என்பன, உறவுகளின் நீண்டுநிலைக்கும் தன்மையை எடுத்தியம்பவல்லன. தொடர்பாடலை உளவியல் ரீதியாக நோக்கினால் அது ஒரு மனிதன் தன்னோடு தான் கொள்ளும் உறவு என்றும் பிறரோடு கொள்ளும் உறவு என்றும், வகைப்படும். இவையிரண்டும் ஒன்றிலொன்று தங்கியிருப்பவையும், ஒன்றினால் மற்றொன்று பாதிக்கப்படுபவையு மாகும். உதாரணமாக தன்னுடன் நல்லுறவைப் பேணும் ஒருவரால் பிறருடனும் நல்லுறவைப் பேணமுடியும். ஒருவர் தன்னுடன் பேணும் உறவிற்கு அடிப்படையாக அவருடைய குழந்தைப் பருவ அனுபவங்கள், தன்னைப்பற்றிய சுயமதிப்பு, சுயநோக்கு, குற்றவுணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம். நனவிலி மனதின் பங்களிப்பு மற்றும் அவருடைய தன்னைப் பற்றிய விழிப்புணர்வின் அளவு என்பன அமைவதை அவதானிக்கலாம். சில மனிதர்களின் ஆளுமைக்குள் உள்ள பிளவுபட்ட தன்மை, ஒன்றையொன்று எதிர்க்கும் பாங்கில் அமைவதால் அவர்களால் தம்முடன் ஒரு நல்லுறவைப் பேணுவது சிலவேளைகளில் சவாலானதாக அமையலாம்.
இவ்வாறான விடயங்களில் தங்கியிருக்கும் ஒரு மனிதனின் அடிப்படை ஆளுமையிலேயே பிற மனிதர்களுடனான உறவும் தங்கியிருக்கும். மேலும் இவ்வுலகைப்பற்றியும், உறவுகளைப் பற்றியும், தேவைகளைப் பற்றியும் நிலவும் மனிதர்களின் மனப்பாங்கும் மற்ற மனிதர்களுடனான அவர்களது உறவை நிச்சயிக்கின்றன. அடுத்ததாகத் தொடர்பாடலில் சில அடிப்படைகளையும் அவற்றை மேம்படுத்துவ தற்கான சில வழிமுறைகளையும் ஆராய்வோம்.
மேலே காட்டப்பட்ட வரைபடத்தில் Aயும் Bயும் தொடர்பாடலில் ஈடுபடும் இரு நபர்களாயின் X என்பது தொடர்பாடலில் கையாளப்படும் விடயத்தின் சார்பு நிலையாகும். இங்கு X என்பது A இற்கு அருகில் இருக்கும்போது அத் தொடர்பாடல் A இற்கு இலகுவானதாகவும் Bஇற்கு கடினமானதாயும் அமையும். Aக்கும் Bக்கும் சமதூரத்தில் X இருக்கும்போது இருவரும் சம ஈடுபாட்டுடன் தொடர்பாடலில் ஈடுபடமுடியும் பலமான ஆளுமை மிக்கவர்களால்
தன்னுடன் தொடர்பாடலில் ஈடுபடும் மற்ற நபருக்கு அருகில் தொடர்பாடல் மையம் இருக்கும்போது ஆரோக்கியமான தொடர்பாடலில் ஈடுபட முடியும்.
மேற்படி சமன்பாடு உறவுகளைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. உறவொன்றுக்காக ஒருவர் பயன்படுத்தும் சக்திக்கும் அவர்பெறும் திருப்திக்கும் உள்ள விகிதம் அவ்வுறவிலுள்ள பிறிதொருவர் பயன்படுத்தும் சக்திக்கும் அவர் பெறும் திருப்திக்கும் ஒரளவிலேனும் சமமாக அமையும் போதுதான் உறவுகள் நீண்டு நிலைக்கும்.
தன்னை வெளிப்படுத்தலும் நம்பிக்கையைப் பேணுதலும்:
இது நெருக்கமான உறவொன்றில் மிகவும் முக்கியமானது. மேலும் சுயவெளிப்பாடு நெருக்கமான உறவுகளுக்குரிய திறவுகோலாகவும் அமைகின்றது. தான் செவிமடுப்பவரின் பேச்சிலுள்ள இரகசியமாகக் காக்கப்பட வேண்டிய பல விடயங்களைப் பழக்க தோஷத்தால் பலருக்கும் கூறி, பல நெருக்கமான உறவுகளை நாம் இழந்துவிடுவதும் உண்டு.
உடலின்மொழியும்,உணர்வுவெளிப்பாடும்:
வார்த்தைகளால் சொல்ல முடியாத பல செய்திகளை எமது உடல் அவயவங்கள் பிறருக்குத் தெளிவாகச் சொல்கின்றன. கண்கள் இவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன. நாம் நிற்கின்ற தோரணை, நடக்கும் பாங்கு இருக்கும் விதம், பேசும் தொனி அணியும் ஆடைகள் என்பன எமது உண்மையான மனநிலையை வார்த்தைகள்
இன்றியே விளம்பக் கூடியவை.
துரதிஷ்டவசமாக நாம் வாயால் சிலவற்றைக் கூறும்போது எமது உடல் அதை மறுத்துரைப்பதை மற்றவரால் இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும்.
A – நெருக்கமான உறவு வலயம்
இது ஒருவரைச் சூழ இருக்கும் ஒன்றரை அடிவிட்டமுள்ள வட்டப் பிரதேசமாகும். எம்முடன் நெருக்கமான உறவில் உள்ள ஒருவரையே நாம் இவ்வட்டத்தினுள் அனுமதிப்போம். மேலும் சில வேளைகளில் நெருக்கமான உறவில் உள்ள இருவர், ஒருவர் மற்றவரை இவ்வலயத்திலிருந்து வெளியேறவும் அனுமதிப்பதில்லை. எமது சமுதாயத்தில் நாம் எம்மை அறியாமலேயே காதலர்களை இனங்காணுவது இந்த வலயத்தை இனங்காண்பதனாலாகும்.
B தனிப்பட்ட உறவு வலயம் (Personal Zone) இது ஒருவரைச் சூழவுள்ள 3 அடி விட்டமுள்ள பிரதேசமாகும். நெக்கமான உறவு அல்லாத ஆனால் தனிப்பட்ட உறவில் எம்மோடு இணைபவர்கள் நம் இந்த வலயத்தினுள் வருவார்கள். சாதாரணமாக நண்பர்கள் இந்த வலயத்துக்குரியவர்கள்.
C – சமூக உறவுவலயம் (SocialZone) – இது ஒருவரைச் சூழவுள்ள 6 அடி விட்டமுள்ள பிரதேசமாகும். சமூ உறவில் எம்முடன் இணைபவர்களுடன் நாம் இந்தப் பிரதேசத்தைப் பயன்படுத்துகின்றோம்.
D – பொதுசனஉறவுவலயம்(Publiczone)
இது ஒருவரைச் சூழவுள்ள 6 அடி விட்டமான பிரதேசத்துக்கு வெளியில் உள்ள வலயமாகும்.
பொருள் பொதிந்த உறவுகளைப் பேணிப் பயனுள்ள பல பணிகள் புரிய எமது உறவுக்ளைப் புரிந்து கொள்வோம்.
வைத்திய கலாநிதி ஜி.ஜே.பிரதிபன், MBBS, MD
நீரிழிவு சிகிச்சை நிலையம்,
யாழ். போதனா வைத்தியசாலை