ஒரு குழந்தை பிறக்கும் போது, இயற்கையாக அதன் ஒர் உணவாகத் தாய்ப்பால் அமைகிறது. குழந்தைக்கு ஏற்றவகையில் தாய்ப்பால் எல்லாப் பதார்த்தங்களையும் கொண்டுள்ளது. தாய்ப்பாலுக்கு ஈடாக வேறு எந்தப் பாலும் அமையாது. தாய்ப்பாலூட்டலானது குழந்தைக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோன்று தாய்க்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது.
குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்.
- குழந்தைக்கு தேவையான அளவில் அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் உண்டு. எனவே தான் தனித்தாய்ப்பாலூட்டல் முதல் ஆறு மாதங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றது.
- தாய்ப்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு பதார்த்தங்கள், குழந்தையை இலகுவில் தொற்றக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது. குறிப்பாக வயிற்றோட்டம், குடல் சார்ந்த நோய்கள், சுவாசத்தொகுதி தொற்று நோய்கள், என்பவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலிலும் பெற்றுக்கொள்ள முடியாது.
- குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் பிறந்த தாய் பாலருந்தாத குழந்தைகள் நிறைகுறைந்த குழந்தைகளாகவும், வசதிபடைத்த குடும்பங்களில் பிறந்த தாய்ப்பால் அருந்தாத குழந்தைகள் அதிக நிறை (Obesity) உடையவர்களாகவும் காணப்படுவார்கள். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் குழந்தைக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது. அதிக நிறையுடைய குழந்தைகளுக்கு பின்னர், இருதய வருத்தங்கள், சலரோகம், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படலாம். அதேபோல் நிறைகுறைந்த பிள்ளைக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
- தாய்ப்பாலானது குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வாமை சம்பந்தமான நோய்களிலிருந்து ( ஆஸ்மா, எக்சிமா, பீனிசம்) பாதுகாப்பளிக்கின்றது.
- தாய்ப்பால் அருந்தும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதுடன், அதற்கு தாயின் அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கிறது.
தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்
- தாய்ப்பாலுட்டிய தாய்க்கு, தாய்ப்பாலூட்டாத தாயைவிட மார்பு புற்று நோய்க்கான வாய்ப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. எனவே தாய்யபாலூட்டல் மார்பகப் புற்று நோயிலிருந்து பாதுகாக்கின்றது.
- தாய் மீண்டும் கர்ப்பந்தரிப்பது தாமதமாகும். எனவே தாய்ப்பாலூட்டலானது ஒர் இயற்கையான கர்ப்பத்தடை முறையாகும்.
- பிள்ளைபெற்ற தாயின் உடற்பருமன் குறைந்து, சாதாரண உடலமைப்பு, அழகும் விரைவில் கிடைக்கும்.
- தாய்பாலூட்டலின் மூலம் தாய்க்கு வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்பு மென்மையடைதல் (osteoporosis) போன்றவை ஏற்படும் வீதம் குறைவடைகின்றது.
- தாய்ப்பாலூட்டும் தாய்க்கு, குருதிச்சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகின்றது.
- மேலும் தாய்க்கு, பிள்ளை மீதான பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.
குடும்பத்துக்கு கிடைக்கும் நன்மைகள்
- தாய்ப்பாலானது, பணம் கொடுத்து வாங்கு் பொருளல்ல, எனவே பணச் செலவு ஏற்படாது.
- பாலைத் தயாரிப்பதற்கு உபகரணங்களோ, நேரமோ தேவைப்படாது
- தாய்ப்பால் தூய்மையான முறையில் கிடைப்பதாலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாலும், வைத்திய செலவுகளோ, தந்தை வேலைக்குச் செல்லாமல் இருக்கவேண்டிய தேவையோ ஏற்படாது எனவே குடும்பத்தில் பிரச்சினைகளின்றி மகிழ்ச்சி நிலவும்.
இதுபோன்ற காரணங்களால் தான். தனித்தாய்ப்பாலூட்டல் ஆறு மாதம் வரைக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு பானமோ, உணவோ, நீரோ சாதாரணமான ஒரு குழந்தைக்குத் தேவைப்படாது. குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் மட்டுமே மருத்துவர்கள் மாற்று பாலூட்டலை பரிந்துரை செய்வார்கள்.
குழந்தைக்கு தேவையான போதெல்லாம் தாய்ப்பாலூட்டலாம் ஆனால் ஆறு மாதம் முடிந்தவுடன் மிகை நிரப்பு ஆகாரங்கள் புகட்ட வேண்டும். அப்போது தாய்ப்பால் கொடுக்கும் தடவைகள் குறைவடையும் எனினும் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பாலூட்டல் தொடர்வது சிறந்தது.
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கும் முறைகள்.
- குழந்தை பிறந்தவுடன் தாயும் குழந்தையும் தோலிற்கு தோலான தொடுகையுடன் ஒன்றாக இருக்க இயலுமானவரை முயலவேண்டும். அதனால் குழந்தை முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை பருகக்கூடியதாக இருக்கும்.
- இயலுமானவரை தாயையும் குழந்தையையும் தேவையின்றி பிரித்து வைத்திருத்தலாகாது.
- மருத்துவக் காரணமின்றி தாய்க்கு நித்திரை உண்டாக்கும் வலி மருந்துகளையோ, சிசேரியன் சத்திரசிகிச்சையையோ தவிர்க்க வேண்டும்.
- தாய்க்கு குழந்தை பால் அருந்த ஆயத்தமாகும் அறிகுறிகளை தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் சுகாதார சேவையாளர்கள் தாய்ப்பாலூட்டும் சரியான முறைகளை கற்பிக்க வேண்டும். குறிப்பாக முதல் பிரசவத்தின் பின்னர் தாய்பாலூட்டலுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும்.
தாய் குழந்தைக்கு தேவையேற்படும் போதெல்லாம் தாய்ப்பாலூட்ட வசதி செய்து கொடுப்பதுடன் எதுவித சூப்பிகளையோ, போத்தலையோ அல்லது குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் எந்தப் பொருளையும் கொடுக்கக்கூடாது. தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் பற்றி தாய்மாருக்கு அறியச் செய்ய வேண்டும்.
சுகாதார நிலையங்களில் சுகாதார சேவையாளர்கள் மற்றும் பால் சம்பந்தமான ஊக்குவிப்பை விளம்பரப்படுத்தக்கூடாது. வேலைக்குச் செல்லும் தாய்மார். தாய்ப்பாலூட்டலைத் தொடர்வதற்காக பெரும்பாலான நிறுவனங்களில் பாலூட்டும் நேரத்திற்கான விடுப்பு கொடுக்கப்படுகின்றது. மேலும் வேலைக்குச் செல்ல முன்னர் தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து தாய் இல்லாத போதும் வீட்டில் உள்ளோர் குழந்தைக்கு கிண்ணம் மூலம் பருக்கலாம். அதற்காக தாயை ஊக்கப்படுத்த வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் தாயின் போசாக்கும் முக்கியமானதாகும். தாய் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன் அதிகளவு நீராகாரங்களையும் எடுக்க வேண்டும். அப்போதுதான் போதியளவு தாய்ப்பால் பிள்ளைக்குக் கிடைக்கும். மேற்கூறப்பட்ட வழிமுறைகள் மூலம் தாய்ப்பாலூட்டலை ஊக்குவித்து ஆரோக்கியமான குழந்தையை வளர்த்துக்கொள்ள வழியுண்டு.
Dr.ந.ஸ்ரீசரவணபவானந்தன்.
குழந்தை வைத்திய நிபுணர்.
யாழ் போதனா வைத்தியசாலை.