நாம் எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களுக்குப் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்போது அது அவருக்கு உடற்சுகத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியதாகவும் நல்ல நினைவுகளைக் கொடுக்கக்கூடியதாகவும் பிரயோசனப்படக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்துகொள்வது நல்லது.
அந்த வகையில் பின்வரும் பொருட்களைக் கருத்தில் எடுக்கலாம். “பழங்கள், முட்டை, ஓவியங்கள், நல்ல புத்தகங்கள், பதிவேடுகள், உடை, தலைக்கவசம், குடை, பாரம் குறைந்த பாதணிகள், வீட்டில் சமைத்த பலகாரங்கள், முட்டைமா, பயற்றம்மா, உழுத்தம்மா, வேலைசெய்யும்பொழுது அணியும் கையுறை, உடற்பயிற்சி செய்யும் இயந்திரம், தாவரங்கள், விதைகள் ” போன்றவை. இப்பொருட்கள் உடற்சுகத்தைப் பேண உதவியாய் இருக்கும்.
நாம் எமது எதிரிகளுக்கும், கோபக்காரர்களுக்கும் பரிசுப்பொருட்களைத் தெரிவுசெய்யும்பொழுது சொக்லெட், இனிப்பு வகைகள், சோடா வகைகள், குடிவகைகள், மிக்சர், மாஜரின், பட்டர், கணினி, விளையாட்டுக்கான சீடிகள், சிகரெற் பக்கெற், பீடிக்கட்டு, பிஸ்கெற் பெட்டிகள் என்பவற்றில் ஒன்றையோ பலவற்றையோ தெரிவுசெய்துகொள்ளலாம்.
இவை உடற்சுகத்துக்கு தீங்கு விளைவிப்பவையாகும்.நாம் இன்னா செய்தாருக்கும் நன்னயம் செய்யும் பரம்பரையில் உதித்தவர்கள். எதிரியும் சுகத்துடன் வாழவேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். எனவே, இந்தப் பொருட்களை எதிரிக்குக்கூடப் பரிசாகக் கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்வோம்.
என்றும் ஆனந்தமும் ஆரோக்கியமும் கொடுக்கக்கூடிய பொருட்களைப் பரிசாகத் தெரிவுசெய்வோம்.
டாக்டர் சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ் போதனா வைத்தியசாலை