உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்.
பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தில் என்னவுள்ளது?
பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே வகையைச் சேர்ந்த பாம்புகளில்கூட ஒவ்வொரு பாம்பின் விஷத்தின் வீரியமும் மாறுபடும்.
விஷத்தை வெளியிடும் மற்ற எந்த விலங்கினத்தைக் காட்டிலும் பாம்புகளே மனிதர்களுக்கு மிகவும் அருகில் சென்று தாக்கி கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
உடலை எப்படி தாக்கும்?
பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.
ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இவை இரண்டு மரணம் வரை இட்டுச் செல்லக் கூடும்.
ரத்தத்தில் பாம்பின் விஷம் கலக்கும்போது அவை சிற்சிறு அளவில் ரத்தம் கட்டிப்போகச் செய்து, ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படலாம்.
சிலவகை நஞ்சுகள் நரம்பு மண்டலத்தை விரைவாகத் தாக்கி உடலில் மற்ற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் கொண்டுசெல்லப்படும் சமிஞ்கைகளை பாதித்து உடலை முடங்கிப் போகச் செய்யலாம். மரணமும் ஏற்படக் கூடும்.
விஷமுறிவு மருந்து
பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகளவில் மிகக் குறந்த அளவுக்கே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுவதும் அவற்றில் விலை மிகவும் அதிகமாக உள்ளதும் பாம்புக் கடி பட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.