பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பகலவனுக்கும் ( சூரியனுக்கும்) எலும்புக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து “எல்” என்ற வேர் சொல்லில் இருந்து எலும்பு என்ற பெயர் உருவானது. அதாவது எல் என்றால் ஞாயிறு, ஒளி என்று பொருள். ஞாயிறு ஒளியில் உள்ள நுண் ஊதாக் கதிர்கள் தோலினூடு ஊடுருவிப் பாய்ந்து வன்திசுவாகிய எலும்பு கெட்டிப்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர். இன்றைய மருத்துவ விஞ்ஞானிகளும் எலும்பு ஒளியினால் உருவாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் தலை முதல் கால் வரை 216 எலும்புகள் காணப்படுகின்றன.
தலை எலும்பு – 22
உட்காது எலும்பு – 06
விலா எலும்பு – 25
கை, கால் எலும்பு – 64
கால் எலும்பு – 66
முதுகு எலும்பு – 33
மொத்தம் – 216
தமிழில் உள்ள உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 உயிர் மெய் எழுத்து 216 .
எனினும் உடல் வளர வளர மண்டை ஒட்டிலும் இடுப்புப் பகுதியிலும் எலும்புகள் ஒன்றாகக்கூடி பொருந்தி விடுகின்றன. இதனால் வளர்ந்த ஒருவரில் 206 ஆக எண்ணிக்கை குறைவடைகின்றது. மேலும் 25 வயதுக்குப் பின்னர் எலும்புகள் நீளவாட்டில் வளருவதில்லை.
எலும்பானது ஒர் உயிரற்ற திடப்பொருள் அன்று. உயிர் அணுக்கூட்ட்களினால் ஆன உயிர் உள்ள பொருள் வன்திசுவாகும். எலும்புக்குள்ளே உண்டாகின்ற சத்துதான் நமது நரம்பு, தசை, இரத்தம் முதலிய எல்லா பாகங்களையும் வளர்க்கின்றது.
உடலில் உள்ள தசைகளை இயங்கச் செய்வதும் மென்திசுக்களு்கு உருக்கொடுத்து அவற்றை நல்ல முறையில் பாதுகாப்பதும் வன்திசுவாகிய எலும்பின் கடமையாகும். எனவே எலும்பினை நாம் பாதுகாக்கத் தவறின் மற்ற உறுப்புகளை பாதுகாக்க முடியாது. எனவே நாம் எமது என்புருவை பொன்னுருவாக எண்ணிப் பாதுகாக்க வேண்டும்.
குழந்தையின் எலும்புகளில் புரதப் பொருள் அதிகளவில் இருக்கும். அதனால் அவை ஓரளவுக்கு வளையும் தன்மை உடையவை. எளிதில் முறியாது. எனினும் நடுத்தர வயது உடையவர்களின் எலும்புகளில் கனிப்பொருள்கள் அதிகமாக காணப்படும். வலுவான தாக்குதலால் மட்டும் உடையக்கூடியது. முதியவர்களின் எலும்புகளில் புரதப் பொருள், கனிப்பொருள் குறைவாக இருப்பதால் எலும்பு வலுவிழந்து காணப்படுகின்றது.
எலும்பை பாதுகாப்பதற்கு சில ஆலோசனைகள்.
- எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் அவற்றைச் சரியான முறையில் சீர் செய்ய முயலுதல் வேண்டும். இல்லாவிடின் முறந்த எலும்புகளின் முனைகள் மழுங்கிப் போவதுடன் அவை பொருந்தும் தன்மையும் இழக்கின்றன. எனவே உரிய மருத்துவ சிகிச்சைபெறுதல் வேண்டும்.
- அதிகளவு கோப்பி மதுபானம் அருந்துவதைக் குறைத்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல்.
- ஆஸ்டியோ போரசிஸ் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இதற்கான மருந்துகளை ஒழுங்காக எடுக்க வேண்டும்.
- எலும்புகளின் நோய் நிலைக்கு ஏற்ப அவர்களுக்கு வைத்தியரால் ஆலோசனை வழங்கப்படும். மருந்துகளை எடுத்தல், உடற்பயிற்சிகளை செய்தல் வேண்டும்.
- எலும்புகளின் போசாக்கினை பேணுவதற்கு பச்சைக் காய்கறிகள், பால், சீஸ், முட்டை மற்றும் கடல் உணவுகள், கல்சியம் சேர்க்கப்பட்ட தோடம்பழச்சாறுகள் மற்றும் விற்றமின் D அதிகளவு உள்ள உணவுகளை எடுத்தல் வேண்டும்.
- வயதானவர்கள், 50 – 60 வயதுடைய பெண்கள் வைத்தியரினால் உத்தரவிடப்படும் பரிசோதனைகளை செய்து எலும்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும்.
எஸ்.சுதாகரன்.
தாதிய உத்தியோகத்தர்
யாழ் போதனா வைத்தியசாலை