ரவ்டோ(Rhabdo) குடும்பத்தைச் சேர்ந்த வைரஸால் ஏற்படும் இவ் வைரஸ் இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை அதிகம் தாக்கும். உமிழ் நீரூடாக தசைக்கும் நரம்புக்கும் பரவிச்செல்லும். அதனால் நரம்புக் கடத்தியூடாக மூளைக்குச் சென்று உயிர் இரசாயன பொருளைத் தாக்குவதால் நரம்பிழையம் பாதிக்கப்படுகின்றது. இது நீர் வெறுப்பு நோய் அல்லது விலங்கு விசர் நாய்க்கடி நோய் எனப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையாகும்.
நோயரும்பும் காலம்.
இது பல காரணிகளில் தங்கியுள்ளது. கடிபட்ட இடத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட தூரம், கிருமிின் அளவு, வீரியம், காயத்திக் தன்மை, கடிபட்ட இடத்தில் காணப்படும் நரம்பு முடிச்சுகளின் எண்ணிக்கை, கடிபட்டவரது நோயெதிர்ப்பு சக்தி நிலை என்பவற்றைப் பொறுத்து சில நாள்கள் தொடர்ந்தும் பல வருடங்கள் வரை வேறுபடலாம். ஆனால் பொதுவாக 3 மாதம் தொடக்கம் 2 வருடங்கள் வரை எடுக்கலாம்.
இவற்றில் 80 வீதமானவை கொடூரமானவை. இதன் போது நாய் அலைந்துதிரியும். அநாவசிய நடத்தைகளை வெளிக்காட்டும். 20 வீதமானவை மென்மையானவை இதன்போது நாய் வாடி, பயந்து ஒதுங்கி நிற்கும்.
பரவும் முறை
தொற்றுக்குள்ளான விலங்கு கடிக்கும்போது அல்லத மென்சவ்வு உள்ள பகுதிகளில் நக்கும்போது அல்லது வேறுவழியில் உமிழ்நீர் குருதியுடன் கலக்கும்போது தொற்றை ஏற்படுத்துகின்றது. நோய்காவி பிரதானமாக நாய் அரிதாக ஓநாய், நரி, பூனை, கீரி, குரங்கு, வௌவால் மூலம் பரவுகின்றது. மனிதனில் இருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையின் மூலமும் பரவலாம்.
நாயில் நீர் வெறுப்பு நோயின் அறிகுறிகள்
- கண்ட பொருள்களையும் கடிக்கும்.
- நீர் அருந்தாது அல்லது தவிர்த்துக்கொள்ளும்
- அதிகரித்த உமிழ்நீர்ச்சுரப்பு வெளியேறியபடி இருக்கும்.
- திடீரென கடிக்கும்.
- சுய கட்டுப்பாடற்ற செயற்பாடுகள்
- பெரும் குரலில் ஊளையிடும்.
- வால் பின்னங்கால்களுக்கிடையில் தொங்கிக் கொண்டிருக்கும்.
மனிதனில் நீர் வெறுப்பு நோயின் அறிகுறிகள்
- தொண்டைப் பகுதி இறுக்கமடைந்து காணப்படும்
- காய்ச்சல், வியர்வை
- மூச்சுக்கஷ்டம்
- அதிகரித்த உமிழ்நீர்ச் சுரப்பு
- காற்றுக்குப் பயம் / காற்றை எதிர்கொள்ள முடியாமை
- நீருக்குப் பயம் / நீர் அருந்தாமை
- தொடர்பற்ற பேச்சுக்கள், நடவடிக்கைகள்
- கோபமடைதல்
- வெளிச்சத்துக்குப் பயந்து அதிக உறுத்துதல் காணப்படும்.
- உணர்வு நீக்கம்.
- அதிகரித்த சுரப்புக்கள் வெளியேறுதல்
கடியின் ஆபத்தான தன்மைகள்
- தலை, முகம், கழுத்துப் பகுதிகளில் கடித்தல்
- பல இடங்களில் கடித்தல்
- முதுகு மார்பில் கடித்தல்.
- உள்ளங்கை, கால், விரல் பாலுறுப்பில் கடித்தல்
- ஆழமான இழையங்களில் பாதிப்பு ஏற்படும் வகையான கடித்தல்
- கண், மூக்கு, உதடு மற்றும் பாலுறுப்புகளில் நக்குதல்.
- காட்டு விலங்குகளால் ஏற்படுத்தப்படும் கடி.
- அடையாளம் காணமுடியாத தொடர்ந்து 3 வருடங்கள் தடுப்பு மருந்து போடப்படாத விலங்குகளின் கடி.
- கடித்து 14 நாள்குளக்குள் நாய் இறத்தல் அல்லது சுகவீனமுறுதல்
முதலுதவி
கடிபட்ட இடத்தை ஓடும் நீரில் 15 நிமிடங்கள் வரை கழுவுதல், சவர்க்கார நீர் கொண்டு கழுவுதல், பின் தொற்றுநீக்கி திரவம் கொண்டு துடைத்து விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுதல்.
பரிசோதனைகள்
- உடலைப் பரிசோதித்தல்
- மூளையை CT ஸ்கான் செய்து பார்த்தல்
- MRI பரிசோதனை
- பிறபொருள் எதிரியை கண்டறிதல்
- மூளைய முண்ணான் பாய் பொருள் எடுத்து பரிசோதித்தல்
சிகிச்சை முறைகள்
ARV ஊசி
தசையினுள் அல்லது தோலின் கீழ் தடுப்பு மருந்து ஏற்றுதல், கடித்த அன்று, மூன்றாம் நாள், ஏழாம் நாள், முப்பதாம் நாள், தொண்ணுராம் நாள் ஊசி போடப்பட வேண்டும். முதல் மூன்று தடவையும் இரு கைகளிலும் ஊசி போடப்பட வேண்டும்.
ARS ஊசி
கடுமையான காயம் எனில் காயத்தின் மேல் போடப்படும். Tetanus Toxoid அவரின் தேவையைப் பொறுத்து பராமரித்து சிகிச்சை வழங்கப்படும்
நீர் வெறுப்புநோய் ஏற்பட்ட ஒருவருக்கான பராமரிப்புக்கள்
- இருட்டறையில் அல்லது மெல்லிய வெளிச்சமுள்ள இடத்தில் வைத்துப் பராமரித்தல்.
- அமைதியான இடத்தில் வைத்து பராமரித்தல்
- நீரை வாயால் அருந்தாமையால் நாள மூடாக திரவம் கொடுக்க வேண்டும்.
- கூடுதலான காற்று இல்லாத இடத்தில் இவரைத் தொற்தரவு பண்ணாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.
- சாந்தப்படுத்தும் மருந்து, நித்திரையைத் தூண்டும் மருந்துகள் மூலம் துயில் நிலையில் வைக்க வேண்டும்.
தடுத்தல்.
- தொற்றுக்கள்ளானது என கருதப்படும் நாயால் ( விலங்கால்) கடியுண்டவர்களுக்கான விலங்கு விசர் நாய்க்கடிக்கு எதிரான தடுப்பு மருந்து ஏற்றுதல்.
- நாய்களுக்கான தடுப்பு மருந்து ஒழுங்காகப் போடப்பட வேண்டும்.
- நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாடு மூலம் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்துதல்.
- வளர்ப்பு நாய்களை கட்டிவைத்தல்
விலங்கு விசர் நாய்க்கடி நோய் ஏற்பட்டால் மரணம் நிச்சயம். மருந்து ஏற்றுவதால் வராது தடுக்கலாம். விலங்கு விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்
ரி.தவஜீவிதன்
யாழ். தாதியக் கல்லூரி