நோயாளிகள் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்படி எடுப்பதன்மூலமே முழுமையான குணப்படுத்தலைப் பெறமுடியும். மருந்துகளின் எண்ணிக்கையோ மருந்துகள் எடுக்க வேண்டியதற்கு இடையிலான கால அளவையோ தமது விரும்பின்படி மாற்றக்கூடாது. ஏனெனில், இவை இரண்டும் மருந்து இரத்தத்தில் நின்று செயற்படும் திறனை வைத்தே கணிக்கப்பட்டு வைத்தியரால் பரிந்துரைக்கப்படுகின்றன. எனவே, இவற்றைக் குறைப்பதன்மூலம் செயற்றிறன் குறைக்கப்பட்டு, குணமடைதல் தாமதப்படுத்தப்படும்.
எனினும், இவற்றைக் கூட்டுவதன்மூலம் மருந்தின் செயற்றிறனை அதிகரிக்கமுடியாது. மாறாக, அது நச்சுத்தன்மைக்கும், சிறுநீரகப் பழுதடைதலுக்கும் வழிவகுக்கும். மருந்து ஒன்று காலையும் மாலையும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அந்த மருந்தானது குறித்தவொரு நேரத்திலேயே ஒவ்வொரு நாளும் எடுத்தல் வேண்டும்.
உதாரணம்: காலையும் மாலையும் 8 மணிக்கு உள் எடுக்கப்பட்டால் அடுத்துவரும் நாள்களிலும் 8 மணிக்கே உள் எடுக்கவேண்டும்.
சாப்பாட்டுக்கு முன்னால், பின்னால் என்ற கட்டளைகளும் கவனத்திற்குரியவை.
உதாரணம்: சாப்பாட்டுக்குப் பின்னால் எடுக்க வேண்டிய மருந்தை முன்னால் எடுத்துக்கொண்டால் குடற்புண் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம். மருத்துவரின் அனுமதியின்றிப் பரிந்துரைக்கப்படாத வேறு மருந்துகளைச் சேர்த்து எடுக்கக்கூடாது. ஏனெனில், மருந்துகளிடையே இடைத்தாக்கம் ஏற்பட்டு மருந்துகளின் செயற்றிறன் அற்றுப்போகலாம். அல்லது பாதக விளைவுகளை உருவாக்கலாம்.
வைத்தியர் பரிந்துரைத்த மருந்துகளில் ஒன்றை எடுக்காது தவிர்த்தலும் ஆபத்தானதே. ஏனெனில், தவிர்க்கப்படும் மருந்து எடுக்கப்படும் மருந்தொன்றுக்குரிய செயற்றிறனுக்குத் தேவையானதாக இருக்கலாம்.
T.தமயந்தி,
மருந்துவ பீடமாணவி.