விளையாட்டு, தொலைக்காட்சி , இணையம் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதிப்பதாக ஆய்வு கூறுகிறது
டிவி, கம்பூய்ட்டர் கேம்ஸிலேயே மூழ்கி நேரத்தை வீணாக்காதே என்று பெற்றோர்கள் அலுத்துக்கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கும் போல் தெரிகிறது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றை வைத்துப் பார்க்கையில் .. !
பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதோ, அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுவதோ அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ, அவர்களின் பதினோராவது ஆண்டு, அதாவது ஜிசிஎஸ்ஈ தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.
இந்த ஆய்வாளர்கள் குழு , 14 வயதான சுமார் 800 மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனித்து, அவர்களது ஜிசிஎஸ்ஈ முடிவுகளை ஆராய்ந்தது.
தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை பார்க்கும் மாணவர்கள் அவர்களது ஜிசிஎஸ்சி தேர்வுகளில் மொத்தமாக இரண்டு கிரேடுகள் குறைவாக பெற்றதாக அந்த ஆய்வு கூறுகிறது.
ஒரு மணி நேரம் படிப்பு தொடர்பான வீட்டுவேலை ( ஹோம்வொர்க்) அல்லது வாசித்தலில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி அதை செய்யாத அவர்களது சக மாணவர்களின் தேர்ச்சியைவிட அதிகமாக இருந்தது. விளையாட்டு போன்ற உடல்ரீதியான நடவடிக்கைகள் அவர்களது கல்விச் செயல்பாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் காட்டவில்லை.
ஆனால் அதிக நேரம் படிக்கும் மாணவர்கள், இணையம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றிலும் அதிக நேரம் செலவழித்தால், அப்போதும் அவர்களது தேர்வு மதிப்பெண்கள் குறைகின்றன என்று இந்த ஆய்வு கோடிகாட்டுகிறது.
மாணவர்கள் இது போன்ற ஒளித்திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது அவர்களுக்கு முக்கிய பலன்களைத் தரக்கூடும் என்கிறார் இந்த ஆய்வு முடிவுகளை எழுதியவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்தர் வான் ஸ்லுயிஜ்ஸ்.
ஆனால் இந்த முடிவுகளை மேலும் திட்டவட்டமாக உறுதிசெய்ய மேலும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று கூறும் மற்றொரு ஆய்வாளர் டாக்டர் கிற்ஸ்டின் கோர்டர், ஆயினும், ஜி.சி.எஸ்.ஈ முடிவுகள் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகள்கள் ஒளித்திரை கருவிகளில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது குறித்து பரீசிலிக்கவேண்டும் என்று கூறுகிறார்.