தலை – ஒரு கிழமையில் இரண்டு தடவையாவது தலையைக் கழுவுங்கள் ( முழுகுதல்), சொடுகு, பேன் என்பன தலையில் தொற்றாமல் பாதுகாருங்கள். தனியான சீப்பு, துவாய் என்பவற்றைப் பாவிக்கவும். தலையில் கடி ஏற்படும்போது கை நகங்களாலும், சீப்பினாலும் சொறிவதைத் தவிர்க்கவும். இவற்றுக்கு வைத்திய ஆலோசனை பெறுவது நன்று. சூடான அரப்பு, சீயாக்காய், தேசிக்காய், சூடான வெந்நீர், என்வற்றையும் பாவிப்பதைத் தவிர்க்கவும். Clip, Hairpin என்பவற்றை தலையில் காயம் ஏற்படும் வண்ணம் ஏற்றுவதைத் தவிர்க்கவும்.
கண்கள் – குளிர் நீரில் கழுவுதல் வேண்டும். துடைக்கும் போது சுத்தமான துணியால் துடைக்கவும், மயிர் கொட்டிகள் பெரும் காலத்தில் மிகவும் கவனமெடுக்கவும். பிரச்சினைகள் ஏற்பட்டால் உடன் வைத்திய உதவியை நாடவும்.
முகம் – காரமற்ற சவர்க்காரம்(Soap) போட்டுக் கழுவுவதுடன், முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் நகத்தால் கிள்ளுவதையும், துவாயால் தேய்ப்பதையும் தவிர்க்கவும் சவரத்தின் போது காயம் ஏற்படாமல் தவிர்க்கவும்.
வாய் – காலை, மாலை மெல்லிய தூரிகை கொண்டு பற்பசையால் விளக்கவும். கரி, வெப்பம் குச்சி, பற்பொடி பாவிப்பதை தவிர்க்கவும். உணவு உண்ட பின் வாயை நீருால் நன்றாகக் கழுவவும், ஊசி, குச்சியால் ஈறுகளைக் குத்துவதை தவிர்க்கவும். வெற்றிலை, சுண்ணாம்பு பாவிப்பதை நிறுத்தவும். பல் அழற்சி சூத்தை ஏற்பட்டால் உடன் வைத்திய உதவியை நாடவும். சூடான உணவு தேநீர் என்பவற்றைத் தவிர்க்கவும்.
காது – ஆழமாகச் சுத்தப்படுத்துவதையும், Clip ஊசி என்பன பாவித்துக் கிண்டுவதையும் தவிர்க்கவும், காதடைப்பு, காது வலி ஏற்பட்டால் உடன் வைத்தியரை நாடவும்.
மூக்கு – தினமும் சுத்தமான துணியால் சுத்திகரித்தல் வேண்டும்.
தோல் சுத்தம் – காலை, மாலை (SOap) கொண்டு குளிக்கவும். சுத்தமான ஆடை அணியவும். குளிக்கும் போது நகம் வேறு கடினமான பொருள்களால் தேய்ப்பதைத் தவிர்க்கவும். உள்ளாடைகள் ஒவ்வொரு நாளும் தோய்த்துப் பாவிப்பதுடன் இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். வெயில் காலங்களில் மெல்லிய பருத்தி ஆடைகளும், குளிர் காலங்களில் தடித்த ஆடைகளும் அணியவும்.
பாதங்கள் – முகத்துக்கு கொடுக்கும் முதலிடம் பாத்ததுக்கும் கொடுக்கப்படுதல் வேண்டும். காலை மாலை சவர்க்காரம் போட்டு கழுவவும். ஈரமற்ற நன்றாக காய்ந்த துவாயால் துடைத்த பின் முகப்பவுடர் போடவும். இரவில் பாதங்களுக்கு எண்ணெய் பூசவும், பித்த வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும். பாதத்தை கடினமான இடங்களில் தேய்ப்பதையும், கடிக்கும் போது ஆழமாகச் சொறிவதையும், கால் வலிக்கும் போது அதிக சூடுநீரில் காலை அமுக்குவதையும், சூடான பொருள்களால் ஒத்தடம் கொடுப்பதையும் தவிர்க்கவும். நகங்களை வட்டமாக வெட்டவும். மழை காலங்களில் சிரங்கு ஏற்படாமல் தவிர்க்க நனைந்த கால்களை சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள். பின் துணியால் ஈரமறத் துடைத்தபின் முகப்பவுடர் போடலாம். கால்களுக்கு பாதணிகள் பாவிக்க வேண்டும். கால்களுக்கு பாதணிகள் வாங்கும் போது இறுக்கமான, வெட்டக்கூடிய, தடிப்பான பாதணிகள் வாங்கவேண்டாம், புதுச் செருப்பு கடிக்கும் என்பார்கள். ஆகையால் புதிதாக வாங்கியவற்றைக் கழுவியோ அல்லது உட்புறமாக எண்ணெய் , சவர்க்காரம் என்பவற்றைப் பூசிய பின்போ பாவிக்கலாம். கால்கள் கற்கள் போன்றவற்றால் காயமடையாமல் பாதுகாக்கவும்.
கைகள் – நகங்களை ஒழுங்காக வெட்டவும், சமைக்கும் போது வேறு வேலை செய்யும்போது காயம் ஏற்படாமல் பாதுகாகக்கவும். அதிக சூடான பொருள்களைப் (சூடுநீர், கஞ்சி) பாதுகாப்புட் கையாளவும். வெளியில் சென்று பந்த பின்பும், சாப்பிட முன்பும், மலசல கூடத்தைப் பாவித்த பின்பும், சமைக்க முன்பும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தியாக்க முன்பும், பின்பும் கையை சவர்க்காரம் கொண்டு கழுவவும்.
முதுகு – நன்றாகச் சவர்க்காரம் கொண்டு கழுவவும். சுத்தம் செய்யும் போது மரங்களில் தேய்ப்பது, கடினமான பொருள்களால் தேய்ப்பது என்பவற்றைத் தவிர்க்கவும்.
கழிவிட அயல்பாகம் – ஒவ்வொரு முறையும் கழிவறைக்குப் போன பின்பும் சவர்க்காரம் கொண்டு கழுவுதல் வேண்டும். தோல் வியாதி ஏற்படாமல் பாதுகாத்தல் அவசியம்.
பொதுவாக வியர்வை தங்கும் இடங்களான கால்களின் இடைப் பகுதி (அரை), கமக்கட்டு, மார்பின் கீழ்ப்பகுதி( பெண்கள்) தொப்புள் என்பன சவர்க்காரம் கொண்டு கழுவி காயம் ஏற்படாத வண்ணம் அழுக்கு நீக்கப்பட வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் அடிக்கடி சுத்தமான (Pad) மாற்றி நன்கு கழுவி நலம் பேண வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தமது உடலில் அதிக கவனம் செலுத்துவதுடன் குழந்தைப் பராமரிப்பிலும் சுத்தம் பேண வேண்டும்.
எஸ்.பாலசுந்தரம்
தாதிய பயிற்சி கல்லூரி
யாழ்ப்பாணம்