1. தொய்வு நோய்
தொய்வு என்பது சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு நோயாகும். உலகெங்கிலும் ஏராளமான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தநோய் எமது உள்ளெடுக்கும், வெளிவிடும் சுவாசச் செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சுவாசக்குழாயிலும் அழற்சியை உண்டு பண்ணுகிறது. தொய்வினால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு இழைப்பு ஏற்படும். இந்த நோய் சிறுபிள்ளைகளுக்கு இலகுவில் ஏற்படுகிறது. இதனால் உறக்கம் மாத்திரமின்றி கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படையலாம்.
தொய்வு நோயின் பொதுவான அறிகுறிகள்.
இருமல்( பெரும்பாலும் இரவில்), இழைப்பு, நெஞ்சில் அழுத்த உணர்வு, நெஞ்சிற்குள் உள்மூச்சு ஒலி என்பன காணப்படும்.
தொய்வு நோய் ஒருவரின் வயதையோ அவரது சமூக அந்தஸ்தையோ பார்ப்பதில்லை. அது எவருக்கும் வரலாம். சில சமயங்களில் நோய் கடுமையாகவும் தாக்கக்கூடும். எனவே இந்த நோய் குறித்து நாம் அலட்சியமாக இருக்க முடியாது. தொய்வு ஒரு நீண்டகால நோயாக இருந்த போதிலும், நவீன சிகிச்சைகளின் மூலம் நோயைத் தணித்து, துன்பமில்லாத புதிய வாழ்ககையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தொய்வு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
தொய்வு நோய் ஏற்படக் பரம்பரைக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. தொய்வு ஒரு தொற்று நோய் அல்ல. பல்வேறு காரணங்களின் விளைவாக சுவாசக்குழாய் அகவணி ஒடுங்குவதால் தொய்வு ஏற்படுகின்றது. அதற்குப் பின்வரும் காரணங்களாக அமையலாம்.
- ஒவ்வாமை
- பூக்களின் மகரந்தப் பொடி
- வைரஸ் மற்றும் பக்ரீரியாவினால் தோற்றுவிக்கப்படும் அழற்சி
- புகைப்பிடித்தல்
- வீட்டுப்பிராணிகளின் ரோமம்.
எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தெளிவான காரணத்தை இனங்காண முடிவதில்லை. தொய்வு நோய் தீவிரமடைவதற்குப் புகைப்பிடித்தல் ஒரு காரணமாகும்.
சுவாசக் குழாயை விரிவடையச் செய்து, மூச்செடுப்பதை இலகுவாக்குவதற்குச் சில மருந்து வகைகள் பாவிக்கப்படுகின்றன. சல்பியூட்டமோல், டெர்பியூட்டலின் என்பன அத்தகைய இரு மருந்துகளாகும். ஆஸ்துமா கடுமையாகும் போது, முகத்தில் அணியின் கருவியின் ஊடாக சுவாசிப்பு மருந்தைக் கொடுப்பதன் மூலம் நோயின் தாக்கத்திலிருந்து விரைவாக நிவாரணம் பெறமுடியும். சிகிச்சை நிலையங்களிலும், வைத்தியசாலைகளில் பெரும்பாலான அவசர நிலைமைகளில் இந்தச் சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் நோயாளி இலகுவாகச் சுவாசிக்கக்கூடிய நிலையை மீள அடைகின்றார்.
தொய்வு மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமானால், நோய் நிலைமையை நீண்ட காலத்துக்குக் கட்டுப்பாட்டடில் வைத்திருப்பது அவசியமாகும். இதற்காக உட்சுவாச ஆவி, மருந்தாக ஸ்டீரொய்ட்ஸ் வகையைச் சேர்ந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வாய்மூலம் சுவாசிக்கப்படும் இந்த ஆவி மருந்துகள் தொய்வு நோயாளிகளுக்குப் பெரமு் துணையாக அமைகின்றன. ஒரு தடவையில் மிகச்சிறிய அளவு மருந்தே சுவாசிக்கப்படுவதால், இது ஒரு பாதுகாப்பான நிவாரண வழியாகும்.
வைத்திய ஆலோசனையைச் சரியாகப் பின்பற்றினால், சுவாசப்பைக்கு அளவான மருந்தை மட்டும் பாவித்து, நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, பக்கவிளைவுகளையும் குறைக்க முடியும். இந்தச் சிகிச்சை முறை, நோயாளியை மருந்துக்கு அடிமையாக்கி விடும் என்று கூறுவதில் எந்தவித உண்மையுமில்லை. மாறாக தொய்வு நோய் ஒருவரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கக்கூடியது. இதனை மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தொய்வு நோயைத் தவிர்ப்பதற்கு செய் வேண்டியவை.
- புகைப்பிடிக்கக் கூடாது.
- தீய வாயுக்களை வெளிவிடும் இரசாயனப் பதார்த்தங்களுக்கு அருகில் இருக்க வேண்டாம்.
- நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளையோ, மென்பஞ்சுப் பொம்மைகளையோ படுக்கையறையில் வைத்திருக்க வேண்டாம்.
- கரப்பொத்தான் போன்ற பூச்சிகள் வராதவாறு படுக்கையறையைச் சுத்தமாக வைத்திருக்கவும்.
- வீட்டைக் கூட்டித் துப்பரவு செய்யும்போது, தூசு உங்கள் சுவாசத்தில் கலப்பதைத் தவிர்க்கவும்.
- சுவாசப்பையில் தொற்று ஏற்பட்டால், தாமதமின்றிச் சிகிச்சை பெறவும்.
- சுவாசத் தொற்றுநோய் உள்ளவர்களிடமிருந்து விலகி இருக்கவும்.
- இழுப்பு. வரண்ட இருமல், சுவாசிக்கக் கஷ்டம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்திய உதவியை நாடவும்.
- ஒரு தடவை தொய்வு நோய் வந்தால், அது மீண்டும் மோசமாக வராமலிருக்க முன்னெச்சரிக்கையாக இருக்கவும்.
தொய்வு நோய்க்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் நிகழக் கூடிய பாதிப்புக்கள்
- நோய் தீவிரமடைந்தால் உயிருக்குக்கூட ஆபத்தாக அமையலாம்.
- நோயை அலட்சியம் செய்வதனால் பெரும்பாலான நோயாளிகள் அவசர சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
- இரவில் அல்லது அதிகாலையில் வைத்தியரைத் தேடி ஓட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
- ஒருவர் தனது நோய் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், அவரது தொழிலும், அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும்.
- அடிக்கடி நோய்வாய்ப்படும் பிள்ளைகளின் உடல் வளர்ச்சியும், கல்வியும் பாதிக்கப்படும்.
- தொய்வு நோய் உக்கிரமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வைத்திய உதவியை நாடவும்.
- இரவில் நோய் மோசமடைந்தால், நோயாளியை வைத்தியரிடம் கொண்டு செல்வதற்கு விடியும் வரை பார்த்துக்கொண்டிருப்பது ஆபத்தாகலாம்.
2. சிறுவர்களில் தொய்வு நோய்
சிறுவர்களில் ஏற்படும் பொதுவான நாட்பட்ட நோய் தொய்வு நோயாகும். இது பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்கின்றது. இது வழமையான மீள மீள ஏற்படும் இருமலா, முட்டாக, மூச்செறிதல் கடினமாக அமையும். இதற்குக் காரணம் சுவாசப் பாதையில் மீள்தன்மையுடைய சுருக்கத்தினால் ஏற்படும் மாற்றமாகும். இதற்குப் பல காரணிகளின் தூண்டல்கள் ஏதுவாக அமையலாம்.
தொய்வு நோய் சுவாசக் குழாய்த் தசைகளின் மீள்தன்மைச் சுருக்கத்துடன் மட்டும் தங்கி இருப்பதில்லை. இதன் போது சுவாசப் பாதையில் அழற்சித் தாக்கம் ஏற்படுகின்றது. இந்த அழற்சித் தாக்கம் ஏற்பட்டபின் சுவாசப்பாதை வெவ்வேறு தூண்டல்குளுக்கு இலகுவில் உடன்படக்கூடியது.
இது சுவாசப்பாதைத் தசைகளில் பிடிப்பு ஏற்பட ஏதுவான காரணியாக அமைகின்றது. இவற்றினால் சுவாசப்பாதை மீளக்கூடியதாக சுருங்கும். இது தாகாகவோ அல்லது சிகிச்சையின் மூலமோ மீளும்.
தொய்வு நோயில் பிரதான மாற்றங்கள்
- அதிக அளவு சளித்திரவம் சுவாசப்பாதையில் இயங்கும்.
- சுவாசக் குழாயின் வட்டத்தசைகள் சுருங்கும்.
- சுவாசக் குழாயின் அகவணி தடிப்படைதல்.
சிறுவர்களில் ஏற்படும் தொய்வு நோயின் தன்மைகள்
குழந்தைகளில் மிகவும் பொதுவான நீண்ட நாள்களுக்குக் காணப்படும் நெஞ்சு நோ, 80 வீத தொய்வு நோய் ஏற்படும் பிள்ளைகள் 5 வயதை விடக் குறைந்தவர்கள்.
நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை வைத்தியருக்குத் தமது நோய் நிலைமையைக் கூறமாட்டார்கள். வைத்தியரே கண்டறிதல் வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் உச்சவெளி மூச்சுவீதமானியை ஊதக்கூடியவர்களாக இருப்பர். ஆனால் 5 வயதுக்குள் இதனை மேற்கொள்ள முடியாது.
இவையாவும் தவறான நோய் நிலையை வைத்தியர் கருத வழிவகுத்துவிடும். மேலும் தொய்வு நோயை அடையாளம் காணாது விடவும் ஏதுவாக அமைந்து விடும்.
நோய் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டாலும் சரியான மருந்துச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில்லை. சுவாச உறிஞ்சிகளை உபயோகிக்க மறுப்பர். பெற்றோர் தமது பிள்ளைகளுக்குத் தொய்வு நோய் என ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அடுத்து மூச்சு உறிஞ்சி மூலமான மருந்துகளை உபயோகிக்கவும் விரும்பமாட்டார்கள். இது தவறான அணுகுமுறையாகும்.
சிறுபிள்ளைகளில் ஏற்படும் ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகளில் ஏராளமானவை நோயை இனங்கண்ட பின்பும் முடிவதில்லை. தொய்வு நோயைச் சிறுவர்களில் அடையாளம் காண மருத்துவரீதியில் ஐயம் கடுமையாக இருத்தல் வேண்டும். எளதில் தொய்வு என அடையாளப்படுத்த முடியாது. ஏனெனில் பல நோய் நிலைகள் தொய்வு போல் தோற்றலாம்
தொய்வு நோயை அடையாளம் காணுவதற்கான படிமுறைகள் ஏனைய நோய்களைப் போன்றதே அவையாவன.
- சிறந்த மருத்துவ சரிதம்
- அவதானமான உடற்பரிசோதனை
குழந்தைகளின் பெற்றோரிடம் வினாவி நோய் நிர்ணயித்தை உறுதிப்படுத்துவதற்கு முன் பொறுமையாக பெற்றோரிடமும், இயலுமாயின் குழந்தையிடமிருந்தும் அவர்கள் கூறுவதைச் செவிமடுக்க வேண்டும்.
குழந்தையில் தோய்வு நோய் உண்டென்பதை உறுதிப்படுத்துபவை
- மீள மீள வரும் இருமல்
இது மிகவும் பொதுவான அறிகுறியாகும். நோயாளியின் சரிதத்தில் இருந்து சுவாசத்தின் போது வரும் வேறுபட்ட சத்தங்களைக் கவனிக்க வேண்டும். சில வேளைகளில் வைத்தியரே அதனை அறியக்கூடியதாக அமையும். - மீள மீள வரும் இருமல், குழந்தைப் பிள்ளைகளுக்கு அடிக்கடி வெறுமனே இருமல் ஏற்பட்டுக்கிருமிகள் தொற்று ஏற்படுவதில்லை, காய்ச்சல் இல்லை எனின் அது தொய்வு நோயாக இருக்கலாம்.
- இரவு நேரத்தில் ஏற்படும் இருமல் கடுமையாகக் காணப்படின் அது சிறுவர்களில் தொய்வு நோயின் வெளிப்பாடாக அமையலாம்.
- அடிக்கடி மூச்செடுக்க கஷ்டப்படல், ஆஸ்துமா சுவாசப்பாதைச் சுருக்கத்துடன் தொடர்பு உடையதாகக் காணப்படுவதால் மூச்செடுக்கக் கஸ்டம், சிறிது உடற்பயிற்சியின் பின்போ, உடற்தொழிற்பாட்டின் பின்போ காணப்படும். பாடசாலை மாணவர்கள் இதனால் விளையாட்டுக்களில் பங்குபற்ற மாட்டார்கள்.
தொடரும்……
மருத்துவர் . சி. யமுனானந்தா MBBS.DTCD